Thursday, April 24, 2025

மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி...!

 "மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி - சில நினைவலைகள்"

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் - 

வாழந்த காலமெல்லாம் தனது மூச்சுக்காற்று அனைத்தையும், இஸ்லாம் மற்றும் இஸ்லாமியச் சமுதாயத்திற்காக அர்பணித்த பல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் தான் மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள். இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைப்படி, முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் இஸ்லாமிய ஒளி தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் தம்முடைய வாழ்க்கையின் அனைத்து நேரத்தையும் செலவிட்ட மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள், வேலூரில் இஸ்லாமிக் சென்டர் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆவார்.

வேலூரில் உள்ள இஸ்லாமிக் சென்டரை, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட சரியாக பயன்படுத்தி, இஸ்லாமிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாக, வேலூரில் இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய மௌலானா அவர்கள், கடந்த 1982ஆம் ஆண்டு வேலூரில் கல்லூரி படிப்பை நிறைவு செய்த இளைஞர்களை அழைத்து அவர்கள் மத்தியில், இஸ்லாமியப் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துகூறி, அவர்களை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் வாழ வழிகாட்டியதுடன், மற்றவர்களுக்கும் ஒரு உந்துதல் சக்தியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.  

ஆடம்பர வாழ்க்கையை சிறிதும் விரும்பாமல், எப்போதும் எளிமை, எளிமை, எளிமை என்ற இலட்சியத்துடன் தாம் வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்த மனிதர். அனைவரிடமும் புன்னகையுடன் பேசும் குணம் கொண்ட மௌலானா அவர்கள், கோபம் அடைந்து நான் பார்த்தது இல்லை. அதேநேரத்தில் சில நேரங்களில் தமாஷாக கூட பேசி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். 

சில நினைவலைகள்:

கல்லூரி படிப்பு முடித்தபிறகு, புதுமலர் என்ற கையெழுத்துப் பிரதியை நான் நடத்திக் கொண்டு இருப்பதை அறிந்துகொண்ட மௌலானா மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள், வேலூர் இன்பென்டரி சாலையில் இருக்கும் என் வீடு தேடி வந்து என்னை வாழ்த்தியது, இன்றும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கிறது. நான் இருக்கும் பகுதியை ஒட்டியுள்ள டிட்டர் லைன் பகுதியில் மௌலானா அவர்களின் வீடு இருந்தது. என்னை சந்தித்தபிறகு, தமது இல்லத்திற்கு வரும்படி அன்புடன் அழைப்பு விடுத்தார். அதன்படி, அவரது வீட்டிற்குச் சென்றபோது, என்னையும் என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் நானே அறியாத பல விஷயங்களைச் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். என்னுடைய தந்தை அப்துல் சத்தார் சாஹிப் அவர்களின் விருந்தோம்பல் குணம், வேலூரில் மிகவும் புகழ்பெற்றது என அவர் என்னிடம் கூறியபோது, நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். 

இப்படி பல விஷயங்களை பேசிய மௌலானா அவர்கள், பின்னர், என்னை நோக்கி "உங்களிடம் எழுத்துத் திறமை உள்ளது. அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய படித்து அதன்மூலம் எழுத்துப்பணியை மேற்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தினார். அத்துடன், உர்தூ மொழியை நன்கு கற்று தேர்ச்சி பெற்றால், அதன்மூலம் இன்னும் நிறைய அறிவை பெற முடியும் என்றும் கூறியதுடன், சிறிது காலம் எனக்கு உர்தூ கற்பிக்கும் ஆசிரியராக கூட இருந்து என்னை ஊக்குவித்தார். 

எழுத்துப் பணிக்கு ஊக்கம்:

தற்போது நான் ஒரு இஸ்லாமிய எழுத்தாளனாக இருக்கிறேன் என்றால், அதற்கு முதலில் விதை போட்ட பலரில் ஒருவர் மௌலானா அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சமரசம் இதழில் என்னுடைய முதல் கட்டுரையான "வாழ்வு இனிக்க" வெளியாக காரணம் அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் தான். அதன்பிறகு, பல கட்டுரைகளை சமரசம் இதழில் தொடர்ந்து வெளியிட ஊக்கம் தந்து, ஆலோசனைககளை வழங்கி, எனக்கு நல்ல ஆதரவு வழங்கினார். 

வேலூரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில், நடக்கும் கருத்தரங்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்து அது தொடர்பான செய்திகளை சேகரித்து சமரசத்திற்கு மட்டுமல்லாமல், பிற தினசரி பத்திரிகைகளுக்கும் அனுப்ப ஆலோசனைகளை வழங்கி, தேவையான உதவிகளையும் செய்வார். 

இப்படி அவர் ஆரம்பக் காலங்களில் செய்த சிறிய சிறிய உதவிகள், பின்னர், என்னை ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக மாற்றியது என்றே கூறலாம். இஸ்லாமியர்கள் மத்தியில் ஈமான் வலிமையாக இல்லை என்ற ஆதங்கம் மௌலானா அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. நாம் அனைவரும் பெயரில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கிறோம். ஈமான் உறுதியுடன், செயல் அளவில் இன்னும் முழுமையான முஸ்லிம்களாக மாறவில்லை என எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். 

வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, இஸ்லாமிய நெறிமுறைகளின்படி வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருந்த ரஹ்மானி அவர்கள், அதற்காக வேலூரில் ஒரு இளைஞர் அமைப்பையே உருவாக்கி, இளைஞர்கள் மத்தியில் தீன் பிரச்சாரத்தை செய்ததுடன், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தீனின் வலிமையை எடுத்துக் கூற வழி அமைத்து தந்தார். 

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத், அப்துல்லாஹ் அடியார் உள்ளிட்ட பல அறிவுஜீவிகள் வேலூர் இஸ்லாமிக் சென்டருக்கு வருகை தந்தபோது, அவர்களின் வருகை குறித்து முன்கூட்டியே இளைஞர் அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை கேட்டு, அதன்மூலம் இளைஞர்கள் பயன் அடைய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் ரஹ்மானி சாஹிப் அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. அதன் காரணமாக இஸ்லாமிக் சென்டரில் எப்போதும் இளைஞர்களின் படை இருந்துகொண்டே இருக்கும். 

இதேபோன்று, பெண் கல்வி குறித்து அதிக அக்கறை கொண்ட மௌலானா அவர்கள், அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்புடன் கல்வி பெற வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். முஸ்லிம் குடும்பங்களில் ஒரு பெண் நல்ல கல்வி பெற்று தேர்ச்சி பெற்றால், அவர்கள் மேல்கல்வி கற்ற வேண்டும் என ஊக்குவிப்பார். மேலும், இஸ்லாமிய கல்வியை பெண்கள் அவசியம் பெற வேண்டும் என்றும், அவர்கள் தீனியில் நிலைத்து இருக்க தீன் கல்வி மிகவும் முக்கியம் என்றும் சொல்லிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் ஏக இறைவனின் கருணையால் ஓரளவுக்கு சாதித்தும் இருக்கிறார். 

மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்களின் மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று கூறும் அதேவேளையில், இஸ்லாமிய அறிஞர்களின் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். ஏக இறைவன் மௌலானா அவர்களின் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டும். உயரிய சுவன பாக்கியத்தை வழங்க வேண்டும். 

=====================

No comments: