இணையதளத்திற்கு அடிமையாகும் இளைஞர் சமுதாயம் – அதிகரிக்கும் பாதிப்புகள்..!
ஏக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஏராளமான அருட்கொடைகள் மூலம், நவீன உலகில் நாள்தோறும் புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், மனித சமுதாயத்திற்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதை, தவறான முறையில் கையாண்டால், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகளை மனித சமுதாயம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையில் தற்போது இணையதளம் மற்றும் செல்பேசிகள் மனித இனத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.
உலக நாடுகள் அனைத்திலும், இணையதளம் இல்லாத அலுவலகங்கள், வீடுகள் இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செல்பேசிகள், மனித சமுதாயத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு கருவியாக இருந்து வருகிறது என்பது உண்மையாகும். அதேநேரத்தில், இந்த நவீன விஞ்ஞான கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இளைஞர்களின் இணைய அடிமைத்தனம்:
இணையதளம் மற்றும் செல்பேசி பயன்பாடு குறித்து இந்தியாவில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற இளைஞர்களில் பெரும்பாலோர் நீண்ட நேரம் இணையத்தில் தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இதன் காரணமாக, படிப்பு மற்றும் பணிகளில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்று சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டின் 19 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட 50 ஆய்வுகளில், ஒரு தொழில்நுட்ப மதிப்பாய்வு, கல்லூரி மாணவர்களில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் பேர் இணையதளத்திற்கு அடிமையாகும் அபாயத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களைப் பெற்ற இளைஞர்கள், இணையதள அடிமைகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என்று இந்தியாவின் முதல் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளாக இருந்தபோது பல அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு ஆளாகியிருந்தால், இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.
ஆய்வில் தகவல்கள்:
டெல்லி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியை நவ சரஸ்வதி தலைமையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இணைய அடிமைத்தனம், குழந்தைப் பருவத்தில் மது துஷ்பிரயோகம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், வன்முறை, மனநோய், கொடுமைப்படுத்துதல், பெற்றோரின் மரணம் அல்லது மண முறிவு, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற துன்பகரமான நிகழ்வுகளுக்கு இடையே உள்ள சாத்தியமான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, மேலே குறிப்பிட்ட இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படுத்தாத இளைஞர்களிடையே 52 சதவிகிதம் இணைய அடிமைத்தனம் இருப்பதாகவும், ஒன்று முதல் மூன்று அனுபவங்களுக்கு ஆளானவர்களில் 61 சதவிகிதம் என்றும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களைக் கொண்டவர்களில் 80 சதவிகிதம் என்றும் தெரியவந்துள்ளது.
மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு குறித்த தகவல்களில், துன்பகரமான நிகழ்வுகளுக்கு அதிக வெளிப்பாடு, இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் போக்கு:
18 முதல் 25 வயதுக்குட்பட்ட 285 பேர் மத்தியில், இணைய பயன்பாட்டுப் பழக்கம் மற்றும் குழந்தைப் பருவ அனுபவங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், இந்த ஆய்வில், 80 பேருக்கு குழந்தைப் பருவத்தில் பாதகமான அனுபவங்கள் இல்லை என்றும் 169 பேருக்கு ஒன்று முதல் மூன்று பாதகமான அனுபவங்கள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. 36 பேருக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்கள் இருந்தன. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களை குழந்தை பருவத்தில் வெளிப்படுத்தும் இளைஞர்கள், அத்தகைய பாதகமான வெளிப்பாடு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, 3 புள்ளி 8 மடங்கு அதிகமான இணைய அடிமையாதல் அபாயத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட அனுபவத்தைத் தவிர, ஒற்றை அனுபவங்களின் வெளிப்பாடு ஆபத்தை அதிகரிக்கவில்லை என்றும், குழந்தை பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் 1 புள்ள 9 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீர்குலைக்கும் படிப்பு:
"இன்டர்நெட் தளங்களுக்கு அடிமையாதல் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பரவலாக உள்ளது என்றும் இது, படிப்பு அல்லது பணிகளை சீர்குலைப்பதை தாங்கள் கண்டதாக கூறியுள்ள ஆய்வாளர்கள், மேலும் இது சமூக தனிமைப்படுத்தலுக்கு பங்களிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். சிலருக்கு, இன்டர்நெட் அவர்களின் நிஜ உலக கவலைகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், ஆனால் சமூக கவலை அல்லது குறைந்த சுயமரியாதை உள்ள பலர் இணையத்தில் அதிக நேரம் அடிமையாக வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.
பிற நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், இணைய அடிமைத்தனம் மரபணு முன்கணிப்பு முதல் சமூக மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் வரையிலான காரணிகளின் விளைவாக மக்களை இணைய தளங்களுக்குத் தூண்டுகிறது என தெரியவந்துள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டும்:
ஒரு
மனிதனின் குழந்தைப் பருவம் மிகச் சரியான முறையில் அமைந்தால், அவனுடைய கவனம் சிதறாமல்,
சரியான திசையில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல
முயற்சிகள் மேற்கொள்ள ஆர்வம் பிறக்கும். எனவேதான், குழந்தைகளை சரியான முறையில் பெற்றோர்கள்
பராமரித்து வளர்க்க வேண்டும் என மனநல மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும்,
பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், அதன்மூலம் குழந்தைகளின் வளர்ப்பு
சரியான திசையை நோக்கிச் செல்லும் என்றும் மனநல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
எனவே, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணையதளத்தில் அடிமையாகும் போக்கை தடுக்க நினைக்கும்
பெற்றோர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் வளர்ப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை
மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment