Sunday, October 13, 2024

வார்த்தைகளின்.......!

வார்த்தைகளின் வலிமை....!

வாழ்க்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், நமக்கு மிகச் சாதாரணமாக தெரியும். ஆனால், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அதிக வலிமை உண்டு. வார்த்தைகள் மனித வாழ்க்கையை மாற்றிவிடும் வலிமை கொண்டவை. வார்த்தைகள் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவை. அல்லது புரட்டி போட்டு, சின்னபின்னமாக்கிவிடும் அசூர பலம் கொண்டவை. எனவே தான் 'உங்கள் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருங்கள். ஒருமுறை சொன்னால், அவை மன்னிக்கப்படும், மறக்கப்படாது' என்று ஒரு அழகிய பொன்மொழி நமக்கு பாடம் சொல்கிறது. 

நேர்மறை வார்த்தைகள்:

நம்மில் பலர் எப்போது நேர்மறை சிந்தனைகளோடு, நேர்மறை வார்த்தைகள் மட்டுமே, தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவதை நாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இத்தகைய அழகிய மனிதர்கள், யார் மனதையும் ஒருபோதும் புண்படுத்தவே மாட்டார்கள். கோபம் வரும்போது கூட, மிகவும் கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி, தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக தான், அவர்களின் முகங்கள் எப்போதும் ஒளிவீசும், பிரகாச முகங்களாக இருக்கும். அந்த முகங்களை பார்க்கும்போது, மனதில் ஒரு நிம்மதி கிடைக்கும். நேர்மறை சிந்தனைகள் மற்றும் நேர்மறை வார்த்தைகள், பல மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றிகளை கொண்டுவந்து குவித்து இருக்கின்றன. நேர்மறையான அழகிய வார்த்தைகள் மூலம் அவர்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, தங்களுடைய வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கி, மிகச்சிறப்பான முறையில் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 

நேர்மறை வார்த்தைகள், நேர்மறை சிந்தனைகள் உண்மையிலேயே வலிமையானவையா? என்ற கேள்வி அல்லது சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தால், இன்றில் இருந்து எப்போது அழகிய வார்த்தைகள், நேர்மறை வார்த்தைகள் மட்டுமே, பயன்படுத்துவது என்ற இலட்சியத்துடன், உங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பியுங்கள். ஒருசில நாட்களிலேயே மிகப்பெரிய மாற்றம் உங்களுக்கு தெரியவரும். உங்கள் மீது வெறுப்பு கொண்ட மனிதர்கள் கூட, உங்களை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். உங்களை சந்தித்து பேச விரும்பாத மனிதர்கள் கூட, உங்களை தேடி வந்து, சிரித்து சிரித்து பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதன்மூலம், உங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும், ஆனந்தம் கிடைக்கும். அத்துடன் உறவுகள் மேலும் வலுப்படும். 

நேர்மறை வார்த்தைகள் உறவுகளை மட்டும் மேம்படுத்துவது இல்லை. மாறாக, உங்கள் உடலில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். மனநல மருத்துவர்களை நாம் ஆலோசனை கேட்டால், நேர்மறை வார்த்தைகள், நேர்மறை சிந்தனைகள் எவ்வளவு வலுவானவை என்பது நமக்கு புரியவரும். எப்போதும் நேர்மறை சிந்தனை, நேர்மறை வார்த்தைகள், நேர்மறை செயல்கள் என அனைத்திலும் நாம் நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், பல நோய்கள் நம்மைவிட்டு பறந்துவிடும். தீராத நோய்கள் கூட, நேர்மறை சிந்தனைகள் மற்றும் வார்த்தைகள் மூலம் விரைவில், சுகம் அடைந்துவிடும். வாழ்க்கையில் நீங்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், பணம் மட்டுமே உங்களுக்கு போதாது. பணத்தால், மகிழ்ச்சியை, அமைதியை விலை கொடுத்து வாங்க முடியாது. உங்களுடைய அழகிய பண்புகள், அழகிய வார்த்தைகள், அழகிய பழக்கங்கள் இவை அனைத்தும் தான், உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தேடி தரும். 

எதிர்மறை வார்த்தைகள்:

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பலரை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களில் சிலர் மனிதர்களை சந்திக்கும்போது, அவர்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பதை காண முடியும். அவர்கள் பேசும்போதும், செயல்படும்போதும் எதிர்மறையாகவே இருப்பார்கள். இத்தகைய மனிதர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், எதிர்மறையாக இருந்து, நம்மையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ஒரு பணியை செய்ய ஆரம்பித்தால், 'அது மிகவும் கடினமானது. அதை உன்னால் நிச்சயம் செய்யவே முடியாது' என இவர்கள் கூறும்போது, அதாவது எதிர்மறையாக நம்மிடம் பேசும்போது, உண்மையிலேயே நமக்கும் ஒரு சந்தேகம் வந்துவிடும். 'பலர் முயற்சி செய்து தோல்வி அடைந்த வேலையை எப்படி நம்மால் மட்டும் வெற்றிகரமாக செய்துவிட முடியும்' என்ற கேள்வி நம் உள்ளத்தில் பிறந்து, நமது மனதை தொடர்ந்து குழப்பிக் கொண்டே இருக்கும். அந்த மனிதரின் எதிர்மறையான வார்த்தைகளை நம்பி, நாம், நமது பணிகளை தொடங்கவே மாட்டோம். இப்படி பணியை தொடங்கவே இல்லை என்ற நிலை இருக்கும்போது, எப்படி நம்மால், வெற்றியை நோக்கிப் பயணம் செய்ய முடியும்?

எதிர்மறை சிந்தனைகளுடன், எதிர்மறை வார்த்தைகளை எப்போதும் பேசும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் தங்கள் வெற்றியை மட்டும் தடுத்து நிறுத்திக் கொள்வது இல்லை. மாறாக, பிறரின் வெற்றிகளுக்கும் தடை போட்டு விடுகிறார்கள். எதிர்மறை சிந்தனைகள், உடல்ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறை வார்த்தைகள், நம்மை ஒருபோதும் உற்சாகமாக செயல்பட வைக்காது. நமது பணிகளில் அடிக்கடி தடைகளை ஏற்படுத்தும். அத்துடன், சோம்பல் குணத்தை உருவாக்கிவிடும். எதிர்மறை சிந்தனைகள் மற்றும் வார்த்தைகள் நம்மை செயல்படாமல் வைக்கும் மிகப்பெரிய சக்தி கொண்டவை. எந்தவித வெற்றியும் அடையாமல், வாழ்க்கையில் சாதிக்காமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க உங்களுக்கு விருப்பமா? அப்படியெனில், எதிர்மறை எண்ணங்களுடன் நீங்கள் வாழுங்கள். எதிர்மறை வார்த்தைகள், செயல்கள், ஒருவரின் மகிழ்ச்சியை மட்டும் பறித்துவிடுவது இல்லை. மாறாக, உடலில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்து, அடிக்கடி, நோயாளுக்கு ஆளாகும் நிலைக்கும் தள்ளிவிடுகிறது. 

வார்த்தைகளின் வலிமை:

வார்த்தைகளின் வலிமை குறித்து ஏக இறைவனின் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நன்கு அறிந்து இருந்த காரணத்தினால் தான், எப்போதும் அழகிய வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தினார்கள். 'விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்., சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்., இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்., உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்., மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்' போன்ற பல அழகிய போதனை நமக்குச் சொல்லிதந்து சென்றுள்ளார்கள். இதன் காரணமாக தான், பெரும்பாலான இஸ்லாமியர்கள் எப்போதும் அழகிய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

"தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே, நாவினாற் சுட்ட வடு" என்ற திருவள்ளுவரின் அழகிய, அற்புதமான குறளில், வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வார்த்தைகள் எப்போதும் நம்மை செதுக்கும்படியாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துவம் வகையில் இருக்க வேண்டும். பிறரை குழியில் புதைக்கும் வகையில் ஒருபோதும் இருக்கக் கூடாது. 

வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. அவற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம்? என்பதை வைத்து தான், நமது வாழ்க்கை அமையும். நேர்மறை எண்ணங்களுடன், சிந்தனைகளுடன், நேர்மறை வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி, வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற உங்களுக்கு விருப்பமா? அப்படியெனில், இன்றுமுதல், வார்த்தைகளை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம், சில நாட்களிலேயே ஏற்பட்டுவிடும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: