"இஸ்லாம் குறித்து, லண்டனில் நடைபெற்ற உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழா"
- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -
அமைதி மார்க்கமான இஸ்லாம் குறித்து, உலகளாவிய ஊடகங்கள் தவறான, பொய்யான, போலியான கருத்துகளை தொடர்ந்து பரப்பி வரும் நிலையில் கூட, இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்வதில் உலக மக்களிடையே தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உலகில் தற்போது வேகமாக வளர்ச்சி அடையும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது. இஸ்லாமிய வாழ்க்கை முறையால் கவரப்பட்டு, இஸ்லாமிய போதனைகளை அறிந்து அவற்றை பின்பற்ற ஆர்வம் கொண்டு, உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள்.
இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போரை ஆழ்ந்து கவனித்துவரும் உலகம், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களை கண்டு அதிர்ச்சி அடைந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேலிய நடத்திய கொடூர தாக்குதல்கள், உலக மக்களை வேதனையில் ஆழ்த்தினாலும், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்வதிலும், பாலஸ்தீன மக்கள் வரலாற்றை அறிந்துகொண்டு, ஒரு நல்ல தீர்வு காண பலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முயற்சிகளின் காரணமாக, இஸ்லாம் குறித்த அவர்களின் பார்வை மேலும் விரிவு அடைந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் இந்த போரின் காரணமாகவும் பாலஸ்தீன மக்களின் கொள்கை உறுதியாலும்,, இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துகொண்டு, நல்ல ஒரு அமைதியான வாழ்க்கை நெறியை பின்பற்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தற்போது ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். இதனால், நாள்தோறும், இஸ்லாமிய மார்க்கத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அமைதி மற்றும் ஒற்றுமை விழா:
இப்படி, இஸ்லாமிய மார்க்கத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அமைதி மார்க்கமான இஸ்லாம் குறித்து போலியான, தவறான கருத்துகள் இன்னும் களையவில்லை. பொய் பிரச்சாரங்கள் நிறுத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் (Muslim Council of Britain) லண்டனில் 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழா 2024' (Global Peace and Unity Festival 2024) என்ற பெயரில் கடந்த அக்டோபர் 19 முதல் 20ஆம் தேதி வரை அற்புதமான ஒரு திருவிழாவை நடத்தியது. பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழாவை' மீண்டும் நடத்தி தன்னை பெருமைப்படுத்திக் கொண்டது.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழாவில்' நூற்றுக்கணக்கான அரங்குகள் என ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அரங்கிலும், பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய வாழ்க்கை முறை, இஸ்லாம் காட்டும் சகோதரத்துவம், இஸ்லாமிய கல்வி, இஸ்லாமிய அறிவியல், இஸ்லாமிய சமூக வாழ்க்கை, இஸ்லாமிய பொருளாதாரம் என இஸ்லாம் குறித்து 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழாவிற்கு' வந்த பார்வையாளர்களுக்கு தகவல்கள் கிடைக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். இதன்மூலம், அமைதி மற்றும் ஒற்றுமை விழாவை காண வந்த இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாய மக்களும், இஸ்லாம் குறித்து ஒரு நல்ல தெளிவைப் பெற்றனர்.
பார்வையாளர்களை கவர்ந்த ஒற்றுமை விழா:
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை திருவிழா' பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என விழாவை ஏற்பாடு செய்த பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாவை காண நாள்தோறும் இங்கிலாந்து நாட்டில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்றதாக கூறிய அவர்கள், மக்களை ஒன்றிணைத்து ஒற்றுமையைக் கொண்டாடியது பெருமை அளித்தாகவும் கூறினர். இந்த அற்புதமான திருவிழாவிற்கு முஸ்லிம் சமூகத்தில் மிகப்பெரிய அளவுக்கு ஒத்துழைப்பு இருந்தது என்றும் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
"எங்கள் குழு, பரந்த பொதுமக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவது, கேள்விகளுக்குப் பதிலளிப்பது மற்றும் இங்கிலாந்து முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலின் தொடர்ச்சியான முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் நம்பமுடியாத நேரத்தைக் கொண்டிருந்தது. மதங்களுக்கிடையிலான உரையாடலை ஊக்குவிப்பதில் இருந்து இஸ்லாமோஃபோபியா போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது வரை, எங்களது பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றி விவாதிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றோம். இந்த திருவிழாவிற்கு மற்ற முஸ்லிம் அமைப்புகள் மற்றும் வணிகங்களின் பங்களிப்புகளைப் பார்ப்பது சமமாக ஊக்கமளிக்கிறது. அவை அனைத்தும் தங்கள் சொந்த வழிகளில் நேர்மறையான மாற்றத்தை நோக்கி செயல்படுகின்றன" என்று பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள்:
லண்டன் நகர மக்களை மட்டுமல்லாமல், இங்கிலாந்து முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்களை பெரிதும் கவர்ந்த இதுபோன்ற அருமையான நிகழ்வில், சிறப்பு ஷாப்பிங் மற்றும் கண்காட்சி அரங்குகள், இரண்டு நாள் நஷீத் கச்சேரிகள், ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள், கல்வி கருத்தரங்குகள், பேச்சுக்கள் மற்றும் பல அற்புதமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அமைதி மற்றும் ஒற்றுமை விழாவில், உலகம் முழுவதும் வந்த அறிஞர் பெருமக்கள் அழகிய அற்புதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். பாகிஸ்தான் அறிஞர் மௌலானா தாரிக் ஜமீல், பய்யினாவின் தலைமை செயல் அலுவலர் உஸ்தாத் நௌமான் அலி கான், இங்கிலாந்தைச் சேர்ந்த பேச்சாளர் மற்றும் மின்ஹாஜ்-உல்-குரான், யுகேவின் ஆசிரியர் ஷேக் ஹம்மாத் முஸ்தபா அல்-மதானி அல்-காத்ரி, தென்னாப்பிரிக்கா அறிஞர் ஷேக் சுலைமான் மூலா, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் இலன் பாப்பே, டொராண்டோ இஸ்லாமிய நிறுவனத்தில் மூத்த விரிவுரையாளர் டாக்டர். அப்துல்லா ஹக்கீம் விரைவு, பாதிரியார் ஷேக் முகமது மஹ்மூத், கனடா அறிஞர் ஷேக் அலா எல்சைட், ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் ஷேக்கா பாத்திமா பர்கத்துல்லா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் இந்த அமைதி விழாவில் கலந்துகொண்டு, இஸ்லாம் குறித்தும், இஸ்லாம் போதிக்கும் வாழ்க்கை முறை குறித்தும், இஸ்லாம் காட்டும் அமைதி வழி குறித்தும் விழாவிற்கு வந்தவர்கள் மிகவும் தெளிவு பெறும் வகையில் விளக்கங்களை அளித்தார்கள்.
சிந்தனையை தூண்டும் விழா:
உலகெங்கிலும் உள்ள துடிப்பான முஸ்லிம் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் வணிகக் காட்சியின் பிரகாசமான அடையாளமான 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழா' (GPU) பிராண்டுகள், வணிகங்கள் மற்றும் உத்வேகத்திற்கான ஒரு மாறும் மையமாக அமைந்து இருந்தது. இந்த திருவிழா பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, வளமான மரபுகள் மற்றும் சமகால வாழ்க்கை முறைகளைக் கொண்டாடியது. அர்ப்பணிப்புள்ள ஷாப்பிங் மற்றும் கண்காட்சி அரங்குகள், ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள், நேரடி இசை, சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்குகள், நுண்ணறிவுமிக்க குழு விவாதங்கள் மற்றும் மேலும் சிலிர்ப்பான அம்சங்களுடன் நடைபெற்ற விழா இந்த ஆண்டு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தாக பார்வையாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
"வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தேவையிலுள்ள அனாதைகள், ஆதரவற்றவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்றார்கள். இதன்மூலம், ஏழ்மையைப் புரிந்து கொள்ளவும், தங்கள் கண்காட்சியைப் பார்வையிடவும், மேலும் நெகிழ்ச்சியின் உண்மையான கதைகளைக் கேட்கவும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் செய்யும் பணிகளில், அனாதைகள் மற்றும் விதவைகள் ஏன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு வாய்ப்பு உருவாகி இருப்பதுடன், தங்கள் நிறுவனர் மற்றும் திட்ட இயக்குனரைச் சந்திக்கவும் வாய்ப்பு கிட்டியது. மேலும் ஒருவர் காட்டும் இரக்கம் எவ்வாறு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொண்டு வரும் என்பதைப் பார்க்கவும் இந்த 'உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமை விழா 2024' ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது" என்று பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தெரிவித்து பெருமை அடைந்துள்ளது.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment