ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு
பழங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள்…!
அனைத்து வகையான பொருட்களும்
கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் எனப்படும் சந்தைக்கு நாம் சென்றால், அங்குள்ள பழச்சந்தைப்
பிரிவுக்கு செல்லாமல் இருப்பது இல்லை. காரணம், விதவிதமான அழகிய பழங்களைப் பார்க்கும்போதும்,
அவற்றை அவசியம் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு பிடிக்கும். அதன் காரணமாக, பழங்களை
கட்டாயம் வாங்க, பழச்சந்தைப் பிரிவுக்கு சென்று, அங்கு குவிந்த கிடக்கும் பழங்களை பார்ப்பது
ஒருவரின் வழக்கமாக இருக்கும். இயற்கை மனித சமுதாயத்திற்கு வாரி வழங்கியுள்ள ஏராளமான
அருட்கொடைகளில் பழங்களும் ஒன்றாகும். மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒவ்வொரு பழங்கள் மூலம்
நல்ல சக்தி கிடைக்கிறது. எனவே தான், நமது உணவில் நாள்தோறும் பழங்களை சேர்த்துக் கொள்ள
வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பழங்களுக்கு பருவங்கள்:
எல்லா பழக்கடைகளிலும் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான திராட்சைகள் ஒரே மாதிரியாக
இருந்தாலும், அதன் சுவையில் வேறுபாடு இருக்கும். இதேபோன்று, ஆப்பிள்கள் மிகவும் அரிதானவை.
ஆண்டு முழுவதும் மழை பெய்யாததுபோல, ஆண்டு முழுவதும் வெப்பம் இல்லாதது போல, ஆண்டு முழுவதும்
குளிர் காலம் இருக்காது. அதேபோல, ஒரு வகையான பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்காது. பழங்களுக்கும்
பருவங்கள் உண்டு.
இது, நான்கு அல்லது
ஆறு மாதங்களுக்குப் பிறகு மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை நம் ஆரோக்கியம், வாழ்க்கை
முறை மற்றும் உடைகளை பாதிக்கிறது. அதுபோலவே, மனிதர்களின் ஆரோக்கியத்திற்காகப் பருவத்திற்கு
ஏற்ப ஆரோக்கியமான பழங்களை ஏக இறைவன் படைத்துள்ளான். பருவத்திற்கு ஏற்ப நமக்கு தேவையான
சத்தான சத்துக்களை பழங்கள் வழங்குகின்றன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் ஆரோக்கியமாக
இருக்க முடியும்.
உணவில் பழங்கள்:
ஒவ்வொரு பருவத்திற்கும் அதன் சொந்த குணாதிசயங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும்
அதன் சொந்த சுவையான மற்றும் ஜூசி பழங்கள் உள்ளன. அவை மனிதனின் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன.
கடுமையான, வெப்பமான அல்லது குளிர்ந்த காலநிலையில் உடலுக்கு கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகின்றன.
பருவகால பழங்கள் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குவதிலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை
வழங்குவதிலும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை.
குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலங்களில் இந்த பருவகால பழங்களை நம் உணவின் ஒரு
பகுதியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் இந்த காலநிலையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.
மேலும் சில பிரத்யேக கோடைகால பழங்கள் உடலை குளிர்விக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும்
உதவுகிறது. இந்தப் பழங்களை நாம் உணவில் ஒரு அங்கமாக்க வேண்டும்.
பழங்களின் வடிவம், சுவை, அளவு, நிறம், ஆகியவை வித்தியாசமாக இருக்கும். அவை நம்
உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது நமக்கு பலத்தையும்
சக்தியையும் தருகிறது. அதேநேரத்தில், அவை நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும்
தருகின்றன.
திராட்சையின் பலன்கள்:
எந்த பழங்கள் எந்த ஊட்டச்சத்துக்களைத் தருகின்றன? அதில் என்ன வகையான ஆற்றல் உள்ளது?
என்பதை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக, திராட்சையை எடுத்துக் கொண்டால்,
அதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதை நாம் அறிய முடிகிறது. ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல்
நிறைந்த பொக்கிஷங்கள் திராட்சையில் உள்ளன. இரும்பு, தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற
பிற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. தாமிரம் மற்றும் மாங்கனீசு உடலில் உள்ள இரத்த
சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
அதேநேரத்தில், திராட்சையை உற்பத்தி செய்யும்போது இரும்புச்சத்து இன்னும் அதிகரிக்கிறது.
நூறு கிராம் புதிய திராட்சையில் சுமார் 91 மில்லிகிராம் எலக்ட்ரோலைட் பொட்டாசியம் உள்ளது.
இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும்
நன்மை பயக்கும். கூடுதலாக, அவை வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, கரோட்டின்கள்
மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான பைரிடாக்சின், பாலிஃபீனாலிக் ஆக்ஸிஜனேற்றிகள்,
ரிபோஃப்ளேவோன் மற்றும் தியாமின் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, திராட்சையை தொடர்ந்து
உணவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.
ஆப்பிள்:
இதேபோன்று, ஆப்பிள் பழமும்
உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது என்பதை
நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அப்பிளை அப்படியே சாப்பிட்டாலும், அதை ஜுசாக்கி
சாப்பிட்டாலும் பலன்கள் உண்டு. குறிப்பாக, உடல் எடையை குறைக்க ஆப்பிள் மிகவும் பயன்
அளிக்கிறது. நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள்
மிகவும் வல்லவையாக உள்ளன. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன. ஆப்பிளில் உள்ள
கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.
ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. சராசரியாக ஒரு ஆப்பிளில்
5 கிராம் நார்ச்சத்து உள்ளது. பெக்டின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் வயிற்றுப்போக்கில்
இருந்து விடுபட உதவுகிறது. மேலும் பெக்டின் கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது. எனவே,
நமது உணவில் தினமும் ஆப்பிளை சேர்த்துக் கொள்வது, நமக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
செவ்வாழை:
ஏக இறைவன் வழங்கிய அருட்கொடைகளில்
ஒன்று வாழைப்பழமாகும். வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழமாக செவ்வாழை இருந்து
வருகிறது. இதில் அதிகளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்த்து, பொட்டாசியம்,
பீட்டா கரோட்டின் என எண்ணற்ற அனைத்து சத்துக்களும் உள்ளன. இது நமது உடலுக்கு தேவையான
சத்துக்களை நமக்கு தருகின்றன. மாலை கண் நோய் முதல் மலட்டு தன்மை பிரச்சினை உள்ளவர்கள்
அதற்கு தீர்வு காண தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்
என சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
செவ்வாழையில் மூளையின் செயல்பாடு,
இதயத்தின் செயல்பாடு, இரத்த ஓட்டம், இரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின்
இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளன. நாம்
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஒவ்வொரு பழத்திற்கும், தனித்துவமான வேதிப்பொருள்கள் இருப்பதைப்
போல, உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக செவ்வாழைப் பழம் இருந்து வருகிறது. நரம்பு தளர்ச்சி
ஏற்பட்டால், உடலில் பலம் குறையும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்,
நாள்தோறும், ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலம் பெறும் என்பது இயற்கை
மருத்துவர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
பழங்களை பயன்படுத்துவோம்:
ஏக இறைவன் தந்துள்ள அனைத்து
வகையான பழங்களிலும், ஒவ்வொரு வகையில் பலன்கள் குவிந்து கிடக்கின்றன. நல்ல ஆரோக்கியமான,
சக்தியுடன் நாம் வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டுமானால், நமது உணவில் அவசியம் பழங்களை
சேர்த்துக் கொள்ள வேண்டும். பருவத்திற்கு ஏற்ப கிடைக்கும் பழங்களை வாங்கி அந்த பருவங்களில்,
அவற்றை சாப்பிடுவதன் மூலம், நமது உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும் என்பதை ஒருபோதும்
மறந்துவிடக் கூடாது. வெயில், குளிர், மழை என அனைத்துப் பருவங்களிலும் கிடைக்கும் பழங்களை
தேடி தேடி வாங்கி சாப்பிடுவதை நாம் வழக்கமாக கொள்ள வேண்டும். அதை பழக்கமாக மாற்றிக்
கொள்ள வேண்டும். நவீன உணவுப் பழக்கத்தில் இருந்து விலகி, இயற்கை நமக்கு தந்துள்ள ஆரோக்கியமான
உணவுப் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால், நிச்சயம் நமது உடலும், மனமும் நல்ல ஆரோக்கியத்துடன்
இருக்கும். அதன்மூலம், நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். இந்த கட்டுரையை
படிக்கும் நீங்கள், இன்று நிச்சயம் உங்கள்
உணவில் ஒரு பழத்தை எடுத்துக் கொள்வீர்கள் என்பதை அறிய முடிகிறது. நான் சொல்வது சரிதானே….!
-
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
No comments:
Post a Comment