மழைக்காலமும், திராவிட மாடல் அரசும்......!
வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு (அக்டோபர் மாதத்தில்) கனமழை பெய்தது. இதேபோன்று, மாநிலத்தின் ஒருசில மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. எனினும், கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம், மற்றும் வானிலை ஆய்வாளர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த காரணத்தால், தமிழ்நாடு அரசு, கனமழையில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கனமழையின்போது, மக்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு. சேகர் பாபு உள்ளிட்டோரும் பம்பரமாக சுற்றி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மழை நீர் தேங்கும் இடங்களில் முன்கூட்டியே சென்று, அங்கு தண்ணீர் தேங்காத வகையில், தீவிர பணிகளில் ஈடுபட்டு, அதிகாரிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இப்படி, திராவிட மாடல் அரசு உரிய நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தால், சென்னையில் கடந்த 15 ஆம் தேதி, சுமார் 20 சென்டி மீட்டர் மழை பெய்தபோதும், பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. ஒருசில இடங்களில் தேங்கிய மழை நீரை கூட, உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு, தங்களுடைய பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்தார்கள். இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய சேவையை சென்னை மாநகர மக்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள்.
மாநகராட்சியின் பணிகள்:
சென்னையில் மழைக்காலத்தில் மாநகராட்சி எத்தகை முறையில் சிறப்பாக பணியாற்றியது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சென்னையில் 300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைத்து வரப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மையங்களில் குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. நிவாரண மையங்களில் உணவு வழங்க, 98 மைய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 388 அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போக்குவரத்து சீராகப்பட்டது. 542 இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. சென்னையில் மழை காரணமாக சாய்ந்த 77 மரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. மீட்புப் பணிகளில் 103 படகுகள் பயன்படுத்தப்பட்டன. 213 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாங்கள் நடைபெற்றன.
இப்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையின்போது, மக்கள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழை பெய்தபிறகு, மேற்கொண்ட, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம், மழையால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சிய மக்கள், எந்தவித பாதிப்பும் இல்லாமல், வழக்கம் போல தங்களுடைய பணிகளை செய்ததால், நிம்மதி அடைந்தனர்.
மக்கள் போற்றும் மகத்தான பணிகள்:
சென்னையில் கடந்த 13ஆம் தேதி முதல், 18ஆம் தேதி வரை, அதாவது கனமழை தொடங்குவதற்கு முன்பு, அதைத் தொடர்ந்து மழை கொட்டியபோதும், பின்னர், மழை ஆபத்து நீங்கியபிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், இரவு பகல் பராமல் ஆற்றிய சேவையை பாராட்டாத மக்களே இல்லை என்று கூறலாம். சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, அந்த பகுதிகளில் எப்போதும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கும். அந்த பகுதிகளில் நிலைமை சீராக பல நாட்கள் ஆகும். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், அரசு மேற்கொண்ட பல அற்புதமான பணிகள் மூலம், மழைப் பெய்த சில மணி நேரத்தில், மழை நீர் தேங்கிய பகுதிகளில் நிலைமை சீராக மாறிவிட்டதைக் கண்டு, மக்கள் வியப்பு அடைந்தனர். இதுபோன்ற, ஒரு நிலைமையை தங்களுடைய வாழ்நாளில் தாங்கள் இதுவரை கண்டதில்லை என்றும் பலர் மகிழ்ச்சியுடன் கூறி, திராவிட மாடல் அரசுக்கு நன்றி கூறிக் கொண்டனர்.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் பாலாஜி நகரில், மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிப் பொருட்களை வழங்கினார். மேலும் மழைக்காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களை கண்ணியப்படுத்தி, அவர்களுடன் இணைந்து தாமும், மதிய உணவு சாப்பிட்டு, தம்முடைய அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.
இதேபோன்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மீட்புப் பணிகளில் இரவு பகல் என பாராமல், உழைத்துக் கொண்டே இருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கனமழையின்போது, சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு தூய்மைப் பணியாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.
ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும்:
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தால், அரசுக்கு மிகப்பெரிய கெட்டப் பெயர் ஏற்படும் என கற்பனை செய்துகொண்டு, சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் செயல்பட்டன. ஒருசில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மிகப்பெரிய பாதிப்புகள் போன்று, புகைப்படம் எடுத்து பொய்யான தகவல்களை செய்தியாக பரப்பின. இதேபோன்று அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், அரசு சரியாக செயல்படவில்லை என பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், மழை நீர் தேங்காமல் இருந்ததே, வெள்ளை அறிக்கை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்து, எதிர்க்கட்சிகளின் பொய்யான பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதேபோன்று, சில ஊடகங்கள், பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க நினைத்தன. சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், இனி மழைக்காலத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ஒரே இலக்குடன் அரசு செயல்பட்டதால், போலியான, பொய்யான தகவல்களை, செய்திகளை ஒருபோதும் நம்பாமல், மக்கள் அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி, மழைக்காலங்களில் ஒருபோதும் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசுக்கு குவியும் பாராட்டுகள்:
மழைக்காலத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆற்றியப் பணிகள் அற்புதமானவை என்பதால், அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எந்த பகுதிக்குச் சென்றாலும், திமுக மீது பற்று இல்லாதவர்கள் கூட, திமுகவை விரும்பாதவர்கள் கூட, உண்மையில் திமுக. அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களை மழை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துவிட்டது என பாராட்டு தெரிவிப்பதை நாம் நேரில் காண முடிந்தது. பாராட்டு மொழிகளை கேட்க முடிந்தது. ஒரு அரசு என்பது எப்படி, செயல்பட வேண்டும்? குறிப்பாக பேரிடர் காலங்களில் எப்படி பணியாற்ற வேண்டும்?
என்பதற்கு தற்போதைய திராவிட மாடல் அரசே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும், ஒரு அரசு எல்லோருக்குமான அரசாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பணிகளை ஆற்றி வருகிறார். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம். தற்போது சென்னையில் பெய்த மழையினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாம்ல் இருக்கும் வகையில் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகள், ஆற்றிய பணிகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து இருக்கும். எனவே, மக்கள் திராவிட மாடல் அரசை எப்போதும் விரும்புவார்கள். மழைக்காலத்தில், மக்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல், பாதுகாத்த திமுக அரசுக்கு நாமும் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment