Saturday, February 3, 2024

உங்களால் முடியும்...!

நம்புங்கள்....!  உங்களால் முடியும்...!!


காலம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேகமான கால ஓட்டத்தின் காரணமாக, இளமையும் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறது. நாம் நினைக்கும் எண்ணங்கள், செயல்கள், திட்டங்கள், தீர்மானங்கள், ஆசைகள் இவை யாரும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக நம்மில் பலர் கவலை அடைந்து விடுகிறார்கள். தங்களுடைய ஆசைகள் நிறைவேறவில்லையே, தங்களுடைய கனவுகள் பலிக்கவில்லையே என கவலை அடைந்து விடுகிறார்கள். இந்த கவலை, அவர்களை வீட்டிலேயே முடங்கி வைத்து விடுகிறது. மேலும், உற்சாகமாக பணியாற்ற வைப்பதில் இருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது. நமக்கு வயது ஆகிவிட்டது. இனிமேல் நாம் எதுவும் செய்ய முடியாது. வாழ்க்கையில் சாதிக்க நமக்கு தேம்பு இல்லை. இப்படி பலர் நினைத்துவிடுகிறார்கள். இந்த எண்ணமே அவர்களை திரும்ப திரும்ப ஆட்டிப் படைத்து, உற்சாகமாக செயல்படுவதில் இருந்து தடுத்து விடுகிறது. இதன் காரணமாக, நம்பில் பலர் தங்களுடைய, நல்ல திட்டங்களை, கனவுகளை நிறைவேற்றாமல் முதுமையை கொடூரமாக அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

முதுமை ஒரு அழகிய வரம்:  

நாற்பது வயதை தாண்டிவிட்டவர்கள், மனதளவில் முதுமையை உணர ஆரம்பித்து விடுகிறார்கள். பொதுவாக நாற்பது வயதை எட்டியவர்களிடம் பேசினால், அவர்களிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதை நாம் காண முடியும். இந்த பண்புகளே அவர்களை மேலும் செயல்படுவதில் இருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது. இளமை எப்படி ஒரு அழகிய வரமோ, அதுபோன்று முதுமையும் ஒரு நல்ல அழகிய வரமாகும். இளமை, முதுமை ஆகிய இரண்டையும் நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த இரண்டு பருவங்களிலும் நாம் உற்சாகமாக செயல்பட முடியும். மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

இளமைப் பருவத்தில் சரியான வழிக்காட்டுதல்கள் இல்லாமல், பலர் தங்களது நேரங்களை வீணாக்கிவிடுகிறார்கள் என்பது உண்மையாகும். இளமையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஆலோசனைகளுடன் வழிக்காட்டுதல்கள் மிகவும் அவசியமாகும். அப்படி இருந்தால், ஒருவரின் வாழ்க்கையில் அவர் நினைத்தப்படி, சாதனைகளை செய்ய முடியும். அவர் நினைத்த வாழ்க்கையை பெற முடியும். குறிப்பிட்ட துறையில் சாதிக்க முடியும். விஞ்ஞானியாகவோ, பொருளாதார நிபுணராகவோ இப்படி பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த முறையில் பயணிக்க முடியும். ஆனால், இளமையை தவற விட்டவர்கள், முதுமையிலும் சரியான திட்டமிடல் மூலம் தாங்கள் நினைத்த துறையில் நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில் முதுமையை எட்டியவர்கள் அனைவரும், தங்களுக்கு முதுமை வந்துவிட்டதே என்று நினைப்பதை நிறுத்திவிட்டு, முதுமை என்பது ஒரு அழகிய வரம் என நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். முதுமை சாபம் இல்லை என்பதை மனதில் உறுதியாக நினைத்து, முதுமையை அனுபவிக்க வேண்டும். இப்படி செயல்பட்டால், நிச்சயம் முதுமையிலும் ஒருவர் சாதிக்க முடியும். 

முதுமையில் சாதித்தவர்கள்:


முதுமையை கண்டு வீட்டில் முடங்கி விடாமல், அதை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் சாதித்தவர்கள் உலகில் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் கூட, 40 வயதுக்கு மேல், தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய பலர், மிகப்பெரிய அளவுக்கு சாதித்து இருக்கிறார்கள். ஔவையாரை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மக்களை நல்வழிப்படுத்த அவர் அருமையான நூல்களை எழுதி இருக்கிறார். இந்த நூல்கள் அனைத்தும் அவருடைய முதுமைக் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதேபோன்று, இளமையில் பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகள் காரணமாக கல்வியை தவற விட்டவர்கள், தங்களுடைய கல்வி ஆர்வத்தை முதுமையில் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம், கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், செப்பாட் கிராமத்தைச் சேர்ந்த 96 வயது காத்தியாயினி அம்மாளை குறிப்பிடலாம். அனைவருக்கும் கல்வியறிவு என்ற திட்டத்தில் சேர்ந்த காத்தியாயினி அம்மாள், தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தார். 

கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபித்து மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தவர்கள், இன்று புகழ்பெற்ற வழக்கறிஞர்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர் என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

பெண்களில் கூட முதிய வயதில் சாதித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. குடும்பத்தைக் கவனத்திக் கொண்டு, தங்களுடைய கனவு திட்டங்களை நிறைவேற்ற அவர்கள், சரியான முறையில் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எட்டி இருக்கிறார்கள். 

ஆர்வம் மிகவும் அவசியம்:

முதுமையில் சாதிக்க ஒருவரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம், ஆர்வம் மட்டுமே. அத்துடன், தம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நிச்சயம் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், தடைகளை உடைத்து நிச்சயம் முதுமையில் ஒருவர்,  தான் நினைத்தப்படி எதையும் சாதிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற முதியவர், தனது 72வது வயதில், இந்தோனேஷியாவில் நடந்த தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். இளம் வயதில் பல்வேறு சூழ்நிலைகளில் முடியாமல் போன தனது கனவுகளை, ஆசைகளை முதுமையில் அவர் நிறைவேற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  வாட்டிய முதுமையையும், உடல்நிலை பாதிப்புகளையும் ஓரம்கட்டிவிட்டு, இவர் சாதனை புரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாற்பது வயதை எட்டிவிட்டவர்கள், கலைப்பட்டு, பயம் அடைந்து, சோம்பல்பட்டு, இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள். உண்மையில் முதுமை என்பது வயதில் இல்லை. அது மனதில் தான் உண்டு என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். எந்தவொரு துறையிலும் நாம் சாதிக்க வேண்டுமானால், அதற்கு நம்மிடையே நல்ல உயர்ந்த ஆர்வம் இருப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன், சோம்பல் குணத்தை விட்டுவிட்டு, எப்போதும் உற்சாகமாக செயல்படும் வகையில் நாம் நமது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சரியான திட்டமிடலுடன் இயங்கினால் நிச்சயம் வாழ்க்கையில் ஒருவர் சாதிக்க முடியும். 

தன்னம்பிக்கை முக்கியம்:


உலகில் சாதித்தவர்கள், பல்வேறு துறைகளில் வென்று வரலாறு படைத்தவர்களின், வரலாற்றை நாம் படித்தால், அவர்களில் இளமையில் சாதித்ததை விட, முதுமையில் சாதித்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் என்பதை காண முடியும். முதுமையில் சாதிக்க ஒருவக்கு மிகவும் அவசியமான பண்பு மற்றும் குணம், தன்னம்பிக்கையாகும். ஒருவரிடம் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால், அது அவரை உற்சாகமாக பணியாற்ற வைத்துவிடும். கல்வி, அறிவியல் என எந்த துறையாக இருந்தாலும், அதில் சாதிக்க முழு ஈடுபாடுடன் ஒருவர் செயல்பட வேண்டும். ஏனோ தானோ என்ற வகையில் செயல்பட்டால், நிச்சயம் எதையும் சாதிக்க முடியாது. 


தன்னம்பிக்கையுடன், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நமது பணிகளில் இறங்கினால், நிச்சயம் காரியங்கள் வெற்றி பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்திய முஸ்லிம் அறிஞர்களில் பலர் இன்னும் தங்களது முழுமையை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் பட்டியலை எழுதினால் அது நீண்ட பட்டியலாக வரும்.  

முதுமையில் சிறப்பாக செயல்பட்டு, சமுதாய நலனுக்காக ஒவ்வொரு நாளும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை இங்கு நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 80 வயதை நெருங்கிவிட்ட காதர் மொகிதீன், இன்னும் தன்னுடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டு, நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டு, செயல்பட்டு வருவதை கண்டு பல நேரங்களில் நாம் வியப்பு அடைந்து இருக்கிறோம். அவரிடம் பேசும்போது, எப்போதும் நேர்மறையான சிந்தனைகள் மட்டுமே இருக்கும். எதிர்மறையான பேச்சுகளை காண முடியாது. கல்வி, எழுத்து, அரசியல், தத்துவம், வரலாறு என எந்த துறையாக இருந்தாலும், மிகச் சிறந்த அறிவாற்றலுடன் அவர் இருப்பதை காண முடியும்.  இதற்கு முக்கிய காரணம், ஏக இறைவன் தந்த வாழ்க்கையை, முதுமையிலும் மிகச் சரியான முறையில் சிறப்பாக பயன்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணமேயாகும்.  

நிச்சயம்..உங்களால் முடியும்:

முதுமை, முதுமை என கூறிக் கொண்டே இனி வீட்டில் முடங்கி கிடக்காமல், நிச்சயம் சாதிக்க முடியும் என நினைத்து இனி உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள். சரியான திட்டமிட்டு, உங்கள் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க ஆரம்பிங்கள். உங்கள் உடல்நிலை ஒத்துழைக்கும் வகையில் பணிகளை அமைத்துகொள்ளுங்கள். அரபி, உர்தூ, தமிழ், ஆங்கிலம் என ஒவ்வொரு மொழிகளையும் கற்றுக் கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். மொழிகளை கற்க முதுமை ஒரு தடையாக இருக்காது. அதற்கு முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு அழகிய மொழியை நாம் கற்றுக் கொள்ள முடியும். உங்கள் குடும்பதை நேசியுங்கள். மனித சமுதாயத்தின் மீது அன்பு செலுத்துங்கள். கடைசியாக, நம்புங்கள்., நிச்சயம் உங்களால் முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


No comments: