"மன ஆரோக்கியமாக இருக்க அலுவலகத்தில் இருந்து பணி செய்வதே சிறந்தது" - ஆய்வில் பரபரப்பு தகவல்கள் -
கொரோனா பேரிடர் காலத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வீட்டில் இருந்து பணிபுரியும் (Work from Home) என்ற நிலைக்கு ஆளானார்கள். பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக இந்த கட்டாய நிலையை அரசு மற்றும் தனியார் அலுவலக நிர்வாகங்கள் எடுத்தன. தற்போது கொரோனா பேரிடர் காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும், ஒருசில அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள், வீட்டிலேயே பணிபுரிவதை விரும்புகிறார்கள். இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்வது தங்களுக்கு பிடித்து இருப்பதாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் கருதுகிறார்கள்.
சரி, வீட்டில் இருந்து பணிபுரிவது நல்லதா? அல்லது அலுவலகங்களுக்குச் சென்று நேரடியாக பணிகளை ஆற்றுவது சரியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வீட்டில் இருந்து புணிபுரிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள், அலுவலகத்தில் பணிச் செய்வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆய்வு நிறுவனம் அளிக்கும் தகவல்கள்:
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆய்வு நிறுவனம் ஒன்று, வேலைக் கலாச்சாரம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கிடைத்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 65 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியம் கிட்டத்தட்ட 54 ஆயிரத்து 831 ஊழியர்களிடம் இருந்து வீட்டில் இருந்து பணிபுரிவது மற்றும் அலுவலகத்திற்குச் சென்று பணிசெய்வது குறித்து கேள்விகள், கருத்துகள் கேட்கப்பட்டன. அதன்படி, நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும், ஆய்வு நிறுவனம் கருத்துகளை திரட்டியது.
இந்தியா உட்பட ஒருசில நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரியும்போது, பணிச்சுமை காரணமாக சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மன ஆரோக்கியத்திற்காக வீட்டில் இருந்து வேலை செய்வதை விட அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது சிறந்தது என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அலுவலகங்களில் பணிபுரியும்போது, சக ஊழியர்களின் நேசம், அன்பு மற்றும் சகோதரத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தங்களுடைய திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. பணிகளில் ஒருவிதமான உந்துதுல் சக்தி ஏற்படுகிறது. அலுவலகப் பணிகளில் போட்டி இருந்தாலும், திறமையை நன்கு வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பணிச்சுமை ஏற்பட்டாலும், சக ஊழியர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அந்த பணிகளை எந்தவித சிரமும் இல்லாமல் செய்ய ஒரு வாய்ப்பு அலுவலகங்களில் பணிசெய்யும் போது கிடைக்கிறது. அதேநேரத்தில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சக ஊழியர்கள் மத்தியில் இருக்கும் உறவுகள் பாராட்டும் வகையில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
மன ஆரோக்கியமும், பணிகளும்:
ஒருவருடைய மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமனால், அவர், எப்போதும் மற்றவர்களுடன் கூடி வாழ்வதை விரும்ப வேண்டும். அந்த வகையில் அலுவலகப் பணிகள் இருந்து வருகின்றன. நாள்தோறும் தங்களுடைய சக தோழர்களை காணும் வாய்ப்பு ஊழியர் ஒருவருக்கு கிடைக்கிறது. இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பு வீட்டில் இருந்து பணி செய்வதன் மூலம் கிடைப்பது இல்லை. வீட்டில் இருந்து பணி செய்யும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அத்துடன், எப்போதும் தனிமையில் அமர்ந்து பணிச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலை, மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
அலுவலகங்களில் பணிபுரியும்போது, மன ரீதியாக பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும், அவற்றிற்கு தீர்வு கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்புகள் மூலம் மன ரீதியான பிரச்சினைகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால், வீட்டில் இருந்து பணிபுரியும்போது, இத்தகைய ஒரு வாய்ப்பு கிடைப்பது இல்லை.
வாய்ப்புகளும், ஆலோசனைகளும்:
அலுவலகங்களுக்கு நேரில் சென்று பணிபுரியும்போது, பிற வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் நாள்தோறும் கிடைக்க சந்தர்ப்பம் உருவாகிறது. இத்தகைய வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் புதியபுதிய சிந்தனைகள் மனதில் உருவாகின்றன. மனம் சோர்வான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டாலும், அதில் இருந்து மீண்டு, மீண்டும் வழக்கமான உற்சாகமான நிலைக்கு திரும்ப முடிகிறது.
வாழ்க்கையில் ஆலோசனைகளும், வாய்ப்புகளும் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. இத்தகைய ஒரு நல்ல சூழல், அலுவலகங்களில் கிடைக்கிறது. ஒரு பணியில் இருந்துகொண்டே, அதைவிட சிறந்த பணிக்குச் செல்வதற்கான தகவல்கள் அலுவலகங்களில் கிடைக்கிறது. வித்தியாசனமான மனிதர்களைச் சந்திக்கும்போது, உலகம் குறித்த புரிதல்கள் கிடைக்கின்றன. வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ள மனதில் தைரியம், துணிச்சல் ஏற்படுகிறது.
இத்தகைய ஒரு நல்ல சூழல், வீட்டில் இருந்தபடியே பணிச் செய்யும்போது கிடைப்பது இல்லை. வீட்டில் இருந்து பணிச் செய்வது சுகமாக இருந்தாலும், அது, மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடுகிறது. இனி வீட்டில் இருந்து பணிபுரிந்து மன ஆரோக்கியத்தை சீர்குலைப்பதை விட, பல சிரமங்களைச் சந்தித்தாலும் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பணி செய்வதை மக்கள் விரும்ப வேண்டும் என்று ஆய்வு நிறுவனம் மூலம் கிடைத்த தகவல்கள் நமக்கு உணர்ந்துகின்றன. எனவே, மன ஆரோக்கியத்திற்காக வீட்டில் இருந்து வேலை செய்வதை விட அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது சிறந்தது என்பதை நாம் மனதில் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment