"மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடகங்கள்"
புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது. அதுகுறித்த எச்சரிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், மக்களின் மனநிலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது அந்த வரிசையில் சமூக ஊடகங்கள் இடம்பிடித்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை மிகவும் ஆட்டிப் படைக்கும் ஒரு முக்கிய அம்சமாக சமூக ஊடகங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக 24 மணி நேரமும் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உழைப்பு, நல்ல சிந்தனை என அனைத்தும் சமூக ஊடகங்கள் மூலம், இளைஞர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை:
இந்நிலையில், சமூக ஊடகங்கள் சுயமரியாதையை எதிர்மறையாக பாதிக்கும் ஒப்பீட்டு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளன என்றும், குறிப்பாக இளைஞர்கள் நேரம் போதாமை மற்றும் தனிமை உணர்வுகளுடன் போராடுகிறார்கள் என்றும் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியா வந்த அவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டார். கருத்தரங்கில் பேசிய விவேக் மூர்த்தி, "பல இளைஞர்கள் ஆன்லைனில் இணைக்கப்பட்டிருந்தாலும், வாழ்க்கையில் இருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்," என்று குறிப்பிட்டார்.
"மன ஆரோக்கியத்திற்கு வரும்போது மூன்று முக்கிய அம்சங்கள் அவசியம். ஏற்றுக்கொள்ளுதல், அணுகல் மற்றும் மலிவு" என்று அவர் கூறினார். மேலும், "மன ஆரோக்கியத்தைப் பற்றி விவாதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அணுகக்கூடிய கவனிப்புக்கான போதுமான வசதிகளை வழங்குபவர்கள், இந்த சேவைகளை மலிவு விலையில் செய்து வருவதாகவும், மேலும் இத்தகைய வசதிகள் குறைவாக இருந்தால், தனிநபர்கள் உதவி பெற தயங்கலாம்," என்றும் விவேக் மூர்த்தி குறிப்பிட்டார்.
மன ஆரோக்கியத்திற்கு தீங்கு:
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் அபரிமிதமான கல்வி மற்றும் சமூக அழுத்தங்கள் குறித்து உரையாற்றிய டாக்டர் விவேக் மூர்த்தி, "கல்வியில் வெற்றி பெறுவதற்கான இந்த அழுத்தமும், சமூக ஊடகங்களால் வளர்க்கப்படும் ஒப்பீடும் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்" என்றார். மனநலப் பயிற்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க மருத்துவக் கல்வியில் அவசர சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
"பல மருத்துவப் பாடத்திட்டங்கள் மனநலப் பிரச்சினைகளுக்குப் போதுமான அளவு தீர்வு காணவில்லை" என்று குறிப்பிட்ட அவர், "நீண்ட காலமாக மனநலம் மற்றும் சமூக ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை விட குறைவான முக்கியத்துவமாகவே பார்க்கப்பட்டு வருவதாகவும், புரிதலை மேம்படுத்த, மருத்துவ மாணவர்களுக்கு மனநல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுடன் ஈடுபடுவது போன்ற அனுபவமிக்க கற்றல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்," என்றும் கேட்டுக் கொண்டார்.
தனிமைப் பற்றிய கவலையை வெளிப்படுத்திய அவர், அது உடல் ரீதியாக தனியாக இருப்பது மட்டும் அல்ல, ஆனால் அது மனரீதியாக துண்டிக்கப்பட்ட ஒரு அகநிலை உணர்வு என்று எடுத்துரைத்தார். ஒவ்வொருவருக்கும் தேவையான மனநல ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்வது இன்றியமையாதது என்பதால், உடல் நலக் காப்பீட்டுக் கோரிக்கைகளைப் போலவே மனநலக் காப்பீட்டுக் கோரிக்கைகளையும் திருப்பிச் செலுத்த சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் விவேக் முர்த்தி வலியுறுத்தினார்.
பாதுகாப்புடன் இருப்பது எப்படி?
மனித இனத்திற்கு நல்ல பலனையும், அதேநேரத்தில் மிகப்பெரிய அழிவையும் தரும் வகையில் சமூக ஊடங்கங்கள் தற்போது இருந்து வருகின்றன. சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு இன்றைய மனிதன் தள்ளப்பட்டு விட்டான். எனினும், சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்க மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் சமூக ஊடகங்களிலேயே மூழ்க்கி கிடக்காமல், உலகத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். உறவுகளை மேம்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல மொழிகளை, கற்றுக் கொண்டு, அழகிய மொழிகளுடன் மற்றவர்களிடம் உரையாட வேண்டும்.
உறவுகள், நண்பர்களிடம் பேசும்போது, செல்போனை தூக்கி தூரமாக வைத்துவிட்டு, உண்மையான மனதுடன் பேச வேண்டும். உறவுகளை மேம்படுத்த நேரம் ஒதுக்க வேண்டும். அடிக்கடி, நண்பர்கள், உறவினர்கள், அலுவலக தோழர்களுடன் சந்திப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது சமூக ஊடகங்களுடன் மட்டுமே முடிந்துவிடும் அம்சம் இல்லை. அது ஏக இறைவன் வழங்கிய மிகப்பெரிய அருட்கொடையாகும். அந்த அழகிய அருட்கொடையை மிகவும் நல்ல முறையில், சிறப்பாக பயன்படுத்த மனிதன் பழகிக் கொண்டு, வாழ்ந்தால், சமூக ஊடகங்களின் தொல்லைகளில் இருந்து நிச்சயம் விடுப்படலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment