குறுகிய தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்…!
உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே
தற்போது இந்த பழக்கம் இருந்து வருகிறது. அதாவது,
சிறிய தூக்கம் என்ற பழக்கத்திற்கு அவர்கள் ஆளாகியுள்ளார்கள். வாழ்க்கையில் அனைத்து
வசதிகளையும் பெற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை கொண்டு, இயங்கி வரும் மனிதன், தன்னுடையே,
உடல் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல்வேறு நிலைகளில்
உடல்நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு
மனிதன் தள்ளப்படுகிறான். இத்தகையை நிலையில் இருந்து மீண்டு வர மனிதன் தன்னுடையே பழக்க
வழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதன்மூலம், தனது உடல்
ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறுகிய தூக்கம் ஆபத்து:
ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு
சுமார் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். அது அவசியம் மட்டுமல்ல கட்டாயமும் கூட.
ஏக இறைவன் மனிதனுக்கு கொடுத்துள்ள பல வரங்களில் தூக்கமும் ஒன்றாகும். அழகிய ஆழ்ந்த
உறக்கம், மனிதனுக்கு உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். அத்துடன் சிறப்பான தூக்கம்
மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பணிகளில் ஈடுபட ஆர்வத்தை கொடுக்கும். இந்த உண்மையை தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ளவில்லை.
அதனால், தங்கள் வழக்கம் போல தூங்குவதை பழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். அது ஆபத்தை விளைவிக்கும்
என்பதை அவர்கள் சிறிதும் உணர்ந்துகொள்ளவில்லை என்றே கூறலாம். குறுகிய தூக்கம் போட்டு,
மீண்டும் பணியில் ஈடுபடுவது சரியான அணுகுமுறை இல்லை. ஆரோக்கியமான உணவு எப்படி உடல்நலத்திற்கு
முக்கியமாக உள்ளதோ, அதுபோன்று, ஆரோக்கியமான தூக்கமும் மிகமிக அவசியம். தூக்கம் விவகாரத்தில்
யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அப்படி அலட்சியமாக இருந்தால், பின்னர் மிகப்பெரிய
பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆய்வில் தகவல்:
ஆஸ்திரேலியாவில் தூக்கம் குறித்து
நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, குறுகிய தூக்கம், பகல்நேரத் தூக்கம்,
ஷிப்ட் வேலை மற்றும் நீண்ட தூக்கம் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை
ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு விவரங்களில், வயது, பாலினம்
மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), சர்க்காடியன் ரிதம்-சீர்குலைக்கும் நடத்தைகள்,
ஷிப்ட் வேலை உட்பட, இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருப்பதை
நிரூபிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சமரசம் செய்யப்பட்ட தூக்க ஆரோக்கியம் அல்லது இரவு ஷிப்ட் வேலை ஆண்களுக்கும்
பெண்களுக்கும் மற்றும் அனைத்து வயதினருக்கும் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது” என்பதை தாங்கள் கண்டறிந்ததாக
மெல்போர்னில் உள்ள பேக்கர் ஹார்ட் மற்றும் நீரிழிவு நிறுவனத்தின் இணை பேராசிரியர் மோராக்
யங் கூறியுள்ளார். சர்க்காடியன் தாளங்கள் ஒத்திசைவு இல்லாமல் இருப்பது இரத்த அழுத்தத்தில்
எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றும் யங் மேலும் தெரிவித்துள்ளார்.
தூக்கம் மிகமிக அவசியம்:
ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நிரந்தர இரவு ஷிப்ட் தொழிலாளர்கள்
மிகவும் ஆபத்தில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கலப்பு ஷிப்டுகளில்
வேலை செய்பவர்களும் உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் காட்டியுள்ளனர். சுவாரஸ்யமாக, அதிக
நேரம் தூங்குவது சர்க்காடியன் தாளங்களில் இடையூறு விளைவிக்கும் விளைவைக் கொண்டிருந்தது,
யங் கூறியுள்ளார்.
"ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க ஏழு மணிநேர தூக்கம் உகந்த தூக்கம்
என்று கண்டறியப்பட்டது,"என்றும் யங் தெரிவித்துள்ளார். "பெரியவர்களுக்கு மிகக் குறைந்த தூக்கம் (ஏழு
மணி நேரத்திற்கும் குறைவானது) மற்றும் அதிக தூக்கம் (ஏழு மணிநேரத்திற்கு மேல்) எதிர்மறையான
தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நிரந்தர இரவு ஷிப்ட் பணியாளர்கள் இரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய உயர்வைக்
காட்டினர், ஆனால் சுழலும் ஷிப்டுகளில் பணிபுரியும் நபர்களும் உயர்ந்த நிலைகளைக் காட்டினர்,
இருப்பினும் நிரந்தர இரவு ஷிப்ட் தொழிலாளர்களைப் போல குறிப்பிடத்தக்கதாக இல்லை. "குறுகிய
தூக்கம் மற்றும் ஷிப்ட் வேலை இரத்த அழுத்தத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது
என்பதையும் தங்கள் தரவு காட்டுகிறது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை தந்த வரம்:
உடலின் சர்க்காடியன் கடிகாரம் மனித உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாடு, அறிவாற்றல்,
இதய துடிப்பு மற்றும் தூக்கத்தில் விழித்திருக்கும் நடத்தை உட்பட கிட்டத்தட்ட அனைத்து
செயல்முறைகளையும் நிர்வகிக்கிறது. உடலின் இயல்பான உயிரியல் தாளங்களில் ஏற்படும் இடையூறுகள்
உடலை ஒத்திசைக்காமல் விட்டு, சர்க்காடியன் திரிபுகளை உருவாக்கி, எதிர்மறையான விளைவுகளை
ஏற்படுத்தலாம். "தினசரி ஒளி-இருண்ட சுழற்சிகள், உணவு உட்கொள்ளல் மற்றும் ஷிப்ட்
வேலை போன்ற பாரம்பரியமற்ற நடத்தை மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் தூண்டப்படும் செயல்பாட்டு
குறிப்புகள் ஆகியவற்றிற்கான எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் சவால்கள், முறையான மற்றும்
செல்லுலார் மட்டத்தில் சாதாரண உயிரியல் தாளங்களின் பராமரிப்பை மோசமாக பாதிக்கலாம் என்று
யங் எச்சரித்துள்ளார்.
எனவே, குறுகிய தூக்கம் அல்லது எப்போது பார்த்தாலும் தூக்கம் என்ற பழக்கங்களை நாம்
விட்டுவிட வேண்டும். இயற்கை தந்த அழகிய வரத்தை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக்
கொண்டு, தூக்கம் விவகாரத்தில் மனிதர்கள் செயல்பட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. என்ன, தூக்கம் தொடர்பான
விவகாரத்தில் இனி சரியான அணுகுமுறையை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தயாராகி
விடுவோமா?
-
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment