Wednesday, April 16, 2025

கோழிக்கோட்டில் நடந்த மெகா பேரணி....!

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோழிக்கோட்டில் நடந்த மெகா பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு....!

ஒன்றிய அரசின் சதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் நியாயமான நீதி வழங்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு....!!

கோழிக்கோடு,ஏப்.17-வக்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் வக்பு என்றே பெயரை நீக்கிவிட்டு, உமீத் (UMEED) என்ற புதிய பெயரை சூட்டி, இந்தியாவில் இஸ்லாமியர்களின் அடையாளங்களை முற்றிலும் அகற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து நியாயமான நீதி வழங்கும் என இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 16.04.2025 புதன்கிழமையன்று, மெகா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று ஒன்றிய அரசுகக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.

சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் வேண்டுகோள்:

கூட்டத்தில் பேசிய கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள்  கேரளாவில் அரசியல் ஆதாயத்திற்காக முனம்பம் பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப்-ன் முதுகெலும்பான இரண்டு சிறுபான்மை சமூகங்களை பாஜக மற்றும் சிபிஎம் மோத வைக்கும் திட்டத்தை கிறிஸ்தவ சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் பாஜக, சிபிஎம் முயற்சிக்கு கிறிஸ்துவர்கள் ஏமாறக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினால் முனம்பம் பிரச்சினை தீர்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,  அவர்கள் அதைச் செய்ய முயற்சிப்பார்கள் என்று தாங்கள் இன்னும் நம்புவதாகவும் தங்ஙள் தெரிவித்தார். 

இருப்பினும், பாஜக தலைமையிலான மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் அரசும் முனம்பத்தை ஒரு அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றி, அரசியல் ஆதாயங்களுக்காக பெனால்டி ஷூட் அவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளன என்று அவர் சாடினார்.

பி.கே. குஞ்ஞாலிகுட்டி  சாடல்

கூட்டத்தில் பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலி குட்டி, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பிரிக்கும் சிபிஎம் முயற்சியை இ.யூ.முஸ்லிம் லீக் முறியடிக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். நிலம்பூர் அனைத்து முக்கிய மதங்களுக்கும் தாயகமாகும் என்றும்,  இடைத்தேர்தலில் நீங்கள் எத்தனை வாக்குகளைப் பெறுவீர்கள் என்று பார்ப்போம் என்றும்   அவர் சிபிஎம்க்கு சவால் செய்தார். மேலும் ஒன்றிய  அரசு அரசியலமைப்பு விரோத சட்டங்களை திணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இ.யூ.முஸ்லிம் லீக் ஒன்றிய அரசின் சதிகளை  நீதிமன்றம் மூலம் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தேசிய தலைவர் பேச்சு:

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் அடையங்களை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து சதித் திட்டங்களை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசு, அந்த புதிய சட்டத்தில் வக்பு என்ற வார்த்தையே அகற்றிவிட்டது என்றும்,  உமீத் (UMEED) என்ற புதிய பெயரை சூட்டி வக்பு என்ற அடையாளத்தை ஒழித்துவிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் விமர்சனம் செய்தார். 

இந்திய முஸ்லிம்கள், நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து தங்களுடைய பணிகளையும், பங்கையும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு இந்தியா என்ற மகாகவி அல்லாமா இக்பாலின் கவிதைக்கு ஏற்ப, சிறந்த நாடு இந்தியா என உண்மையில் நினைத்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஒற்றுமையாக, சகோதரத்துவ மனப்பான்மையுடன் வாழ விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை ஒழிக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த திட்டங்களில் ஒன்று தான் வக்பு திருத்தச் சட்டமாகும். 

இந்த சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (16.04.2025) வந்தபோது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் ஆலோசனைகளை ஏற்று இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக அவர் பொய் கூறியுள்ளார். உண்மையில் 96 சதவீத மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. இந்த சட்டத்திற்கு எதிராக 96 சதவீத மக்கள் இருந்து வருகிறார்கள் என்பது தான் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒன்றிய அரசின் வழக்கறிஞர் பொய்யான, தவறான தகவல்களை நீதிமன்றத்தில் கூறி, சட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். 

இ.யூ.முஸ்லிம் லீகின் பங்களிப்பு:

வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் அதை கடுமையாக எதிர்த்து அருமையான வாதங்களை எடுத்துக் கூறினார்கள். ஜனாப் இ.டி.முஹம்மது பஷீர், ஜனாப் எம்.பி.அப்துஸ் ஸமது சமதானி, ஜனாப் அப்துல் வஹாப், வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் உள்ளிட்ட நமது எம்.பி.க்கள். மிகச் சிறந்த முறையில் புள்ளிவிவரங்களுடன் பேசி, இந்த சட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும் எதிராக சட்டம் என வாதிட்டார்கள். அவர்களின் அற்புதமான இந்த பணிகளுக்கு எமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை:

புதிய வக்பு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.வி. சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை மூன்று விஷயங்களை எழுப்பியது. நீதிமன்றத்தால் வக்பு என அறிவிக்கப்பட்ட எந்தவொரு சொத்துக்களையும், அவை பயனரால் வக்பு செய்யப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவற்றை அறிவிக்கை நீக்கவோ அல்லது வக்பு அல்லாததாகக் கருதவோ கூடாது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளைத் தொடங்கும்போது வக்பு சொத்து வக்பு ஆகக் கருதப்படாது என்று கூறும் திருத்தச் சட்டத்தில் உள்ள விதியை செயல்படுத்தக்கூடாது. வாரியம் மற்றும் கவுன்சிலைப் பொறுத்தவரை, அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும், முன்னாள் அதிகாரி உறுப்பினர்கள் தவிர என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்கிறோம். அதன் தீர்ப்புகளை மதிக்கிறோம். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் கூட உச்சநீதிமன்ற நீதிமன்றம் அளித்து தீர்ப்பின் மீது நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால், அந்த தீர்ப்பை மதித்து நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதேபோன்று, வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியாவில் முஸ்லிம்களின் அடையாளங்களை முற்றிலும் ஒழிக்க பா.ஜ.க. செய்துவரும் முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றம் நிச்சயம் தடை விதிக்கும். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடு. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சமுதாய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி வெவ்வேறாக இருந்த போதிலும், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த ஒற்றுமையை சீர்குலைக்க செய்யப்படும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது. இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் அமைதியை பறிக்கும் பாஜகவின் சதித் திட்டங்கள் நிச்சயம் நிறைவேறாது. இந்திய மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

இந்த பொதுக்கூட்டத்தில், இ.யூ.முஸ்லிம் லீக் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், கர்நாடக வருவாய் அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா உள்ளிட்டோர்  கலந்துகொண்டு உரையாற்றினார்கள். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: