குழந்தைகளை பெற்றோர்கள் கட்டுப்படுத்துவது சரியா...?
குழந்தைகளின் நடத்தையை பெற்றோர் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான மற்றும் சிக்கலான பிரச்சனை. குழந்தைகளின் நடத்தையை பெற்றோர் கட்டுப்படுத்துவது என்பது அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிந்தனை, செயல்கள் அல்லது முடிவுகளைக் கட்டுப்படுத்த விரும்புவதாகும். ஒவ்வொரு நபரும் தனது சொந்த கொள்கைகள், அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை விருப்பங்களின்படி சிந்திப்பதால், அதன்படி செயல்பட அவர்களுக்கு உரிமை உண்டு. குழந்தையும் இந்த சுதந்திரத்தை காலப்போக்கில் பயன்படுத்த தகுதியுடையது. அவற்றை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் மோசமான மற்றும் சாத்தியமற்ற முயற்சியாகும்.
நன்கொடையாளர்களாக இருக்கும் பெற்றோர்கள்:
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மிகப்பெரும் நன்கொடையாளர்களாக இருந்து வருகிறார்கள் என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி இருக்கும்போது, பிள்ளைகளின் நலன் என்ற பெயரில், தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்து, பிள்ளைகளை பெற்றோர்கள் ஏன் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது தான் கேள்வியாகும். அவர்கள் தங்கள் தவறுகளை அறிந்திருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு அதிக பாதுகாப்பை கொடுக்க அன்பு என்ற பெயரில் செய்கிறார்களா?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான அன்பையும் நேர்மையையும் சந்தேகிக்க முடியாது. குழந்தைகள் அவர்களின் ஆசை மற்றும் தேடலின் மையமாக இருக்கிறார்கள். குழந்தைகள் சிறியவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருக்கும்போது, பெற்றோர்கள் அவர்களுக்கு பேசவும் நடக்கவும் கற்றுக்கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
எந்த சந்தர்ப்பத்தில்? சரியான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கும்போது தவறான நடத்தைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பது அவர்களின் பொறுப்புகளில் ஒன்றாகும். நிச்சயமாக, பெற்றோரின் தியாகம் அவர்களை எல்லா உறவுகளிலிருந்தும் வேறுபடுத்துகிறது, ஆனால் எந்தவொரு வரம்புகளையும் எல்லைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் குழந்தைகளின் ஒவ்வொரு முடிவையும் அல்லது எண்ணத்தையும் பெற்றோர்கள் கட்டுப்படுத்தத் தொடங்குவது சரியானது இல்லை.
கட்டுப்படுத்துதலால் பாதிப்புகள்:
ஆரம்ப கட்டத்தில், குழந்தைகள் முற்றிலும் தங்கள் பெற்றோரைச் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில், அவர்களின் புரிதல் வளரும்போது, அவர்கள் அறியாமலேயே தங்கள் திறனைப் பயன்படுத்த போராடுகிறார்கள். "கட்டுப்படுத்துதல்" காரணமாக குழந்தையின் சிந்திக்கும் ஆற்றல் பாதிக்கப்படத் தொடங்குகிறது. குழந்தைகள் தவறான செயல்களைச் செய்வதிலிருந்து பெற்றோர்கள் தடுக்கிறார்கள். ஆனால் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி அவர்களிடம் பேசுவதில்லை. எனவே குழந்தைகள் எப்போதும் இந்தப் பழக்கங்களைப் பற்றி ஆர்வமாக இருப்பார்கள். அறியாமலேயே அவற்றைக் கடத்த முயற்சிக்கிறார்கள்.
அமெரிக்க சமூகவியல் விஞ்ஞானிகள் அண்மையில் 70க்கும் மேற்பட்ட ஆறு வயது குழந்தைகளிடம் ஆய்வை ஒன்றை நடத்தினார்கள். இப்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளின் விவரங்கள் ஃபிரான்டியர் சைக்காலஜி என்ற உளவியல் இதழில் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அதன்படி, பெற்றோரின் மனப்பான்மை, தேவைக்கு அதிகமாக குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படுத்துவது அவர்களின் மன வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அது குழந்தைகளின் திறமையை பாதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளை விழிப்புணர்வுடன் வளர்ப்பதில் இத்தகைய கட்டுப்படுத்துதல் தாய்மார்களுக்கு உதவுவதில்லை. இந்தக் குழந்தைகள் வளர்ந்து நடைமுறை வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது, ஒரு குறிப்பிட்ட திசையில் சிக்கிவிடுவோம் என்ற பயம் அவர்களின் ஆளுமையில் அதிகரிக்கிறது.
நேர்மறையான வழிகாட்டி:
பெற்றோர்கள் எவ்வாறு தங்களை "கட்டுப்படுத்தும் பெற்றோராக" மாறுவதைத் தடுக்கலாம் அல்லது தங்கள் குழந்தைகளின் கல்வியில் நேர்மறையான வழிகாட்டியாக எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கையின் நம்பிக்கைகள். அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள். ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல. ஏனென்றால் அவர்களுக்கு அவர்களின் சொந்த எண்ணங்கள் உள்ளன. நீங்கள் அவர்களின் உடலைக் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் ஆன்மாவை அல்ல. ஏனென்றால் அவர்களின் ஆத்மாக்கள் நாளைய வீடுகளில் வாழ்கின்றன. அங்கு நீங்கள் அவர்களை அடைய முடியாது.
உண்மையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தங்கள் விருப்பத்தைத் திணிப்பதற்குப் பதிலாக எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். முடிவெடுக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள கற்பிக்க வேண்டும்.. தவறான முடிவுகள் வரும்போது 100 சதவீதம் பொறுப்பேற்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியை செயல்படுத்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனை வலியுறுத்த வேண்டும். தவறான வழிகளைப் பின்பற்றுவதில் அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முன் அதன் எதிர்மறையான விளைவுகளை அவர்களுக்கு பகுத்தறிவுடன் தெரிவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உறுதி:
நீங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் ஒருபோதும் சாத்தியமான தீர்வாகாது. எனவே முடிந்தவரை அவற்றைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை உங்களுடையதாக மாற்றுவதில் கவனம் செலுத்தாமல், அவர்களுடனான உங்கள் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இந்த வழியில், குறைபாடு அல்லது அதிகமான ஈடுபாடு இருந்தால், அதை சரியான நேரத்தில் தீர்க்க முடியும். குழந்தையை ஒரு நல்ல மனிதராக ஆக்குவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அப்போது அவர் தனது நியமிக்கப்பட்ட பொருள் துறைகளில் தானாகவே வெற்றியை அடைவார்.
குழந்தைகளிடம் நிபந்தனையற்ற அன்பை உணரச் செய்யுங்கள். அவர்கள் உங்கள் மதிப்புமிக்க சொத்து என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக உணரச் செய்யுங்கள். குழந்தைகளின் நடத்தையை பெற்றோர் கட்டுப்படுத்துவது என்பது, அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிந்தனை, செயல்கள் அல்லது அதற்கேற்ப சிந்திக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment