Sunday, November 5, 2023

மாற்றத்தை விரும்பும் மக்கள்...!

 நல்ல மாற்றத்திற்கான முடிவை எடுத்துவிட்ட ஐந்து மாநில மக்கள்...!

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நாளை தொடங்குகின்றன. வரும் 30ஆம் தேதி வரை இந்த தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநில சட்டப்பேரவையில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இதனால், கடந்த சில நாட்களாக ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள், தீவிர பிரச்சாரம் செய்தனர். மிசோரமை தவிர, மற்ற நான்கு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், நான்கு மாநிலங்களில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. 

மிசோரமில் பாஜக பிரச்சாரம் இல்லை:

மணிப்பூரை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில், பாஜகவிற்கு எதிரான அலை வீசுவதால், அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை. மிசோரம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய முடியாது என்றும், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது என்றும் அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா கூறியதால், அதிர்ச்சி அடைந்த பாஜக தலைவர்கள், மிசோரம் மாநிலத்திற்கு இந்த முறை பிரச்சாரம் மேற்கொள்ள செல்லவே இல்லை. இதன்மூலம், மிசோரம் மாநில மக்கள் பாஜகவிற்கு எதிரான நிலையில் இருப்பது தெரியவருகிறது. அத்துடன், மணிப்பூரில் நடந்த வன்முறையை பாஜக தடுக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டு இருந்து வருவதால், மிசோரமில் பிரச்சாரம் செய்தால், அது தங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பாஜக தலைவர்கள் முடிவு செய்துவிட்டு, மிகப்பெரிய அளவுக்கு பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. இதனால், நாளை நடைபெறும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

சட்டீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ்:


சட்டீஸ்கரில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக நாளை 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தி, அதை நல்ல முறையில் நிறைவேற்றியுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பெற்றுள்ளார். அத்துடன், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும், ஒரு குவிண்டால் நெல் 3 ஆயிரத்து 200க்கு கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட மக்களுக்கு நலன் பயக்கும் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இந்த முறை அளித்துள்ளது. இது சட்டீஸ்கர் மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதனால் சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 

அமலாக்கத்துறை மூலம் மிரட்டல்:

இந்நிலையில், சட்டீஸ்கர் தேர்தல் தோல்வியை தவிர்க்க தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏவி முதலமைச்சர் பூபேஷ் பாகெல் நற்பெயரை கெடுக்க பாஜ சதி செய்வதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாதேவ் ஆப் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடமிருந்து 508 கோடி ரூபாய் பணம் பெற்றதாக தெரிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  மகாதேவ் சூதாட்ட செயலி துபாயிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்திய 450 பேரை சட்டீஸ்கர் அரசு கைது செய்து, 70 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒன்றிய அரசுக்கு அந்த செயலியை முடக்க கோரிக்கை விடுத்தார். ஆனால், அது பற்றி கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இப்போது சிலரை கைது செய்து, பாகெல் மீது கற்பனை புகார் அறிக்கை அளிக்க செய்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல் என்றும், சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தலில் பாஜ தோல்வி உறுதியாகி விட்டது. அதனால், தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறையை ஏவி முதலமைச்சர் பூபேஷ் பாகெலை சுற்றி வளைக்க பாஜ உத்தரவிட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ, ஐ.டி, ஈ.டி ரெய்டுகளை ஏவி விட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பயந்து போய் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள் என்று பாஜக நினைக்கிறது என்றும், ஆனால் காங்கிரஸ் ஒரு போதும் பயப்படாது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுக கார்கே தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெல்லப்போவதை பாஜக பார்க்கத்தான் போகிறது  என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார். 

தோல்வி உறுதியானதால் அச்சம்:

இதேபோன்று, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து, அங்குள்ள காங்கிரஸ்  தலைவர்களை மிரட்டி வருகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெய்லாட், அமலாக்கத்துறை அதிகாரிகளையே லஞ்சம் வாங்கியதாக கூறி கைது செய்த நடவடிக்கை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வியை பாஜக எதிர்நோக்கி இருப்பதாகவே தெரிகிறது. எனவே தான், தனது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் குழப்பி, அரசியல் ஆதாயம் பெற பாஜக பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது மிகப்பெரிய அளவுக்கு அந்த கட்சிக்கு பலன் அளிக்காது என்பது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 

முடிவு எடுத்துவிட்ட மக்கள்:


கடந்த ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில், நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. மத ரீதியாக மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெறுவதை வழக்கமாகி கொண்ட பாஜக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதே பாணியை மீண்டும் கடைப்பிடித்து வருகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், இந்த ஐந்து மாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 

தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்லும் பாஜக தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோரிடம், ஒன்றிய பாஜக ஆட்சியில் அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் ஏன் குறைக்கப்படவில்லை என சாதாரண பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். வேலைவாய்ப்புகள் ஏன் பெருகவில்லை என்று இளைஞர்கள் வினா எழுப்பி வருகிறார்கள். இதேபோன்று, நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ விரும்பும் நிலையில், நீங்கள் ஏன் மதத்தை வைத்து, மக்கள் மத்தியில் பிரச்சினையை உருவாக்கி வருகிறீர்கள் என சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து, ஐந்து மாநில மக்களை சிந்திக்க வைத்துள்ளது. எனவே, இந்த முறை மத ரீதியாக அரசியல் லாபம் பெற பாஜக செய்யும் முயற்சிகள் நிச்சயம் பலன் அளிக்காது என உறுதிப்பட கூறலாம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில மக்கள் நல்ல மாற்றத்திற்கான முடிவு எடுத்துவிட்டதால், இந்த ஐந்து மாநிலங்களிலும் மக்கள் விரும்பும் அரசுகள் அமையும் என உறுதியாக கூறலாம். தேர்தல்கள் முடிந்து டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில், நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அந்த மாற்றம், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: