Thursday, October 3, 2024

சிராஜுல் மில்லத்.....!

 "சிராஜுல் மில்லத் எனும் ஒரு ஆசிரியர்"  - எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும், மணிச்சுடர் நாளிதழில் ஆசிரியராகவும் இருந்து சமுதாயத்திற்கு அற்புதமான அரிய சேவை ஆற்றிய சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்களை, சென்னை ராயப்பேட்டையில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் நான் முதல்முதலாக நேரில் சந்தித்து பேசியது இன்னும் என் மனதில் பசுமையாக நினைவில் உள்ளது. ஒரு அரசியல் தலைவராக அவரை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். அவரது அழகு தமிழ் சொற்பொழிவை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ரசித்து வியப்பு அடைந்து இருக்கிறேன். இருந்தாலும், ஒரு பத்திரிகையாளராக அவரை நேரில் சந்தித்து பேசியது, சென்னை மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் தான். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டபோது, வேலூர் மாவட்ட செய்தியாளர் ஒருவர் அவசியம் தேவை என்ற ஆர்வம் சிராஜுல் மில்லத்திற்கு இருந்தது. இதை அறிந்த மாலை முரசு வேலூர் கிளையின் ஆசிரியர் மசூத் அகமது அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்துக் கொண்டு சென்றார். 

சென்னை வந்து அடைந்ததும், இருவரும் நேராக ராயப்பேட்டையில் இருந்த மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது செய்தி அறையில், பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மசூத் அகமது அவர்களுக்கு நன்று அறிமுகம் ஆனவர்கள். அவர்கள் சந்தித்து பேசிய மசூத் அகமது, என்னை அறிமுகம் செய்துவைத்து, 'பத்திரிகைத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் இவர். அதன் காரணமாக சிராஜுல் மில்லத் அவர்களிடம் அறிமுகம் செய்துவைக்க அழைத்து வந்தேன்' என்று கூறினார். மேலும் என்னைப் பற்றி அவர்கள் வியப்பு அடையும் வகையில் பல தகவல்களை கூறி, என்னையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். 

சிராஜுல் மில்லத்துடன் சந்திப்பு: 

மணிச்சுடர் செய்தி அறை பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தபோது, காலை 11 மணி அளவில் மணிச்சுடர் நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அலுவலகத்திற்கு வந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்போது செய்திப்பிரிவுக்கு பொறுப்பாசிரியராக இருந்த ராமதாஸ் அவர்கள், அன்றைய முக்கிய செய்தி மற்றும் பிற தகவல்களை கூற சிராஜுல் மில்லத்தின் அறைக்கு சென்றார். ஒரு அரை மணி நேரம் சென்றபிறகு, நானும் மசூத் அகமது அவர்களும், சிராஜுல் மில்லத் அவர்களை சந்திக்க அவரது அறைக்குச் சென்றோம். 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என்ற கூறியபடி, இருவரும் அறைக்குள் நுழைந்தபோது, அதற்கு மிகவும் அற்புதமான முறையில் வாலைக்கும் ஸலாம் (வரஹ்) என்று சிராஜுல் மில்லத் அவர்கள் பதில் கூறியதுடன் எங்கள் இருவரையும் இருக்கையில் அமருங்கள் என கூறினார். அப்போது நான் கல்லூரி இளைஞன் என்பதால், கொஞ்சம் தயகத்துடன் நின்றுக் கொண்டே இருந்தேன். இதனை கவனித்த அவர், தம்பி இருக்கையில் அமர்ந்து பேசுங்கள் என கூறியபோது உண்மையில் எனக்கு வியப்பு ஏற்பட்டது. நான் பார்த்த பல அரசியல் தலைவர்கள், தங்களை சந்திக்க வரும் யாரையும், குறிப்பாக இளைஞர்களை இருக்கையில் அமர வைத்து அழகு பார்ப்பது இல்லை. எனவே, சிராஜுல் மில்லத் அவர்களின் அந்த அழகிய செயல், என்னை அவர் மீது இருந்த அன்பை மேலும் அதிரிக்கச் செய்தது. 

பின்னர், மணிச்சுடர் நாளிதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம், எத்தகைய செய்திகள், தகவல்கள் அதில் வர இருக்கிறது என மாலை முரசு மசூத் அகமது அவர்களிடம் கூறிக் கொண்டு இருந்த சிராஜுத் மில்லத், என்னைப் பார்த்து, 'நீங்கள் வேலூர் மாவட்ட நிருபராக இருந்துவிடுங்களேன். பத்திரிகை துறையில் ஆர்வம் உள்ள உங்களைப் போன்ற இஸ்லாமிய இளைஞர்கள் தான் சமுதாயத்திற்கு மிகவும் தேவை’ என கூறி இன்னும் என்னை வியப்புக்கு மேல் வியப்பு அடையச் செய்தார். சிராஜுத் மில்லத் அவர்களின் இந்த அன்பு கட்டளை மற்றும் ஆலோசனை எனக்கு மிகவும் பிடித்து இருந்தால், மணிச்சுடர் நாளிதழுக்கு வேலூர் மாவட்டத்தின் முதல் செய்தியாளராக நான் சிறிது காலம் சேவை ஆற்றிறேன். அத்துடன் மணிச்சுடர் நாளிதழை சமுதாய மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையும் மிகச் சிறந்த முறையில் நான் செய்து முடித்தேன். 

அருமையான ஆலோசனைகள்:

இப்படி நான் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, பணி ஒன்று கிடைக்கப்பெற்று டெல்லிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. எனவே, வேலூர் மாவட்ட செய்தியாளராக நான் தொடர்ந்து பணிபுரிய முடியவில்லை. டெல்லியில் இருந்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றிபெற்று சிராஜுல் மில்லத் அவர்கள் டெல்லிக்கு வந்தபோது, தமிழ்நாடு இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் பார்த்து மிகவும் வியப்பு அடைந்த அவர், சென்னைக்கு வந்தால், தம்மை அவசியம் சந்திக்க வாருங்கள் என அன்பு கட்டளையிட்டார். பின்னர், டெல்லி பணியில் இருந்து விலகி, மீண்டும் சென்னைக்கு வந்தபோது, சென்னை வாலஸ் கார்டனில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலகத்தில் சிராஜுல் மில்லத் அவர்களை சந்தித்தேன். அப்போது, மணிச்சுடர் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதுடன், மணிச்சுடர் செய்திப்பிரிவு குழுவிலும் என்னை சேர்த்துவிட்டார். 

இஸ்லாமிய செய்திகள், இஸ்லாமிய கட்டுரைகள் அதிகம் மணிச்சுடரில் இடம்பெற வேண்டும் என பெரிதும் விரும்பிய சிராஜுல் மில்லத் அவர்கள், அந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்து, பல்வேறு ஆங்கில மற்றும் உர்தூ இதழ்களில் வரும் இஸ்லாமிய செய்திகளை அழகிய முறையில் மொழிபெயர்த்து வெளியிட ஆலோசனைகளை கூறினார். அவரது ஆலோசனையின்படி, நான் அதை மொழிபெயர்த்து கொடுக்கும்போது, என்னுடைய மொழி நடை ஆகியவற்றை பார்த்தும் படித்தும் பெரிதும் பாராட்டி மகிழ்ச்சி அடைந்ததுடன், சில ஆலோசனைகளையும் கூறி, இந்த வகையில் எழுதினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என கூறுவார். எந்த ஒரு செய்தியும் அனைவரும் புரியும்படி, குறிப்பாக, சாதாரண மக்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் புரிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும். அப்படி தர வேண்டும் என அவர் கூறுவார். அவரது இந்த ஆலோசனை என்னை எழுத்துத்துறையில் ஓரளவுக்கு தற்போது நிலைத்து நிற்க பெரிதும் உதவியது என்றே கூறலாம். 

கே.எம்..கே.வுடன் சந்திப்பு:

வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில் தான், தற்போதைய ஆசிரியரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை நான் முதன் முதலாக சந்திதேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்துவைத்த, சிராஜுல் மில்லத் அவர்கள் அஜீஸ் தம்பி, ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர். நல்லவிதமாக சமுதாயச் செய்திகளை எழுதுகிறார். மொழிப்பெயர்ப்பு கூற குறை இல்லாத வகையில் உள்ளது என கூறி, என்னை மகிழ்ச்சி அடையச் செய்தார். வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில் கே.எம்.கே. அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், இன்னும் தொடர்ந்து மணிச்சுடர் நாளிதழில் பல்வேறு கட்டுரைகள், செய்திகள் எழுதுவதற்கு எனக்கு ஊக்கமாக இருப்பது வியப்பாகவே உள்ளது. 

சிறந்த பண்பாளர்:

வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில் சிராஜுல் மில்லத் இருக்கும்போது, பிற்பகல் உணவு அவருக்கு வீட்டில் இருந்து வரும். அந்த உணவை அவர் தனியாக அமர்ந்து ஒருபோதும் சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை. தம்முடன் யாரையாது ஒருவரை அமர வைத்துக் கொண்டு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டே இருந்தார். அலுவலகத்தில் நான் இருப்பதை அறிந்துகொண்டால், என்னை அழைத்து, பிற்பகல் உணவை தம்முடைய அமர்ந்து சாப்பிட வேண்டும் என அன்பு கட்டளை போடுவார். அந்த வீட்டு உணவு, சுவையான உணவாக இருக்கும். ஏக இறைவனுக்கு மட்டுமல்லாமல், சிராஜுல் மில்லத் அவர்களுக்கு நன்றி கூறி, பல சமயங்களில் அவரது வீட்டு உணவை நான் சாப்பிட்டு மகிழ்ந்து இருக்கிறேன். 

ஒருவரிடம் இருக்கும் திறமையை அறிந்துகொண்டால், அதை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும் என்ற சிறந்த பண்பு சிராஜுல் மில்லத் அவர்களிடம் இருந்ததை நான் கண்டு இருக்கிறேன். அரசியல் நிலைப்பாடுகளில், கொள்கை வேறுபாடுகளில் மாற்றம் இருந்தாலும், எதிர் அணியில் இருக்கும் ஒருவர் திறமைசாலியாக இருந்தால், அவரிடம் இருக்கும் திறமைகள் மற்றும் நல்ல பண்புகளை மற்றவர்களிடம் கூறி, மகிழ்ச்சி அடையும் சிறந்த பண்பாளர்தான் சிராஜுல் மில்லத் அவர்கள் என்பதை நான் பலமுறை நேரில் பார்த்து இருக்கிறேன். 

மணிச்சுடர் நாளிதழ் இன்று பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில், வந்துகொண்டு இருக்கிறது என்றால், அதற்கு, சிராஜுல் மில்லத் அவர்கள் போட்ட விதை, ஆற்றிய பணிகள், கடுமையான உழைப்பு, சமுதாய மக்கள் மத்தியில் மணிச்சுடர் நாளிதழின் அவசியம் ஆகியவை குறித்து எடுத்துக் கூறிய பண்பு என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம். சிராஜுல் மில்லத் அழகிய தமிழில் பேசும் தமிழராக மட்டும் இருக்காமல், அனைத்து மொழிகளையும் மதிக்கும் பண்பாளராக இருந்து அவற்றை ஊக்குவித்து வந்தார். குறிப்பாக, உர்தூ மொழி மீது அவர் அதிகளவு காதல் கொண்டு இருந்தார். அதன் காரணமாக தான், உர்தூ மொழிகளில் வரும் செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை மணிச்சுடர் நாளிதழில் வெளியிட்டு வந்தார். சிராஜுல் மில்லத் அவர்கள் காட்டிய அந்த பாதையில் தற்போது மணிச்சுடர் பயணித்துக் கொண்டு இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. 

===================

No comments: