Monday, April 21, 2025

ரஷீத்தின் எழுச்சி....!

 "ரஷீத்தின் எழுச்சிக்குப் பின்னால், வியர்வை மற்றும் கண்ணீரின் கதை"


ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய கண்ணீர் கதைகள், அதிகளவு சோகங்கள் புதைந்து இருக்கின்றன என்பதுதான் உண்மையாகும். வெற்றி என்பது யாருக்கும் மிகவும் சுலபமாக கிடைத்துவிடுவதில்லை. அப்படி கிடைத்துவிடும் என ஒருவர் எண்ணினால், அல்லது நினைத்தால், அவரை விட மிகவும் மோசமான முட்டாள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தவொரு துறையாக இருந்தாலும், கடின உழைப்புடன் வியர்வையை சிந்தினால் மட்டுமே வெற்றி கைக்கூடும். சவால்களைச் சந்தித்தால் மட்டுமே, உயரத்தின் உச்சிக்குச் செல்ல முடியும். இந்த உண்மையை முஸ்லிம் இளைஞர்கள் தற்போது உணர்ந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்திய முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு சவால்களை, நெருக்கடிகளை சந்தித்தபிறகும் கூட, தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிகளை குவித்து வருகிறார்கள்.  அந்த வரிசையில் ஒருவர் தான் இளம் கிரிக்கெட் வீரர் ஷேக் ரஷீத் ஆவார். 

இளம் கிரிக்கெட் வீரர் ஷேக் ரஷீத்:

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்த ஷேக் ரஷீத், பிப்ரவரி 24, 2022 அன்று ஆந்திரப் பிரதேச அணிக்காக, 2021–22 ரஞ்சி டிராபியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக தனது முதல் அறிமுகத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 16, 2022 அன்று ஆந்திரப் பிரதேச அணிக்காக, 2022–23 சையத் முஷ்டாக் அலி டிராபியில் நாகாலாந்து அணிக்கு எதிராக தனது டி-20 அறிமுகத்தை மேற்கொண்டார். கடந்த 2022ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் துணைத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பேட்டிங்கில் அவர் செய்த பங்களிப்புகள் இந்தியா யு-19 உலகக் கோப்பையை வெல்ல உதவியது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள ரஷீத், தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 

இந்த வெற்றி அல்லது முக்கியத்துவத்தை அடைவதற்கு முன்பு அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை, சவால்களை ஏராளம் என கூறலாம்.  ரஷீத்தின் தற்போதைய வெற்றி, சவால்கள் நிறைந்த ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் விளைவாகும்.

ஷேக் ரஷீத்துக்கு ஏழு வயது இருக்கும்போது, அவரை விட இரண்டு மடங்கு வயதுடைய சுமார் 300 பேருடன் உப்பலில் உள்ள ஒரு கோடைக்கால கிரிக்கெட் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரஷீதின் திறமையை கண்ட  பயிற்சியாளர்கள், அவரது தந்தை ஷேக் பாலிஷா வாலியை அழைத்து, ரஷீதின் நம்பமுடியாத பேட்டிங் திறன்களைப் பற்றி கூறி, அவருக்கு முழுநேர பயிற்சி அளிக்கும்படி வற்புறுத்தினர்.

இதைக் கேட்டதும் ஆச்சரியம் அடைந்த ரஷீதின் தந்தை ஷேக் பாலிஷா வாலி, “இதற்கு முன்பு, தனது மகன் அவ்வளவு திறமையானவர் என்று தனக்குத் தெரியாது. ஆனால் இதற்குப் பிறகு, நான் அவரை தினமும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று கூறி தனது மகனுக்கு அளித்த பயிற்சி, ஊக்கம் குறித்து மகிழ்ச்சி அடைகிறார். “தனது மகனின் நலனில் கவலைப்பட்டதால், ஏ.சி.ஏ. அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கிருஷ்ணா ராவிடம் ஆலோசனை கேட்டதை பாலிஷா வாலி நினைவு கூர்ந்தார். காரணம், ரஷீத் மிகவும் இளமையாக இருந்தார். அத்துடன், அகாடமி மங்களகிரியில் இருந்தது. இப்படி தான்  ஆரம்பத்தில் ரஷீதின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. 

பழ வியாபாரியின் மகன்:

குடும்பத்தை காப்பாற்ற ஷேக் ரஷீதின் தந்தை ஷேக் பாலிஷா வாலி பழங்களை விற்க வேண்டியிருந்தது. ஆம், ஹைதராபாத்தில் செய்துவந்த பணியில் இருந்து விலகியபிறகு, அவர் ஒரு பழ வியாபாரியாக இருந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில், மகனின் திறமையை கண்ட ஷேக் பாலிஷா வாலி, தனது தொழிலை கைவிட்டு விட்டு, மகனுக்கு முழு நேரமும் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது இந்த முயற்சிக்கு ஒருசில நண்பர்கள் உதவி செய்தார்கள். குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் நண்பர்  இந்திரேசன் ரெட்டி, வங்கியாளர் உல்லி ஸ்ரீகாந்த் ஆகியோர், ஷேக் ரஷீதின் கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கினார்கள். இதன்மூலம் ரஷீதின் கிரிக்கெட் கனவுகள் பிரகாச ஒளியுடன் பற்றி எரிந்தன. 

கனவுகள் மெய்ப்பட வேண்டுமானால், கடினமாக உழைக்க வேண்டும். பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தையின் ஆதரவு, தந்தையின் நண்பர்கள் கொடுத்த நிதியுதவி ஆகியவற்றின் மூலம், சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ரஷீத், கிரிக்கெட் விளையாட்டில், தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, அனைவரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். 

ஐ.பி.எல். தொடரில் அசத்தல்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஷேக் ரஷீத், லக்னோ அணிக்கு எதிரான தனது முதல் அறிமுக ஆட்டத்தில், அற்புதமான திறமையை வெளிப்படுத்தி, சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இப்படி திறமையான வீரராக உருவெடுத்தாலும், ஆரம்ப காலங்களில் அவரும் அவரது தந்தையும் சந்தித்த சவால்கள், துயரங்கள் ஏராளமானவையாகும். இளம் கிரிக்கெட் வீரர் என்பதால், பண வசதி இல்லாத காரணத்தால் அவர் ரயில்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில நேரங்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத காரணத்தால், பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரயில் பெட்டி கழிவறையை ஒட்டியுள்ள பகுதியில் தூங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இப்படி பல்வேறு கண்ணீர் கதைகளை எதிர்கொண்ண்ட ஷேக் ரஷீதின்  கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் யு-19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபிறகு, புதிய அத்தியாயம் தொடங்கியது. அத்துடன் தற்போதை 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ஷேக் ரஷீத், வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். எந்த துறையாக இருந்தாலும், சவால்களையும் ஏளனங்களையும் சந்திக்காமல், எதிர்கொள்ளாமல் வாழ்க்கையில், சாதிக்க முடியாது என்பதை ஷேக் ரஷீதின் வியர்வை மற்றும் கண்ணீரின் கதை மிகவும் அழகாக மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: