Sunday, October 27, 2024

நேர்காணலுடன் ஒரு சிறப்பு ரிப்போர்ட்.....!

"எகிப்தில் நடைபெற்ற சர்வதேச மாடர்ன் பென்டத்லான் போட்டி"

இரண்டு பதக்கம் வென்று சாதனை புரிந்த காஞ்சிபுரம் பள்ளி முஸ்லிம் சிறுமி ஆஃபியா.....!

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் 

நேரில் பாராட்டி வாழ்த்து....!!

- நேர்காணலுடன் ஒரு சிறப்பு ரிப்போர்ட் -

இளம் குழந்தைகளிடம் உள்ள ஆர்வத்தை கண்டுபிடித்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்தால், வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு அவர்களால் சாதிக்க முடியும். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளித்தால், அவர்கள், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமையை தேடி தருவார்கள். அத்தகைய பெருமையை காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் 7 வயது மாணவி டி.ஆஃபியா தனது சாதனை மூலம் தேடி தந்துள்ளார். அண்மையில் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச மாடர்டன் பென்டத்லான் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை அவர் தட்டிப் பறித்துள்ளார். 

சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்தி பதக்கங்களை வென்ற மாணவி டி.ஆஃபியா, தனது குடும்பத்தாருடன் சென்னை வந்து, மண்ணடியில் உள்ள காயிதே மில்லத் மன்ஸிலில் செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கேஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, இளம் மாணவியின் சாதனையை அறிந்து, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் கேஏ.எம்.முஹம்மது அபூபக்கர்  பாராட்டியதுடன், மேலும் சாதனைகளை குவிக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

அப்போது, சாதனை மாணவி டி.ஆஃபியாவுடன் மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேர்காணல் ஒன்றை நடத்தினார். அந்த நேர்காணலின் பகுதிகளை இப்போது பார்க்கலாம். 

பென்டத்லான் போட்டி:

நவீன பென்டத்லான் என்பது ஒரு ஒலிம்பிக் மல்டிஸ்போர்ட் ஆகும். இது தற்போது ஃபென்சிங் (ஒன்-டச் எபி), ஃப்ரீஸ்டைல் ​​நீச்சல், குதிரையேற்றம் ஷோ ஜம்பிங், லேசர் பிஸ்டல் ஷூட்டிங் மற்றும் கிராஸ் கன்ட்ரி ரன்னிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போட்டி முதன்முதலில் 1912இல் நடத்தப்பட்டது. பண்டைய ஒலிம்பிக்கின் போது நடத்தப்பட்ட பாரம்பரிய பென்டத்லானால் ஈர்க்கப்பட்டு, அக்கால சிப்பாயின் திறன்களை மாதிரியாக வடிவமைக்கப்பட்டது. இது 1912 முதல் கோடைகால ஒலிம்பிக்கின் தொடர்ச்சியான பகுதியாக இருந்து வருகிறது, மேலும் 1949 முதல் ஆண்டுதோறும் உலக சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஆஃபியாவுக்கு இளம் வயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இதனை கண்ட அவரது பெற்றோர் தாஜுத்தீன்-பர்சானா பானூ ஆகியோர், குழந்தையின் விருப்பதை நிறைவேற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆஃபியாவுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க தேவையான நடவடிக்கைளையும் அவர்கள் எடுக்கத் தொடங்கினார்கள். 

மாநில, தேசிய அளவிலான போட்டி:

அதன்படி, ஆஃபியா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அறிஞர் அண்ணா விளையாட்டு திடலில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று, நல்ல முறையில் பயிற்சி எடுத்துக் கொண்டார். இளம் மாணவியின் ஆர்வத்தைக் கண்ட நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த், ஆஃபியாவிற்கு மேலும் ஊக்கம் தந்து சிறப்பான பயிற்சியை அளித்தார். நீச்சல் நுணுக்கங்களை கற்றுத் தந்தார்.  இதன் காரணமாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு திடலில் நடைபெற்ற மாடர்ன் பென்டத்லான் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய ஸ்டேட் மீட் ட்ரையத்தல் பயத்தல் லேசர் ரன்னிங் ஆகிய மூன்று போட்டியில் பங்கு பெற்ற ஆஃபியா, மூன்றிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை அள்ளினார். அத்துடன், பல போட்டியில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி என பரிசுகளை பெற்றுள்ளார்.

பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மாடர்ன் பென்டத்லான் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்ட ஆஃபியா அங்கும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதன்மூலும் இரண்டு தங்கப்பதக்கமும் அவருக்கு கிடைத்தது. 

ஊக்கம் அளித்த திராவிட மாடல் அரசு :

பின்னர், ஆஃபியா தான் எகிப்தில் நடக்கவிருக்கும் சர்வதேச மாடர்ன் பென்டத்லான் பெடரேஷன் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாக தனது பெற்றோரிடம் ஆசையை வெளிப்படுத்தினார். அதை அறிந்த பெற்றோர், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு, விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டு இளைஞர்களை தேர்வு செய்து நல்ல ஊக்கம் அளித்து வருகிறது என்பதை அறிந்த அவர்கள், தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறை நிர்வாகிகளை சந்தித்து, தங்கள் குழந்தையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.  இதன் காரணமாக எகிப்து நாட்டில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ஆஃபியாவுக்கு தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் 3 இலட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. 

சர்வதேச போட்டியில் சாதனை:

பெற்றோரின் முயற்சி மற்றும் பயிற்சியாளர்கள் ஆனந்த், கேசவன் ஆகியோரின் அற்புதமான பயிற்சியாலும், கடந்த அக்டோர் மாதம் 10 முதல் 13ஆம் தேதி வரை எகிப்தில் நடைபெற்ற  மாடர்ன் பென்டத்லான் ட்ரையத்தல் மற்றும் பயத்தல் போட்டிகளில் ஆஃபியா கலந்துகொண்டார். இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரைச் சேர்ந்த ஆஃபியா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார். 

எகிப்தில் ட்ரையத்தல் போட்டிகளில் லேசர் கன் ஷூட், கடலில் 50 மீட்டர் நீச்சல் கடலோர மணலில் 300மீட்டர் ஓட்டம் என இரண்டு முறை செய்ய வேண்டும்.  300 மீட்டர் ஓட்டம், நீச்சல் 50 மீட்டர் மீண்டும் 300 மீட்டர் ஓட்டம் அடங்கிய பயத்தல் போட்டியில் பங்கு கொள்ள வேண்டும். இவை அனைத்திலும் மாணவி ஆஃபியா கலந்துகொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தினார். போட்டிக்கு செல்வதற்கு ஒரு மாதம் முன்பு பயிற்சியாளர் ஆனந்த் பதவி உயர்வு பெற்று கோவை சென்றுவிட்டாலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயிற்சி நுணுக்கங்களை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக ஆஃபியா கூறினார். இருப்பினும் நேரடி பயிற்சி,லேசர் கன் பயிற்சி இருந்து இருந்தால் கட்டாயம் தங்கம் வென்று இருக்கலாம் என்று ஆஃபியா ஆதங்கம் கொள்கிறார். .

சர்வதேச அளவில் தாம் நிகழ்த்திய இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மேகநாதன் உள்ளிட்டோரை, தனது குடும்பத்தாருடன் நேரில் சென்று வாழ்த்துபெற்று மகிழ்ச்சி அடைந்த மாணவி, தனது ஆர்வத்திற்கும் சாதனைக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்துர் ரஷீத், திமுக மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்ததை எப்போதும் மறக்க முடியாது என நெகிழ்ச்சியாக கூறியபோது உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது. விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டுள்ள முஸ்லிம் மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தால், நிச்சயம் வாழ்க்கையில் சாதிப்பார்கள் என்பதற்கு காஞ்சிபுரம் மாணவி ஆஃபியாவே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார். இளம் மாணவி ஆஃபியா இன்னும் பல சாதனைகளை புரிய மணிச்சுடர் சார்பில் வாழ்த்துகிறோம். 

- சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: