வலிமையான நம்பிக்கை....!
தமிழகத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துளிலும் ஒவ்வொரு ஜூம்மா தொழுகைக்கு முன்பு இமாம் சாஹிப் அழகிய தமிழ் அல்லது உர்தூ மொழியில் பயான் (பிரசங்கம்) செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஜூம்மா சொற்பொழிவுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஒருசிலரை தவிர மற்ற இமாம்கள் அனைவரும் மிக அற்புதமான முறையில் பயான் செய்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாறு, திருக்குர்ஆன் போதிக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி அழகிய இஸ்லாமிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அதன்மூலம் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த வாழ்க்கை நெறியை நபித் தோழர்கள் எப்படி உறுதியாக கடைப்பித்தார்கள். அதன்மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் படிப்பினை என்ன? இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை, இஸ்லாமிய சமூக மேம்பாடு என பல்வேறு தலைப்புகளில் அழகிய முறையில் ஆலிம் பெருமக்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை கேட்கும்போது, உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைகிறது. அன்றைய தினம் முழுவதும் ஜூம்மாவில் மெளலவி சாஹிப் ஆற்றிய உரை அடிக்கடி மனக் கண் முன்பு வந்து செல்கிறது.
வலிமையான நம்பிக்கை:
வழக்கம்போல் இந்த வாரம் ஜூம்மா தொழுகைக்கு சேப்பாக்கம் மஸ்ஜித்-எ-குத்தூஸியாவிற்கு சென்றிருந்தேன்.
இமாம் சாஹிப் எளிமையான உர்தூ மொழியில் ஜூம்மா உரை நிகழ்த்தி கொண்டிருந்தார்.
இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை, இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
குறிப்பாக, முஹரம், ஸபர் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களைச் செய்வது சரியல்ல என்ற தப்பான எண்ணங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதை சுட்டிக் காட்டி பேசிய இமாம் சாஹிப், நமது நம்பிக்கையை வலிமையானதாக மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நம்பிக்கை வலிமையாக இருக்க வேண்டும் எனில் முஸ்லிம்கள் தங்களுடைய செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையில் மூட நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏக இறைவன் வழங்கிய அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. கெட்ட நாள், கெட்ட நேரம் என்பது இஸ்லாத்தில் ஒருபோதும் இல்லை. அனைத்து நாட்களிலும் ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு காரியங்களை தொடங்க வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஏக இறைவன் இலேசாக்கி வைப்பான் என்று உறுதியாக நம்ப வேண்டும். இப்படி நம்பிக்கை கொள்வதுதான் வலிமையான நம்பிக்கையாகும். இன்றில் இருந்து உங்கள் ஈமானை உறுதிப்படுத்த உங்களை தயார்படுத்திக் கொண்டு பணிகளை ஆற்றுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வலிமையான நம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை கொண்டு வந்து நிறுத்தும் என இமாம் சாஹிப் கூறியதை கேட்டபோது உண்மையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. சிந்தனைகள் அழகிய முறையில் சிறகடித்து பறந்தன.
வேதனை அளிக்கும் செயல்:
இமாம் சாஹிப் வலிமையான நம்பிக்கை குறித்து அழகிய உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை கவனித்தேன்.
அவர் வாட்ஸ்-அப்பில் சார்ட் செய்து கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
பள்ளிவாசலில் ஜூம்மாவின் கண்ணியத்தை பின்பற்றாமல், ஜூம்மா உரை கேட்பதை விட, வாட்ஸ்-அப், முகநூலில் அதிக கவனம் செலுத்தும் இதுபோன்ற சில சகோதரர்களை என்ன செய்வது?
அரை மணி நேர சொற்பொழிவை கேட்பதை விட, சமூக வலைத்தளத்தில் மூழ்கிவிடுவது சரியான செயலாக இருக்குமா? ஜூம்மா தொழுகைக்குப் பிறகு, வீட்டிற்கு சென்று வந்த தகவல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யலாமே.
இதுபோன்ற செயல்கள் மூலம் எப்படி வலிமையான நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் மலரும்? வலிமையான நம்பிக்கை மலர வேண்டும் எனில், முஸ்லிம்கள் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் மட்டுமே பலன் கிடைக்கும்.
இப்படி சிந்தனைகளை மனதில் அசைப் போட்டுக் கொண்டு, மஸ்ஜித்தில் வெளியே வந்தேன். அத்துடன் அடுத்த ஜூம்மாவில் மெளலவி சாஹிப் ஆற்ற போகும் உரை கேட்க மனம் ஆவல் கொண்டது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment