Tuesday, April 15, 2025

திண்ணை நூலகம்.....!

 "திருச்சியில்  திண்ணை நூலகம்"

- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -

சமூக வலைத்தளங்களின் தாக்கம் காரணமாக, மக்களிடையே நூல் வாசிப்பு பழக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது.  சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்கள் தங்களுக்கு போதும் என்ற மனநிலைக்கு தற்போது இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இதன் காரணமாக நல்ல நூல்களின் பக்கம் அவர்களின் கவனம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூலகங்களுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மட்டுமே நூலகங்களின் பக்கம் தலை காட்டுகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், இளைஞர்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு ஒருவகையில் நல்ல பலனும் கிடைத்து வருகிறது. அரசு செய்யும் இந்த முயற்சிக்கு கை கொடுக்கும் வகையில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவு, இளைஞர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். மாநிலத்தின்  ஒருசில பகுதிகளில் தனியார் நூலகங்கள் உருவாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

திருச்சியில் திண்ணை நூலகம்:

அந்த வகையில், திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக இளைஞர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சுந்தர்ராஜ் நகரில்  "திண்ணை நூலகம்" திறக்கப்பட்டது. மணிச்சுடர் வாசகர் ஜனாப் சையத் முதஹார் சகாஃப் (syed muthahar saqaf) அவர்களின் இல்லத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த "திண்ணை  நூலகத்தை " மூத்த சமூக ஆர்வலர் வி. பாரதி தலைமையில், தொழிலதிபர் ஆர்.எம்.முத்து முன்னிலையில் பள்ளி மாணவர்கள்  திறந்து வைத்தார்கள். 

திண்ணை நூலகம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் பாரதி, "புத்தகம் படிக்கும் பழக்கம் மாணவர்களின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். "திண்ணை நூலகம்" கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்" என்று தெரிவித்தார். 

தொழில் அதிபர் முத்து பேசும்போது,  "இளைஞர்கள் நூலகங்களை தேடி தொலைவில் செல்வதற்கு பதிலாக நமது இருப்பிடத்திலேயே "திண்ணை நூலகம்" அமைந்திருப்பது அனைத்து சமுதாயத்தினருக்கும் நன்மை பயக்கும் என்றும் "திண்ணை நூலகம்" ஒரு புதிய மற்றும் வரவேற்கத்தக்க முயற்சி இதை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் திருமதி சபியா, "நம் நாட்டில் பல மேதைகள் நூலகத்தில் படித்து பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள்" என்று அழகிய முறையில் எடுத்துரைத்தார். 

திண்ணை நூலகத்தில் நூல்கள்:

திருச்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த "திண்ணை நூலகத்தில்" தினசரி, வார, மாத, பத்திரிகைகள் சஞ்சிகைகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். நகர் நலச் சங்கத்தின் தலைவர் கி. ஜெயபாலன் "திண்ணை நூலகத்தை" சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு 'நூலகத்தின் சிறந்த பயனர்' பரிசு வழங்கப்படும். கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு நூலகத்தின் சிறப்பை உணர்த்த பல்வேறு விதமான போட்டிகளையும் நடத்தப்படும்"  என்று கூறி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தினார். 

திண்ணை நூலகத்தின் திறப்பு விழாவில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.  அத்துடன் திண்ணை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நூல்களையும் அவர்கள் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தனர். 

மணிச்சுடர் வாசகர்:

திருச்சியில் திண்ணை நூலகம் திறக்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஜனாப் சையத் முதஹார் சகாஃப் (syed muthahar saqaf) மணிச்சுடர் நாளிதழின் வாசகர் ஆவார். தி இந்து ஆங்கில நாளிதழில், துணை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவர், தொடர்ந்து சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல நல்ல பணிகளை ஆற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது திண்ணை நூலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த திண்ணை நூலகத்தை திருச்சியில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொண்டு, வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். திருச்சியில் உருவாக்கப்பட்டுள்ள திண்ணை நூலகம் போன்று மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும் கிராமங்களிலும் ஆர்வம் உள்ள நல்ல உள்ளங்கள் திண்ணை நூலகங்களை திறக்க முன்வர வேண்டும். அதன்மூலம், இளைஞர்களின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: