Tuesday, October 8, 2024

ஒரு முஸ்லிம் அமைச்சரின் சிறப்பான பணி....!

ஒரு முஸ்லிம் அமைச்சரின் சிறப்பான பணியால்  அனைத்துசமுதாய மக்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!

-  ஒரு சிறப்பு ரிப்போர்ட் - 

உலகில் வாழும் ஒருவருக்கு, ஒரு பொறுப்பு அல்லது பதவி கிடைக்கிறது என்றால், அந்த பதவியை அல்லது பொறுப்பை அவர் மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். தமக்கு கிடைத்து பொறுப்பு அல்லது பதவியை எப்படி நிறைவேற்றினார் என்பது குறித்து, அவர் ஏக இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியாக நம்பப்படும் நெறிமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே தான் எந்த பதவிக்கு வந்தாலும், அந்த பணிகளை சிறப்பான முறையில் ஆற்றும் வகையில், அனைத்து சமுதாய மக்களுக்கும் அதன்மூலம் பலன் கிடைக்கும் வகையில், இஸ்லாமியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றி, தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆற்றிவரும் பணிகள், மிகச் சிறப்பாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் ஜமீர் அகமது கான், செய்துவரும் சேவைகள், கர்நாடகா மாநில மக்களை மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பெருமை கொள்ளும் வகையில் கவர்ந்து வருகிறது. 

ஜமீர் அகமது கான்:

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1966ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த ஜமீர் அகமது கான், சாம்ராஜ்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். நேஷனல் டிராவல்ஸ் நிறுவனத்தை நிறுவிய பிபி பஷீர் அகமது கான், 1950களின் முற்பகுதியில் இறந்த பிறகு, அவரது மூத்த மகன் பி அதாவுல்லா கான் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இத்தகைய பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த ஜமீர் அகமது கான், எப்போதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதை தனது கடமையாகவும், பொறுப்பாகவும் நினைத்து வருகிறார். வக்பு வாரிய சொத்துகளை மிகச் சிறந்த முறையில் சமுதாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்., வக்பு சொத்துகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் செய்துவரும் பணிகளை கர்நாடக மாநில மக்கள் மட்டுமல்லாமல், பிற மாநில முஸ்லிம் சமுதாய மக்களும் பாராட்டி வருகிறார்கள். 

ஐந்து அற்புதமான திட்டங்கள்:

இப்படி மிகச் சிறப்பான முறையில் தனது பணிகளை ஆற்றிவரும் ஜமீர் அகமது கான், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில சிறுபான்மையின நலத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் மூலம் ஐந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து திட்டங்களும் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பலன் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. புதிய திட்டங்கள் தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஹஜ் துறை அமைச்சர் ரஹீம் கான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

15 புதிய மகளிர் கல்லூரிகள்:

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில்,  வக்பு வாரியத்தின் மூலம் கர்நாடகாவில் 15 புதிய மகளிர் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவித்த அமைச்சர் ஜமீர் அகமது கான், இதன்மூலம், கர்நாடக மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் மிகச் சிறந்த முறையில் உயர்கல்வி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 

சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள்: 

 மாநிலத்தில் உள்ள அனைத்து 242 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இலவச ஜனாஸா பெட்டிகள் (சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள்) வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இவை அனைத்தும் வக்பு மற்றும் முக்கிய முஸ்லிம் சமூக அமைப்புகள் மூலம் அளிக்கப்படும். 242 சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள் வழங்குவதன் மூலம், உள்நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடல் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரண்டு, மூன்று நாட்கள் உரிய முறையில் பாதுகாக்க முடியும். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்கள், இறந்தவரின் உடலை பார்க்க முடியும் என்றும் ஜமீர் அகமது கான் தெரிவித்தார். 

வக்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள்: 

கர்நாடகா வக்பு வாரியத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இது 'வக்பு ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்படும். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த வாகனத்தின் மதிப்பு சுமார் 40 லட்சமாகும். இந்த நவீன ஆம்புலன்ஸில் ஆக்சிஜன்  மற்றும் முதலுதவி கருவிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. செவிலியர் உள்ளிட்டோரும் நோயாளிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாய மக்களுக்கும் பலன் அளிக்கும் என்றும், தன்னுடைய சேவையை ஆற்றும் என்றும் ஜமீர் அகமது கான் நம்பிக்கை தெரிவித்தார். 

அந்த வாகன சேவை அறிமுகம் மூலம், இந்திய வரலாற்றில் முதல்முறையாக வக்பு வாரியத்தின் மூலம், இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகம் செய்து இருப்பது, கர்நாடகா வக்பு வாரியம் தான் என்ற பெருமையும் அந்த வாரியம் பெற்றுள்ளது. 

கல்வி உதவித் தொகை திட்டம்:

கர்நாடகாவில் வாழும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடர, கல்வி உதவித் தொகை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள், தங்களது கல்வியை இடையில் நிறுத்துவது இனி தடுக்கப்படும். அவர்கள் நல்ல உயர்கல்வியை பெற தற்போது வாய்ப்பு உருவாக்கியுள்ளது. 

மதரஸா மாணவர்களுக்கு நவீனக் கல்வி:

இதேபோன்று, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள்  அனைவரும் உலகக் கல்வியும் பெற வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக மதரஸா மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து, அவர்கள் 10வது வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறும் வகையில் புதிய முயற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆசிரியர், கணினி உள்ளிட்ட வசதிகளுடன் மதரஸா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மதரஸாக்களில் இருந்து கல்வி பயின்று ஆலிம், ஹாபிஸாக மாணவர்கள் வெளியே வருவதுடன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் அவர்கள் தேர்ச்சி பெற, தற்போது புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நூறு மதரஸாக்களுக்கு கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

பெருமை அளிக்கும் திட்டங்கள்:

விழாவில் ஐந்து திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கான், "கர்நாடகாவில் நாங்கள் புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம். தற்போது பொதுவாக சாதாரண ஆமபுலன்ஸ்களே உள்ளன . ஆனால் நாங்கள் வக்பு வாரியம் மூலம் ஏற்பாடு செய்துள்ள ஆம்புலன்ஸ்கள்,  நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள் ஆகும்.  அனைத்து மாவட்டங்களிலும் ஒரு ஆம்புலன்ஸ் என்ற வகையில் 30 மாவட்டங்களில் 30 வாகனங்களை நாம் கொடுத்து இருக்கிறோம். நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் இந்த வாகனத்தில் நிச்சயம் இருப்பார். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் எந்தவித பிரச்சினையும் உருவாகாத வகையில், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் சேவை ஆற்றுவார். இதேபோன்று, மாநிலத்தில் யாராவது மரணம் அடைந்துவிட்டால், அவரது உடல் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள் (freezer box) ஆகியவற்றை வழங்கி இருக்கிறோம். 

வக்பு வாரியத்தின் மூலம் மாநிலத்தில் ஆயிரத்து 30 மருத்துவ மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில், 100 மதரஸாக்களை தேர்வு செய்து, மார்க்கக் கல்வியுடன், உலக கல்வியையும் அளிக்கும் திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின்படி, 200 ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு உலகக் கல்வி பெற பணிகளை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின்படி, 5 ஆயிரம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதேபோன்று, ஜன்பாட்டினா சிட்டில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், ஆயிரத்து 200 குடும்ங்கள் வசிக்க கூடிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட உள்ளது. 

கர்நாடகாவில், முஸ்லிம் சமுதாயத்திற்காக மட்டுமல்லாமல், அனைத்து சகோதர சமுதாயத்திற்கும் பலன் அளிக்கும் வகையில் சிறுபான்மையின நலத்துறை தனது பணிகளை ஆற்றி வருகிறது. இதன்மூலம் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கான், இதற்காக சிறுபான்மையின நலத்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என போராடி பெற்று சிறப்பான முறையில் பணிகளில் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார். 

குவியும் பாராட்டுகள்:

கர்நாடக மாநில சிறுபான்மையனர் நலத்துறை அமைச்சர், ஜமீர் அகமது கான், ஆற்றிவரும் பணிகளை அம்மாநில முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள். சாதி, மதம், மொழி, இனம் என எதையும் பார்க்காமல், தாம் ஏற்றுக் கொண்டு அரசிலமைப்பு சட்ட உறுதிமொழிக்கு ஏற்ப, ஒரு அமைச்சர் பணியாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில், ஜமீர் அகமது கான் உறுதியுடன் இருந்து சேவை ஆற்றி வருகிறார். ஏக இறைவன் அவரது பணிகளை ஏற்றுக் கொள்ள நாமும் பாராட்டி துஆ செய்கிறோம். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: