"அழகிய மனிதநேய செயல்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை வென்ற காஷ்மீர் முஸ்லிம்கள்"
உலக மக்களின் சுற்றுலாச் சொர்க்கமாக இருந்துவரும் காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், கடந்த 22.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக 26 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் நேற்று (25.04.2025) வெள்ளிக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். பல இடங்களில் மெழுகுவர்த்தி பேரணியும் நடைபெற்றது.
நிலைமை இப்படி இருக்க, இந்த தாக்குதலை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்ப சில சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்திவிட்டதாகவும் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும், அந்த தாக்குதலுக்கு பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமும், முஸ்லிம்களும் தீவிரவாத செயல்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை. ஆதரிக்க போவதுமில்லை. அமைதி மார்க்கம் இஸ்லாம் அனைவரின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுரைகளை கூறுகிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது.
இதை சரியாக உணர்ந்துகொள்ளாமல், ஒருசிலர் செய்யும் தீவிரவாத செயல்களால், முஸ்லிம் சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடுகிறது. இப்படி சிலர் செய்யும் செயல்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எதிர்த்து கண்டிக்கிறது. பஹல்காம் தீவிரவாத சம்பவத்திற்கு எதிராக காஷ்மீரில் மட்டுமல்லாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதும் முஸ்லிம்கள் கண்டன குரல்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். மார்க்க அறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து முஸ்லிம்களும் இந்த பயங்கரவாத செயலுக்கு தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
சுற்றுலாப் பயணிகளை பாதுகாத்த காஷ்மீரிகள்:
இதுஒருபுறம் இருக்க, காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக பாதுகாத்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் காஷ்மீர் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வம் செலுத்தி, தங்களுடைய மனிதநேய கடமையை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள். இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை. பிரச்சினையை இந்து-முஸ்லிம் என்ற நோக்கத்தில் திசை திருப்ப ஊடகங்கள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அதையும் தாண்டி, காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த அற்புதமான அழகிய செயல்கள் தற்போது உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது.
முஸ்லிம்களின் அழகிய செயல்களை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பத்திரமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள் வாக்குமூலமாக தற்போது தந்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக கேரளவைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழக்க, அவரது மகள் ஆரத்தி மேனனுக்கு காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் முசாஃபிர் மற்றும் சமீர் ஆகிய இரண்டு பேர் செய்த மனிதநேய உதவிகளை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என ஆரத்தி மேனன் கூறியது மட்டுமல்லாமல், தனக்கு இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் கிடைத்து இருப்பதாகவும், நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழக சுற்றுலாப் பயணிகள்:
இதேபோன்று, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சென்னை திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர், தங்களை பாதுகாத்து தங்க வைத்தது முஸ்லிம்கள் தான் என கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 'நாங்கள் தங்கி இருந்தது முஸ்லிம்களின் இடத்தில் தான் என்றும், அவர்கள் அனைவரும் எங்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்கள் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூறியுள்ளனர்.
இந்து-முஸ்லிம் என்ற பிரச்சினையே காஷ்மீரில் இல்லை. அவர்கள் அனைவரும் மனிதநேயம் மிக்க நல்ல முஸ்லிம்கள். எங்களை இந்துக்கள் என்ற நோக்கத்தில் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்படி பார்த்து எங்களை நடத்தவில்லை. நல்ல அன்புடன் பழகி எங்களை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும், தமிழகம் செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் தான். சில ஊடகங்களில் வெளிவந்த கற்பனை கதைகளை போல் இல்லாமல், காஷ்மீர் முஸ்லிம்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், நேசம் மிக்கவர்கள். குறிப்பாக மனிதநேயத்துடன் உதவிச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் என தமிழக சுற்றுலாப் பயணிகள் புகழாரம் சுட்டியுள்ளனர்.
வீடுகளில் தங்கவைத்து விருந்து:
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, பதற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமும், தங்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை தங்க வைத்ததுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளனர். ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல உணவு விருந்து அளித்து பயத்தையும் பதற்றத்தையும் போக்க தேவையான பணிகளை காஷ்மீர் முஸ்லிம்கள் செய்துள்ளனர்.
அத்துடன், பலர், பேருந்துகளில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றை வழங்கி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருசில காஷ்மீர் இளைஞர்கள் வீரத்துடன் செயல்பட்டு, தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பலரை தங்களுடைய முதுகுகளில் தூக்கிக் கொண்டு, ஓடோடிச் சென்று, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற காணொளிகளையும் நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு டாக்டர் ஆர்.நஜீப் தலைமையிலான முஸ்லிம் மருத்துவர்கள் குழு ஒன்று, ஆனந்த்நாக்கில் உள்ள ஜி.எம்.சி. மருத்துவமனையில் இரவு பகல் என பார்க்காமல் மருத்து உதவிகளை வழங்கினார்கள். தற்போது அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற பல மனிதநேயச் செயல்கள், பணிகள் காஷ்மீர் முஸ்லிம்களால் செய்யப்பட்டுள்ளது.
மூடி மறைக்க சதி:
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த மனிதநேயச் செயல்கள், பணிகள், ஆகியவற்றை மறைக்க சதி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்த வேண்டும் என்ற மிகவும் கெட்ட எண்ணத்தில் சில ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
காஷ்மீர் முஸ்லிம்கள் செய்த மனிதநேயச் செயல்களும் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அவர்கள் ஆற்றியப் பணிகளும் மறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது காஷ்மீர் முஸ்லிம்கள் ஆற்றிய அற்புதமான மனிதநேயச் செயல்கள், பணிகள் அனைவரும் அறிந்து வியப்பு அடைந்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். காஷ்மீர் முஸ்லிம்கள் குறித்து தாங்கள் தப்பாக எண்ணிக் கொண்டோம் என அவர்கள் வேதனை அடைகிறார்கள்.
எவ்வளவு தான் உண்மையை மூடி மறைத்தாலும், அது ஒருநாள் நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். வந்தே தீரும் என்பது தான் உண்மையாகும். காஷ்மீர் முஸ்லிம்களின் விவகாரத்தில் தற்போது அது தான் நடந்து இருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்களின் மனிதநேயச் செயல்கள், அழகிய பணிகள் இனி உலகம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும். அந்த அழகிய அற்புதமான சொர்க்கப் பூமி, இனி எப்போதும் சொர்க்கப் பூமியாகவே இருக்க வேண்டும். அதன் இயற்கை அழகை காண சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம், தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான வருவாயை காஷ்மீர் முஸ்லிம்கள் பெற்று அமைதியாக வாழ வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment