Thursday, October 24, 2024

பேராசிரியர் மஸார் ஆசிஃப் நியமனம்....!

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் மஸார் ஆசிஃப் நியமனம்....!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.....!!

புதுடெல்லி,அக்.25-உலக புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாரசீக மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையத்தில் தற்போது பேராசிரியராக இருக்கும் மஸார் ஆசிஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வியாழக்கிழமை (24.10.2024) அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 16-வது துணைவேந்தராக மஸார் ஆசிஃப்பை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த, நஜ்மா அக்தரின் பதவிக்காலம் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி முடிந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரவில் தகவல்:

ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா சட்டம் 1988 என்ற சட்ட விதியின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பார்வையாளர் என்ற வகையில் பேராசிரியர் மஸார் ஆசிஃப்பை புதிய துணை வேந்தராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய துணை வேந்தராக பதவி ஏற்கும் நாள் முதல் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயதை எட்டும் வரை பேராசிரியர் மஸார் ஆசிஃப் துணை வேந்தர் பதவியில் நீடிப்பார் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

பேராசிரியர் ஆசிஃப் இதற்கு முன்பு மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பள்ளியின் (2021-2023) டீனாகவும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். மேலும், பேராசிரியர் மஸார் ஆசிஃப் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும், மவுலானா அபுல்கலாம் ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்து திறமையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: