Wednesday, August 9, 2023

பாத்திமா முசபர் சிறப்பு நேர்காணல்....!

    இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்              முழுமையாக  பாதுகாக்கப்பட்டுள்ளன....!      

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர்     அணி தேசியத் தலைவி  ஏ.எஸ்.பாத்திமா       முசபர்  பெருமிதம்....!!

சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் படித்து சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசியத் தலைவி ஏ.எஸ்.பாத்திமா முசபருக்கு எம்.ஏ. இசுலாமியவியல்  (M.A. Islamic Studies) படிப்பில் பலரும் வியக்கும் வகையில் சிறப்பாக படித்து முதலிடம் பிடித்து சாதனை புரிந்ததற்காக கலையியல் நிறைஞர் பட்டம் வழங்கப்பட்டது.  பல்வேறு கடும் நெருக்கடியான பணிகளுக்கு இடையேயும், கல்வியில் ஆர்வம் கொண்டு, இஸ்லாமிய உணர்வுடன் படித்து சாதனை புரிந்த பாத்திமா முசபர், மணிச்சுடர் நாளிதழக்காக அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்....

பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பம்:

எங்களுடைய குடும்பம் இஸ்லாமிய பாரம்பரியத்துடன் கூடிய ஓர் அழகான குடும்பம். என்னுடைய பாட்டனார்  அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) நாடாறிந்த இஸ்லாமிய அறிஞராக இருந்து,  ஏக இறைவனின் திருவாக்கான  திருக்குர்ஆனை தமிழில் முதன்முதலாக மொழி பெயர்த்தவர். இந்த மொழி பெயர்ப்பு பணியில் துணையாக இருந்த இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் ஸமது-வின் புதல்விதான் இந்த பாத்திமா முசபர். என்னுடைய தந்தை சிராஜுல் மில்லத், தன்னுடைய அரசியல் மற்றும் சமுதாயப் பணிகளுக்கு இடையே தனது 35-வது வயதில் எம்.ஏ.வரலாறு (ஹானர்ஸ்) படித்து, கல்வி மீது தனக்கு இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்தினர். என்னுடைய பாட்டனார், நாட்டின் விடுதலைக்காக கிலாபத் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர். இதனால் எனக்கும், கல்வி, மற்றும் பொது சேவையில் கல்லூரி நாட்களிலேயே ஆர்வம் இருந்து வந்தது. 

என்னுடையஇந்த ஆர்வத்தை அறிந்து, எனக்கு ஊக்கம் அளித்தவர் சிராஜுல் மில்லத் அவர்கள்தான். இந்த ஊக்கமும் உற்சாகமும் தான், நான் இப்போது ஒரு சிறந்த ஆளுமையாக வர முக்கிய காரணமாகும். பிறந்த வீட்டில் மட்டுமல்ல, புகுந்த வீட்டிலும் எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் என் கணவர் முசபர் அகமது, என்னுடைய மூன்று குழந்தைகள் என அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து, என்னுடைய கல்வி ஆர்வத்தை பூர்த்தி செய்வது வருகின்றனர். அத்துடன், சமுதாய சேவையில் நான் தற்போது ஓரளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருவதற்கும் என்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்புதான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

பெண்களுக்கு கல்விதான் முக்கியம்:

"இறைவா என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக" என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு ஏற்ப, நான் ஒவ்வொரு நாளும், கல்வியறிவு பெற அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்திக் கொண்டே வருகிறேன். இஸ்லாத்தில் பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்தும் தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. ஆனால், இஸ்லாத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை போன்று வேறு எந்த சமூகத்திலும் வழங்கப்படவில்லை. அதற்கு நான் சாட்சியாக இருந்து வருகிறேன். 

சென்னையில் புகழ்பெற்ற மகளிர் கல்லூரியான எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் பி.காம். முடித்த நான், பின்னர், இஸ்லாமிய கல்வியில் அதிக ஆர்வம் கொண்டு பி.ஏ.அரபிக், அஃப்சுல் உலமா, ஆலிமா  என தொடர்ந்து படித்தேன். அத்துடன், விரிவான மற்றும் அழமான இஸ்லாமிய அறிவு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், M.A.Islamic Studies படிக்க முடிவு செய்தேன். அதற்காக சென்னை பல்கலைக்கழத்தில் சேர்ந்தேன். நான் சேர்ந்தபோது, கொரோனாவின் நெருக்கடியான பேரிடர் காலம் தொடங்கியதால், முதல் ஆண்டு முழுவதும் இணையதளம் மூலம் மட்டுமே பாடங்களை படிக்க முடிந்தது. பின்னர், கொரோனா காலம் முடிவுக்கு வந்ததும், சென்னை பல்கலைக்கழத்திற்கு நேரில் சென்று படிப்பை தொடர்ந்தேன். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வந்ததால், சென்னை எழும்பூர் 61வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த தேர்தல் நேரத்திலும் கூட, என்னுடையே படிப்பு தடைப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் கால அளவுகளை சரியாக அமைத்துகொண்டு, படிப்பை தொடர்ந்து படித்து முடித்தேன். இந்த படிப்பின் மூலம் தற்போது என்னுடையே இஸ்லாமிய அறிவு இன்னும் விசாலமாக மாறியுள்ளது. 

அனைவரும் படிக்க வேண்டிய படிப்பு:

எம்.ஏ. இசுலாமியவியல் (M.A. Islamic Studies) படிப்பில் சேர்ந்து படித்தபோது, இஸ்லாமிய வரலாறு, அரேபிய வரலாறு, இஸ்லாமிய சட்ட திட்டங்கள், இஸ்லாம் அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்பு அரேபியாவின் நிலை, இஸ்லாம் வந்தபிறகு அரேபியா மற்றும் ஐரோப்பியாவின் நிலை, இஸ்லாம் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றம், இஸ்லாமிய சிந்தைகள் எப்படி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின, இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என பல தலைப்புகளில் பாடங்கள் சொல்லித் தரப்படுவதால், இசுலாமியவியல்  படிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. 

நாட்டின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், பல்வேறு தலைவர்கள் சேவை ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கவில்லை. மவுலானா அபுல்கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். சர் சையத் அஹ்மத் கல்வியாளராக இருந்தார். மௌலானா மௌதூதி ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தில் இருந்தார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஸ்லிம் லீகில் இருந்து பணியாற்றினார். இவர்கள் அனைவரும் வெவ்வேறு அமைப்புகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் நாட்டின் விடுதலைக்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற ஊக்குவித்தது இஸ்லாமிய நெறிதான் என்பதை இந்த படிப்பு மூலம் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 

அத்துடன், தப்லிக் ஜமாத், வஹாபி அமைப்பு, சுன்னத் ஜமாத், தர்காகள் எப்படி வந்தது., காயல்பட்டினம் அவுலியா, கிழக்கரை அவுலியா, மலப்புரம் முஸ்லிம்கள் என விரிவான பாடங்கள் 

எம்.ஏ. இசுலாமியவியல்(M.A. Islamic Studies) படிப்பில் சொல்லித் தரப்படுகின்றன. இதன்மூலம் இஸ்லாம் குறித்த விரிவான பார்வை நமக்கு கிடைக்கிறது. 

மேலும், இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் குறித்தும் மிக தெளிவான முறையில் பாடங்கள் உள்ளன. இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் உரிமைகள் என பல அருமையாக தகவல்கள் இந்த படிப்பில் நமக்கு கிடைக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் காலப்போக்கில் எப்படி மறுக்கப்பட்டன உள்ளிட்ட அம்சங்களும் பாடங்களாக உள்ளதால், இஸ்லாத்தில் பெண்களுக்கு இந்த அளவுக்கு கண்ணியம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்ற வியப்பும், ஆச்சரியமும் எனக்கு ஏற்பட்டது. 

இந்த படிப்பு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய படிப்பாகும். அப்படி படித்தால், இஸ்லாம் குறித்து அவர்களிடம் இருக்கும் தப்பான எண்ணங்கள் மறைந்துவிடும். 

சமுதாய மற்றும் மாமன்ற உறுப்பினர் பணி:

பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, அரசியல் மற்றும் பொதுசேவை  ஆர்வத்தை மேலும் வளர்த்தவர் என்னுடையே தந்தை சிராஜுல் மில்லத் அவர்கள் தான். இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமானால், நம் சமுதாயத்தில் சிறந்த பங்களிப்பை வழங்க பெண்கள் முன் வர வேண்டும் என கூறி, என்னையும் அரசியல் மற்றும் பொதுசேவை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மகளிர் அணி உருவாக்கப்பட்டபோது, அதில் நான் சேர்ந்து, படிப்படியாக பணியாற்றி தற்போது தேசியத் தலைவியாக  உயர்ந்துள்ளேன்.  

தற்போது நான் செய்து வரும் பணிகளுக்கு  நம் தேசிய தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நல்ல ஊக்கம் அளித்து வருகிறார். இதன்மூலம் என்னுடையே பணிகளில் மேலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எம்.ஏ. இசுலாமியவியல் படிப்பில் சிறந்த முறையில் பட்டம் பெற்றதை கூறியபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இதுபோன்றுதான் இஸ்லாமிய பெண்கள் கல்வி அறிவு பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என முனிருல் மில்லத் என்னை  வாழ்த்தியதை  என்னால் மறக்க முடியாது. 

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர் என பல்வேறு நிலைகளில் என்னுடையே பணிகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. இதன்மூலம் பெண்கள் மத்தியில் ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்த நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. 

சென்னை மாமன்ற உறுப்பினர் பணி என்பது மிகவும் சவாலான பணியாகும். என்னுடையே எழும்பூர் 61வது வார்டில், எழும்பூர் ரயில் நிலையம், ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம், ராஜத்தினம் மைதானம், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை மியூசியம் என புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்து வருகின்றேன். 

மக்கள் பிரச்சினை தொடர்பாக நான் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் ஒரு நாளில் அல்லது இரண்டு மூன்று நாட்களிலேயே மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து விடுகிறது. இதனால் எனக்கு மன நிறைவு மட்டுமல்ல, மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. 

ஒவ்வொரு மாமன்ற கூட்டங்களில், எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படுவதால் அதனை நான் சிறப்பான முறையில் பயன்டுத்திகொண்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வு கண்டு வருகிறேன். உள்ளாட்சி துறை பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்தான் முதன் முறையாக வைத்தேன். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் என்னுடையே பணிகள் இனியும் தொடரும். 

இஸ்லாமிய சட்டம் குறித்து ஆய்வு:

கடும் பணிகளுக்கு மத்தியிலும் கூட எனக்கு படிப்பில் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதனால் தற்போது சட்டப்படிப்பு படித்து வருகிறேன். வரும் நவம்பர் மாதம் சட்டப்படிப்பு முடிந்ததும், இஸ்லாமிய சட்டமும், சம கால சட்டங்களும் என்ற தலைப்பில் ஆய்வு (பி.எச்.டி.) செய்ய இருக்கிறேன். இதன்மூலம் இஸ்லாமிய சட்டங்களின் தன்மைகள் மற்றும் நன்மைகள் குறித்து ஓர் விரிவான பார்வை எனக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் கிடைக்கும். 

இஸ்லாமிய பெண்களுக்கு என்னுடையே கோரிக்கை என்னவென்றால், அவர்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள, கல்வியில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய நெறிமுறைகளின் படி வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அறிந்துகொண்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ள வேண்டும். 

இப்படி, கூறிய பாத்திமா முசபர், தனக்கு தமிழ், உர்தூ, அரபி, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் தெரியும் என்று கூறியபோது நமக்கு வியப்பு ஏற்பட்டது. கடுமையான பணிகளுக்கு மத்தியில், கல்வியில் ஆர்வம் கொண்டு, அதுவும் இஸ்லாமிய கல்வியில் அதிக ஆர்வம் கொண்டு, சிறப்பான முறையில் பட்டம் பெற்ற பாத்திமா முசபரை, மணிச்சுடர் சார்பில் வாழ்த்தியதுடன், மேலும் கல்வி, அரசியல் மற்றும் பொது சேவையில் சிறப்பாக பணியாற்றி பல பெருமைகளை பெற்று சமுதாயத்திற்கு நல்ல சேவை ஆற்ற  வேண்டும் என மீண்டும் வாழ்த்தி விடை பெற்றோம். 

- சந்திப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: