படிப்பை விட பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட்ஃபோன்களை
அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள்:
ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!
செல்பேசி இல்லாமல் வாழவே முடியாது என்ற கட்டாய நிலைக்கு இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சாதாரண ஏழை முதல் மிகப்பெரிய பணக்காரன் வரை அனைத்து தரப்பு மக்களிடையேயும் செல்பேசி பயன்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது. ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் சாதாரண செல்பேசிகளை பயன்படுத்தினால், கொஞ்சம் வசதியான மக்கள், ஐ-போன் உள்ளிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதை காணும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களும் கூட, ஸ்மார்ட்ஃபோன்களை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இதனால் அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்:
இன்றைய நவீன காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவு செல்பேசிகளை பயன்டுத்தி வருகிறார்கள். மாணவர்கள் செல்பேசிகள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள், படிப்புக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் பயன் உள்ளதாக இருக்கின்றனவா., அதன்மூலம் மாணவர்களின் கல்வியறிவு வளர்கிறதா என பல்வேறு கோணங்களில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா மற்றும் சம்போதி ரிசர்ச் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. 21 மாநிலங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் உள்ள 6 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களின் 6 ஆயிரத்து 229 பெற்றோர்களிடம் நடத்திய இந்த ஆய்வில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா மற்றும் சம்போதி ரிசர்ச் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் டெல்லியில் வெளியிட்டார்.
அதிர்ச்சி தகவல்கள்:
ஆய்வில், படிப்பதற்காக செல்போன்களை பயன்படுத்துவதை விட, பொழுதுபோக்கிற்காக அதிகமான குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புற மாணவர்களில் 49 புள்ளி 3 சதவீத பேர் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், 76 புள்ளி 7 சதவீத பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் முதன்மையாக வீடியோ கேம்களை விளையாட மொபைல் போன்களைப் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மாணவர்களில், 56 புள்ளி 6 பேர் திரைப்படங்களைப் பதிவிறக்குவதற்கும் பார்ப்பதற்கும் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர். 47 புள்ளி 3 சதவீதம் பேர் இசையைக் கேட்க செல்பேசிகளை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களில் 34 பேர் மட்டுமே ஆய்வுப் பதிவிறக்கங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்துகின்றனர் என்றும், மேலும் 18% பேர் டுடோரியல்கள் மூலம் ஆன்லைன் கற்றலை அணுகியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மாணவியர் இடையே செல்போன்:
மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மாணவியர்களிடையேயும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர்களில் 78 சதவீத பேர் தங்கள் பெண் பிள்ளைகளை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
மேலும், 8வது வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவ மாணவியர்கள் இடையே, ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இந்த பிரிவில் சுமார் 58 சதவீதம் மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் 42 சதவீதம் பேர் செல்பேசியை பயன்படுத்தி வருகிறார்கள்.
படிப்பில் ஆர்வமின்மை:
மேலும் ஆய்வில், ஒவ்வொரு நாளும் 40 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுடன் பள்ளி குறித்தும், கற்றல் குறித்தும் உரையாடுகிறார்கள் என்றும் 32 சதவீத பேர் வாரத்தில் சில நாட்கள் தங்கள் குழந்தைகளுடன் உரையாடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
செல்போன் பயன்பாடு ஒருபுறம் இருக்க, குடும்பத்தின் சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் 36 புள்ளி 8 சதவீத பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் குடும்பத்தின் வருவாயை அதிகரிக்க சம்பாத்தியத்திற்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோன்று, 31 புள்ளி 6 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர், அதே நேரத்தில் 21 புள்ளி 1 பேர் தங்கள் மகள்கள் வீட்டு வேலைகளையும் உடன்பிறந்தவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பின்படி, சிறுவர்களைப் பொறுத்தவரை, பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணம், படிப்பில் ஆர்வமின்மையாக உள்ளது. அத்துடன் குடும்ப சூழ்நிலையும் முக்கிய காரணமாக உள்ளது என 48 புள்ளி 7 சதவீத பேர் கருத்து கூறியுள்ளனர்.
மிகமிக கவனம் தேவை:
மாணவ மாணவியர் மத்தியில் செல்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அது படிப்பிற்காக இல்லாமல், பொழுதுபோக்கிற்காக அதிகமாக பயன்படுத்துவது பெற்றோர்களை மட்டுமல்ல, சமூக நலனில் அக்கறை கொண்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எனவே ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு குறித்து மாணவ மாணவியர் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதன்மூலம் மட்டுமே, செல்போன் போன்ற நவீன கருவிகள் படிப்பிற்காக பயன்படுத்தப்படும் நிலை உருவாகும். இதன்மூலம் மட்டுமே, விஞ்ஞான வளர்ச்சியின் உண்மையான பலன்கள் சமுதாயத்திற்கு கிடைக்கும்.
-
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
No comments:
Post a Comment