டெல்லியில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும்....!
- ஜாவீத் -
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, வெறுப்பு பிரச்சாரம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சிறுபான்மையின மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முஸ்லிம்கள் எப்போதும் அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு காரணம் கூறி, முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை பா.ஜ்.க. ஆளும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதனால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வசித்த பல முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டதால், அவர்கள் வேதனையின் உச்சத்திற்கு சென்று, அமைதியை இழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் டெல்லியில் வசிக்கும் முஸ்லிம்களும் தற்போது பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வகுப்புவாத கலவரங்கள் அச்சம்:
டெல்லியில் உள்ள கிரவுண்ட் ஜீரோ ஜாமியா நகரின் மையப் பகுதி ஆகும். இது வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் போது நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கு தற்காலிக புகலிடமாக இருந்து வருகிறது. அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், மதகுருமார்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் உட்பட 10 உள்ளூர் தலைவர்களின் கூற்றுப்படி, கட்டுமானத்தின் விலை ஏற்றம் இருந்தபோதிலும், அதைப் பற்றி கவலைப்படாமல், பாதுகாப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து, இந்த பகுதியில் இன்னும் அதிகமான முஸ்லிம்கள் திரள்வதால், சுற்றுப்புறம் நிரம்பி வழிகிறது.
வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முஸ்லிம்களை குறிவைத்து கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில், அங்குள்ள இரண்டாவது மாடியில் வசித்து வந்த நசீனும் அவரது கணவர் , டோஃபிக்கும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். அப்போது மாடியில் இருந்து டோஃபிக் வன்முறை கும்பலால் தள்ளப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிக்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். ஆனால் உயிர் பிழைத்தாலும், ஒரு நிரந்தர தளர்ச்சியுடன் இருக்கும் அவர், கிட்டத்தட்ட 3 வருடங்கள் குணமடைந்த பிறகு தெருவில் துணிகளை விற்கும் வேலைக்குத் திரும்ப முடிந்தது. கலவரங்களுக்குப் பிறகு, தம்பதியினர் லோனி பகுதிக்கு குடிபெயர்ந்தனர், ஏழை உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ள இப்பகுதி, கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட மிகவும் தொலைதூரப் பகுதியாகும். தம்முடைய நிலை குறித்து கருத்து கூறியுள்ள டோஃபிக், "நான் ஏற்கனவே வசித்த அந்தப் பகுதிக்கு திரும்பிச் செல்லமாட்டேன். முஸ்லிம்கள் மத்தியில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொடிய கலவரத்தைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சின் அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்தியத் தலைநகரில் உள்ள முஸ்லிம்கள், பாதுகாப்பைத் தேடி நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பால் உள்ள இடங்களுக்கு சென்று கூடி வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலைமை தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பிரிவினை கணிசமாக அதிகரிப்பு:
"ஒரு முஸ்லீம் எவ்வளவு தைரியமாக இருந்தாலும், இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதியில் இருந்து அவர்கள் நகர வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் ஒரு கும்பல் வந்தால், தங்களை தாக்கினால், உண்மையில் எவ்வளவு தைரியமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பும் தெற்கு டெல்லியில் உள்ள ரியல் எஸ்டேட் முகவரான ரேஸ் கான், "முஸ்லிம் வாடிக்கையாளர்கள் ஜாமியா நகர் போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வீடுகளையே கோருகின்றனர்" என்றும் கூறுகிறார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த பத்தாண்டுகளில் தேசிய அளவில் பிரிவினை கணிசமாக அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் முஸ்லீம் மக்கள்தொகையில் நீண்டகால களப்பணிகளை மேற்பார்வையிட்ட லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அரசியல் மானுடவியலாளர் ரஃபேல் சுஸ்விண்ட் கூறியுள்ளார். 2014இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் கீழ் அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்பு, இந்த போக்கின் "முக்கிய இயக்கி" என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் மானுடவியலாளர் ரஃபேல் சுஸ்விண்டின் இந்த கூற்றை இந்திய முஸ்லிம் தலைவர்களும் ஆதரித்துள்ளனர். இது உண்மை என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜாமியா நகரில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் இமாமாக பணியாற்றும் எம்.டி.சாஹில், "கடந்த , நான்கைந்து ஆண்டுகளில் தனது மஸ்ஜித்திற்கு அதிகாலை பஜர் தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், இது அங்குள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகை உயர்வை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஜாமியா நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி ஊழியரான சையத் சயீத் ஹசன், 2020 கலவரம் டெல்லியில் மதவெறி மூட்டுவதற்கான ஒரு பெரிய உந்துதல் காரணி என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இதில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் ஆவார்கள்.
வெறுப்புப் பேச்சில் எழுச்சி:
இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம், குற்றத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் அரசு நிறுவனம், சமூகங்களுக்கு எதிரான இலக்கு வன்முறை பற்றிய பதிவுகளை வைத்திருப்பதில்லை. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்த முந்தைய ஒன்பது ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2014 மற்றும் 2022 க்கு இடையில் வகுப்புவாத தோற்றம் கொண்ட வருடாந்திர கலவரங்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான, ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்பின் ஆய்வு மையத்தின் சுயாதீன வல்லுநர்கள், 2023இன் முதல் பாதியில் 255 சம்பவங்களில் இருந்து 2023 இன் இரண்டாம் பாதியில் 413 ஆக, முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக அரசியல்வாதிகள் மற்றும் துணைக் குழுக்கள் இந்த போக்குக்கு முக்கிய காரணம் என்று சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. முன்பு எப்படி வலதுசாரி "பசு காவலர்கள்", பாஜகவுடன் தொடர்பு கொண்டவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கொலைவெறி கும்பல்களை எப்படி வழிநடத்தினார்கள் என்பது பற்றி ராய்ஸ்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் மோடி பிரச்சாரம் செய்தபோது, முஸ்லிம்களை "அதிக குழந்தைகளை" பெற்ற "ஊடுருவிகள்" என்று தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.
எனினும், பாஜக அரசாங்கம் இந்து-முஸ்லிம் என பாகுபாடு காட்டவில்லை என்றும், அதன் பல வறுமை எதிர்ப்பு திட்டங்கள் இந்தியாவில் உள்ள ஏழ்மையான குழுக்களில் உள்ள முஸ்லீம்களுக்கு பயனளிக்கின்றன என்றும் அக்கட்சியின் முன்னணி முஸ்லிம் தலைவர் சித்திக் கூறியுள்ளார். எனினும் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகும், குறைந்தது எட்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரச சார்பற்ற சங்கம் கடந்த ஜூலை 5யில் அறிக்கை மூலம் தெரிவித்தது.
எண்ணிக்கையில் பாதுகாப்பு:
ஜாமியா நகர் என்பது ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதியாகும். இது 2020 போராட்டங்களின் மையமாக இருந்தது. மாநில தேர்தல் தரவுகளின்படி, தென்கிழக்கு டெல்லியில் பல முஸ்லீம் சுற்றுப்புறங்கள் மற்றும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதியாக இது உள்ளது. தற்போது வளர்ந்து வரும் வளர்ச்சியின் அடையாளமாக, அப்பகுதியின் குறுகிய பாதைகளில் புதிதாகக் கட்டப்பட்ட மழலையர் பள்ளிகளும் இருந்து வருகின்றன. பெரும்பாலான முஸ்லீம் பகுதிகள் நன்கு வளர்ச்சியடையவில்லை. இந்தியப் பகுதிகளை ஆய்வு செய்த பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் இந்தியப் பொருளாதார வல்லுனர்களின் 2023ஆம் ஆண்டு ஆய்வில், தண்ணீர் மற்றும் பள்ளிகள் போன்ற பொதுச் சேவைகள் முஸ்லீம்களிடையே பிரபலமான சுற்றுப்புறங்களில் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றும், அத்தகைய பகுதிகளில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் கல்வி குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டது.
இப்படி பல்வேறு தொல்லைகள், சிரமங்களைச் சந்தித்தாலும் "மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுவதை விட தனித்தனி பகுதிகளில் வாழ்வது நல்லது என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்" என்று மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர் முஜாஹீத் நஃபீஸ் கூறியுள்ளார்.
சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கை:
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் அசாம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே, முஸ்லிம்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. தலைநகர் டெல்லியில் கூட, அவர்கள், அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தங்களுடைய தாய் நாட்டை உயிருக்கு மேலாக நேசிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் உண்மையாக பங்கேற்று, தங்களுடைய கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். அச்சம், பயம் இல்லாத அமைதியான வாழ்க்கை தங்களுடைய கிடைத்தால், முஸ்லிம்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றும் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் பலன் அடைவார்கள். நாடும் உண்மையான வளர்ச்சியை எட்டும். வெறுப்பின் மூலம் தேசத்திற்கு முன்னேற்றம் கிடைக்காது என்பதை, இந்துத்துவா ஆதரவாளர்கள் உணர வேண்டும். அன்பு, சகோதரத்துவம் வளர்ச்சியின் அடையாளம் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
================================
No comments:
Post a Comment