என்னத்த சொல்ல....!
சென்னை அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி (எம்.எல்.ஏ. ஹாஸ்டல்) வளாகத்தில் இருக்கும் அந்த தனியார் உணவகத்தில் இன்று பிற்பகல் உணவை சாப்பிட்டேன்.
மீன் குழம்பு சாப்பாடு.
ஓஹோ அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சுவையாகதான் இருந்தது.
என் எதிரில் ஒரு இளம் பெண் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
சாப்பாடு முடிந்ததும், கடைசியாக மோர் அருந்த முடிவு செய்து அதை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தேன்.
அப்போது என் எதிரில் இருந்த அந்த இரண்டு இளம் பெண்களும் என்னை ஒரு மாதிரியாக பார்த்து லேசாக சிரித்தார்கள்.
நானும் புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டே மோரை அருந்தினேன்.
அப்போது எதிர்முனையில் இருந்த இளம் பெண்களில் ஒருவர், மோர் இருக்கும் பாத்திரத்தில் ஈ இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா என என்னைப் பார்த்து கேட்டார்.
உடனே மோர் குடிப்பதை நிறுத்திவிட்டு பாத்திரத்தைப் பார்த்தால் அதில் இறந்த ஈ ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
எனக்கு தூக்கிவாரிப் போட்ட மாதிரி இருந்தது.
உணவக ஊழியரை லேசாக கடிந்து கொண்டு பாத்திரத்தில் இருந்த மோரை கொட்டிவிடும் கேட்டுக்கொண்டேன்.
பிறகு எதிரில் இருந்த அந்த இளம் பெண்களிடம் ஈ மிதக்கும் விஷயத்தை முதலிலேயே சொல்லி இருக்கக்கூடாதா என கேட்டேன்.
அதற்கு
பாத்திரத்தில் ஈ இருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள் என நினைத்து விட்டோம் என இருவரும் கூலாக பதில் அளித்து சிரித்து கொண்டார்கள்.
பிற துன்பத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி.
என்னத்த சொல்ல...!
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment