Sunday, April 27, 2025

ஏழை முஸ்லிம் பெண் சாதனை...!

ஏழை முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் மகள் அடிபா அகமது, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை...!

இந்திய குடிமைப் பணிகளில் சேர வேண்டும் என்று லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் கனவு காண்கிறார்கள். அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்கள். அதற்காக கடினமாக உழைக்கிறார்கள்.பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு சிலரே அந்த  கனவு இலக்கை வெற்றிகரமாக அடைகிறார்கள். அப்படி கனவு கண்டு இந்தாண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலரில், முஸ்லிம் பெண் அடிபா அகமதுவும் ஒருவர் ஆவார். அவரது சாதனை இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஆம், தம்முடைய வெற்றி மூலம், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தேர்வு வரிசைப் பட்டியலில் அடிபா அகமது முதலிடத்தில் இல்லாதிருக்கலாம். ஆனால் அரசாங்கப் பணிகளுக்கான இந்தியாவின் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பதால், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். உற்சாகமாக இருந்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டுனரின் மகள்:

ஒரு சாதாரண முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர் அஷ்.ஃபாக் அகமது மற்றும்  இல்லத்தரசி ஆகியோரின் மகளான அடிபா அகமது, தனது மூன்றாவது முயற்சியில் வெற்றிக்கனியை எட்டிப் பறித்துள்ளார். ஆம், இது அடிபாவின் மூன்றாவது முயற்சியாகும்.

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது கனவு இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை ஒருபோதும் கை விடாமல் கடும் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது வெற்றி இலக்கை அடைந்துள்ளார். நாடு முழுவதும் ஆயிரத்து ஆறு பேர் வெற்றிபெற்ற நிலையில், அவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 27 பேர் ஆவார்கள். இந்த 27 பேரில் ஒருவர் என்ற பெருமையை அடிபா பெற்றுள்ளார். மேலும் தேர்வு வரிசைப் பட்டியலில் அவர் 142வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றி சாதனை, அவரது சாதாரண வருமானம் கொண்ட நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக்கான போராட்டங்கள்:

அடிபா அகமதுவின் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய போராட்டங்கள், வேதனைகள் நிறைந்த கதைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவரது வெற்றி ஒரே சீராக அமைந்து இருக்கவில்லை.  அவரது குடும்பம் வாடகை வீட்டில் வசிக்கிறது. அத்துடன், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருந்தது. மேலும், ஆணாதிக்க சமூகத்தில் இதுபோன்ற சாதனையை அடைவது எளிதல்ல. அதுவும் ஏழை முஸ்லிம் வீட்டுப் பெண் ஒருவர், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவது என்பது யாருமே  நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத ஒரு சாதனையாகும்.

தனது இந்த வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள அடிபா, "இது என்னுடைய மூன்றாவது முயற்சியாகும். முதல் முயற்சியில் தோல்வியடைந்தப் பிறகு, நான் மிகவும் சோர்வடைந்தேன். பல சமயங்களில், நான் சிவில் சர்வீசஸ்களுக்குத் தகுதியற்றவள் என்று கூட நினைத்தேன். அப்படி ஒருசில நேரங்களில் உணர்ந்தேன். சில சமயங்களில், நாங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறோம். மேலும் அது எங்கள் கனவுகளை அடைவதிலிருந்து நம்மைத் தள்ளிவிடுகிறது. எனக்கும் இதேதான் நடந்தது. ஆனால் என் குடும்பம், குறிப்பாக என் பெற்றோர், இந்த ஏற்ற தாழ்வுகளின் பயணம் முழுவதும் இரண்டு தூண்களைப் போல என்னுடன் இருந்தனர். அதனால் நான் தொடர்ந்து முயற்சி செய்தேன்" என்று  தனது வெற்றிக்குப் பின்னால் இருந்த போராட்டங்கள், சவால்கள் ஆகியவற்றை கூறி, தம்முடைய பெற்றோர் உறுதியாக இருந்தது தமக்கு உற்சாகம் அளித்தது என மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

வெற்றி எளிதில் கைக்கு வந்து சேராது:

முதல் மற்றும் இரண்டாவது முறை தோல்வி அடைந்தபிறகு, அடிபா சோர்வு அடைந்தாலும், தமது இலட்சியத்தை ஒருபோதும் கைவிடவில்லை. எப்படியும் வெற்றி பெற வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியான மனதுடன் தொடர்ந்து முயற்சி செய்தார். இந்த முயற்சிகளுக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இருந்து உற்சாகம் அளித்தனர். இதன்மூலம் அடிபா அகமது வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.

அடிபா அகமது பெற்றுள்ள இந்த வெற்றி, மூலம்  மற்ற இளைஞர்கள், நல்ல படிப்பினை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள், வாழ்க்கையில் சாதிக்க முன்வர வேண்டும். உயர் பதவிகளில் அமர கனவு காண வேண்டும். அதற்காக நல்ல கல்வி பெற வேண்டும். கல்வியை முடித்தபின் ஓர் கனவை காண வேண்டும். அது இலட்சிய கனவாக இருக்க வேண்டும். தமக்கும், சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் கனவாக அது இருக்க வேண்டும். ஆம், அடிபா அகமது கண்ட கனவை போன்ற கனவாக அது இருக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இடையில் தடைக்கற்கள் வந்தால், அதை உடைத்து விட்டு,பயணத்தை தொடர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கடின பயணத்தை மேற்கொண்டு அடிபா அகமது சாதனை புரிந்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக முஸ்லிம் சமுதாயம் உண்மையில் பெருமைப்பட வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: