ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது வேதனை அறிக்கிறது...!
அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்...!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர்
சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் பேச்சு.....!!
மலப்புரம், பிப்.05- உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் கேரள மாநில சமஸ்தா சுன்னி மாணவர் கூட்டமைப்பின் 35வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில், இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பனக்காடு சையத் சாதி அலி ஷிஹாப் தங்ஙள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு:
அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும், தங்களுடைய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபட உரிமை உண்டு என்று அவர் கூறினார். குறிப்பிட்ட ஒரு மத வழிப்பாட்டுத் தலத்தில் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வழிபாடு செய்ய உரிமை உண்டு என இந்திய சட்டம் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும், ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய மதத்தின்படி வழிபட உரிமை அளித்துள்ளதாக தங்ஙள் தெரிவித்தார். இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத் தலத்தில் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் வழிப்பட உரிமை இல்லை என குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக, கடந்த 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
முஸ்லிம்கள் வேதனை:
அந்த சட்டத்தின்படி, கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல், வழிப்பாட்டுத் தலங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்ததோ, அதுபோன்று, இனி இருக்கும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சட்டம் வளைந்து போய்க் கொண்டே இருக்கிறது என்றும், வரம்பு மீறி செயல்படுபவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தங்ஙள் வேதனை தெரிவித்தார். இத்தகைய சட்டத்திற்கு மாறான நடவடிக்கைகளை சிறுபான்மையின மக்களை வேதனை அடையச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
குறிவைத்து நடவடிக்கைகள்:
ஒன்றிய பாஜக அரசின் உதவியுடன் நாட்டில் உள்ள பல மசூதியை கைப்பற்ற தற்போது நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறுபான்மையின மக்களை குறிவைத்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இத்தகைய கோரிக்கைகளை அரசு கண்டும் காணாமல் இருப்பதாக கூறிய தங்ஙள், அதனை ஊக்குவித்து வருவதை சிறுபான்மையின மக்களின் இதயங்களை வேதனை அடையச் செய்வதாகவும் கூறினார்.
இ.யூ.முஸ்லிம் லீக் நடவடிக்கை:
இத்தகைய பாசிச போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக,அதேபோன்ற பாசிச நடவடிக்கைகள் எடுப்பது சரியல்ல என்றும், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதிப்ட தெரிவித்தார்.
இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய கேரள மாநில ஜமத்துல் உலமா தலைவர் சையத் முஹம்மது ஜப்பரி, வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து வழிப்பாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விழாவில் கேரள மாநில சமஸ்தா சுன்னி மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கே.அலிகுட்டி முசலியார், இ,யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி, பனக்காடு சையத் ஹமீது அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment