Sunday, October 6, 2024

தேங்காய் .....!

தேங்காய் குறித்த ஆச்சரியமூட்டும் பல சுவையான தகவல்கள்....!

ஏக இறைவன் மனித இனத்திற்காக ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். மனிதன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ, இயற்கை அற்புதமான பல உணவு வகைகளை மனித இனத்திற்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு உணவும், சுவையில் மட்டுமல்லாமல், உடலுக்கு வழங்கும் சக்தியிலும் வெவ்வொரு வகையில் இருந்து வருகின்றன. அந்த வகையில், ஏக இறைவன் இந்த உலகத்திற்காக வழங்கிய ஒரு அற்புதமான உணவு வகை தான் தேங்காய் ஆகும். நாம் சாதாரணதாக நினைக்கும் தேங்காயில், ஏராளமான அற்புதனப் பலன்கள் குவிந்து கிடக்கின்றன என்பதை அறியும்போது, உண்மையில் வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படும். 

வீணாக்கப்படாத தேங்காய்:

பெரும்பாலான மக்கள் தேங்காய்களை அதிகம் விரும்புகிறார்கள். எப்போதும் பல்துறைப் பழம், சுவையான உணவுகளைத் தயாரிக்கும் போதும், அல்லது தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு ஆகியவற்றுக்கு நாம் தேடும் முக்கிய பொருளாக தேங்காய் நம்  கைக்கு வரும். விதவிதமான உணவு வகைகளை சமைக்கும்போதும் அதில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்களில் தேங்காய் நிச்சயம் இருக்கும். தேங்காய் சட்னி, தேங்காய் வறுவல், தேங்காய் உப்புமா, தேங்காய் புட்டு, தேங்காய் லட்டு என இப்படி பல்வேறு வகையான சுவையான உணவுகள், தேங்காய் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தேங்காய், சுவையாக இருப்பதுடன், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்பதாகும். 

ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா? தேங்காய் வீணாக்கப்படாத ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். அதாவது, தேங்காயில், எந்தப் பகுதியும் பயன்படுத்தப்படாமல் இருக்க முடியாது. தேங்காயில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் நிச்சயம் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு இருப்பதால், அதை யாரும் வீணடிப்பதில்லை. மனித இனத்திற்கு பல வழிகளில் பயன் அளிக்கும் வகையில் தேங்காய் இருந்து வருகிறது என்பதை அறியும்போது, நமக்கு வியப்பு ஏற்படும். 

இயற்கையின் வரப்பிரசாதம்:

தேங்காய் உண்மையிலேயே இயற்கையின் வரப்பிரசாதம். அதன் ஒவ்வொரு பகுதியும் ஒன்று அல்லது மற்றொரு வழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட எதையும் வீணாக்காமல் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக இருப்பதால், இது பொதுவாக கடவுளின் பழம் என அழைக்கப்படுகிறது. 

தேங்காயின் பல்துறை பயன்பாட்டில் இருந்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதன் கர்னலில் உள்ள சக்திவாய்ந்த லாரிக் அமிலம் வரை, தேங்காய் ஒரு உண்மையான ஆசீர்வாதம் என கூறப்படுகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு எண்ணெய் அல்லது சிறந்த இயற்கை எலக்ட்ரோலைட்டுக்கான தேங்காய்த் தண்ணீர் எதுவாக இருந்தாலும், அது பலவற்றை வழங்குகிறது.

தேங்காய் மூலம் கிடைக்கும் இளநீர் எனப்படும் தண்ணீர், மற்றும் தேங்காயின் உள்ளே இருக்கும் மென்மையான சதை ஆகியவை சுவையாக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல வகையில் இருந்து வருகிறது. இளநீர் எனப்படும் தேங்காய் நீர், இயற்கையின் சொந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்தைப் போன்றது. உயிர் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

பலவிதங்களில் பலன்கள்:

தேங்காயை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டாக நாம் அனுபவிக்கலாம். ஒருவர் தனது மில்க் ஷேக்குகள் அல்லது இனிப்புகளில் சேர்க்கலாம். பொதுவாக தேங்காய் ஒரு பழமாக கருதப்படுகிறது. தேங்காயின் வெளிப்புற கடினமான ஷெல், அழகான கிண்ணங்கள், பாத்திரங்கள் அல்லது பிற அலங்கார பொருட்களாக மாற்றப்படலாம்.  உண்மையில் தேங்காயின் மேல்பகுதியில்இருந்து உறிச்சி வீசப்படும் நார் மற்றும் உமி ஆகியவை பல்துறை திறன் வாய்ந்தது. இது பெரும்பாலும் கயிறுகள், கதவு மெத்தைகள் மற்றும் தூரிகைகள் மற்றும் படுக்கை மெத்தைகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் துருவல் கூடுகளை உருவாக்கவும், வீடுகளுக்கு ஓலைகளை உருவாக்கவும் அல்லது பல்வேறு வெற்று பொருட்களுக்கு  திணிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தேங்காய் சிறிதும் வீண் செய்யப்படதாக உணவு வகையாக இருந்து வருகிறது. இதன்மூலம் தேங்காயை நீங்கள் விரும்பும் வகையில் அதை பயன்படுத்த முடியும் என தெளிவாக அறிந்துகொள்ளலாம். 

பல வழிகளில் சேவை:

வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டால்,  உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே தான் தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது. தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டமாகும். தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இளநீரைப் போன்றச் சிறந்த ஒன்று இல்லை. சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும். முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம். வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது. தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

இப்படி பல வழிகளில் மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும் தேங்காய் அற்புதமான சேவையை ஆற்றி வருகிறது. ஏக இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும், சாதாரணமானவை என  நாம் நினைத்துவிடக் கூடாது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேங்காய் என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: