Tuesday, October 8, 2024

உங்களுக்கு நீங்களே .....!

உங்களுக்கு நீங்களே மிகப்பெரிய போட்டியாளர்!

உலகில் நீங்கள் மற்றவர்களைப் புகழ்வதில் தவறில்லை. யாராவது நல்ல வேலையைச் செய்தால் அவரை ஊக்குவிக்கலாம். ஆனால் அவருடன் உங்களை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். உங்கள் போட்டி உங்களுடனே என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உண்மையான ஒப்பீடு, நீங்கள் நேற்று என்னவாக இருந்தீர்கள், இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. 

பொதுவாக மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட போக்கு உள்ளது. அதாவது ஒப்பிடுவது. தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்ற மனநிலையில் பெரும்பாலான மாணவர்கள் இருந்து வருகிறார்கள். ஆரோக்கியமான போட்டி நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் ஒப்பீடு மற்றும் போட்டி என்ற பந்தயத்தில் நல்லது, கெட்டது என்ற வித்தியாசத்தை மறப்பது சரியல்ல. சில சந்தர்ப்பங்களில் ஒப்பிடும் பழக்கம் இளைஞர்களிடையே எதிர்மறையான போக்குகளை தூண்டிவிடும். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்தும்போது உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி ஏற்படும். கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களின் தற்போதைய பதிப்பு முந்தைய பதிப்பை விட சிறந்ததா? என அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள். 

சுய ஒப்பீட்டின் பலன்கள்:

உங்களுடைய முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? அதாவது ஒன்று அல்லது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, உங்கள் நிலை என்ன? உங்களுக்கு வயது ஏற ஏற, உங்கள் வாழ்க்கை முறையும், சூழ்நிலைகளும் மாறுகின்றன. மேலும் நீங்கள் தொடர்ந்து வாழ்க்கை முறையை மாற்றியமைத்து மாறுகிறீர்கள். இது இயற்கையான மாற்றம்தான். ஆனால் உங்கள் முந்தைய வாழ்க்கை நிலையை, உங்களை நீங்களே ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​நீங்கள் முன்பை விட புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் ஆகிவிட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். உங்கள் தற்போதைய நிலை மற்றும் முந்தைய நிலையை விடவும், எதிர்கால வாழ்க்கை சூழல் கடந்த மற்றும் நிகழ்காலத்தை விடவும் சிறந்ததாக மாற்ற முயற்சிக்கும்போது, ​​அது சரியான மற்றும் ஆரோக்கியமான ஒப்பீடாக இருக்கும். 

எனவே, இது சுய ஒப்பீடு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான முதல் படியாகும். நீங்கள் செய்யும் தொழில் அல்லது பணியில் குறைந்த அளவு வெற்றி பெற்றிருந்தால், அடுத்த நிலைக்கு கடினமாக உழைக்க வேண்டும். இப்படி உங்களை நீங்களே ஒப்பிட்டுக் கொண்டு, செயல்பட்டால், நிச்சயம் உங்கள் தொழில், அல்லது பணியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு, நல்ல பலன் கிடைக்கும். உங்களை உங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டதன் விளைவு இது. உங்களுடன் போட்டியிட்டதன் விளைவு இது. இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருப்பீர்கள். ஒரு நபர் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடிவு செய்தால், அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது.

உண்மையான போட்டி:

உங்கள் உண்மையான, நிறைவான வெற்றிக்கு உங்கள் சுயம்தான், உங்கள் பணிகள்தான் பலன் அளிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நேற்று எப்படி இருந்தீர்கள் என்பதை மனதில் கொண்டு அந்த வகையில் நேற்றைய அந்த நபரே (நீங்களே) உங்கள் உண்மையான போட்டி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். உறங்கச் செல்வதற்கு முன், ஒரு எளிய கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நேற்றையதை விட இன்று நான் ஏதாவது சிறப்பாகச் செய்திருக்கிறேனா? இன்று நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் அல்லது நீங்கள் என்ன செய்ய மறந்துவிட்டீர்கள், அல்லது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் செய்ய முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து, அடுத்த நாள் உங்களை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பதைத் திட்டமிடுங்கள்.

உங்கள் உண்மையான போட்டி உங்களுடனேயே உள்ளது. மேலும் உங்களுடன் போட்டியிடுவதற்கான ஒரே வழி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஒரு "செயல் திட்டத்தை" உருவாக்குவதுதான். இலக்கு பெரியதாகவும் கடினமாகவும் இருந்தால், அதை நோக்கி சிறிய படிகளை எடுத்து வையுங்கள். எதிர்மறை எண்ணத்தை அகற்றி செயல்படுங்கள். "என்னால் முடியும்", "நான் வலிமையாக இருக்கிறேன். இதை என்னால் எளிதாக செய்ய முடியும், கொஞ்சம் கவனம் தேவை" என்று எப்போதும் உங்கள் மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.

ஆரோக்கியமான பழக்கம்:

வேறொருவருடன் ஒப்பிட்டு போட்டியிடுவதை விட, உங்களை நீங்களே அடித்துக்கொள்வது, உங்களை மேம்படுத்திக் கொள்வது, உங்களோடு ஒப்பிடுவது மற்றும் போட்டியிடுவது சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் போட்டியிடுவது உங்களைச் சிறப்பாகச் செயல்பட செய்யாது. மாறாக பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, நீங்கள் உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாகவும் சிறப்பாகவும் செய்ய முயற்சிக்க வேண்டும். நீங்கள் யார்? நீங்கள் என்ன ஆவீர்கள்? என்பதில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நேற்றையதை விட இன்று நீங்கள் கொஞ்சம் சிறப்பாக இருந்தால், நீங்கள் உண்மையான வெற்றியை நோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம். 

நம்பிக்கையை இழக்காதீர்கள்:

வாழ்க்கையில் நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. ஏக இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு நாளும் நமது காரியங்களை நம்பிக்கையோடு தொடங்க வேண்டும். நம்மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து, ஒரு பணியில் ஈடுபட்டால், அந்த பணி, முன்எப்போதும் இல்லாத அளவுக்கும் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். உலகில் சாதனை நிகழ்த்தியவர்களின் வரலாறுகளைப் படித்தால், சாதாரண நிலையில் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர்கள், தங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, தங்களை பிறருடன் ஒப்பீடு செய்யாமல், பணிகளை ஆற்றியதன் மூலம் வரலாற்று நாயகர்களாக மாறினார்கள் என்பது தான் உண்மையாகும். நம்மை நாமே ஒப்பிட்டுக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் நமது இலக்குகளை நோக்கிப் பயணம் செய்தால், நிச்சயம், நமது எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உருவாகி எப்போதும் நிலைத்து இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: