Tuesday, April 22, 2025

"அனைவருக்கும் அரபி மொழி" - சிறப்பு நேர்காணல்....!

 "அனைவருக்கும் அரபி மொழி"

பேராசிரியர் டாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியின் அரிய முயற்சி

- சிறப்பு நேர்காணல் -

சென்னையைச் சேர்ந்த புதுக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள், அனைவருக்கும் அரபி மொழி என்ற உயர்ந்த நோக்கத்துடன், அந்த இலட்சியப் பயணத்தை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறார். இதற்காக 'அகாடமி ஆஃப் அரபிக் ஸ்டடீஸ்' என்ற கல்வி அமைப்பை உருவாக்கி, அரபி மொழி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் அரபிமொழியைக் கற்பித்து வருகிறார். அத்துடன், அரபி மொழி தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார்.  குறிப்பாக 'அரபிமொழி இலக்கணம்' 'நடைமுறை அரபிமொழி:எளிய வழி' 'ஃகாமூசுல் அலிஃப்: அரபிமொழி தமிழ் சொல்லகராதி' 'ஃகாமூஸ் அல்ஃபாஸில் ஃகுர்ஆன் சொல்லகராதி' என பல்வேறு தலைப்புகளில் அரபிமொழி குறித்த அற்புதமான நூல்களை எழுதி, வெளியிட்டு, தொடர்ந்து புதிய நூல்களை எழுதி வெளியிடும் பணியிலும்  ஈடுபட்டு வருகிறார். 

தமிழ், உர்தூ மொழிகளை பேசும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் அரபி மொழியை எளிமையாக கற்றுக் கொண்டு, திருக்குர்ஆனின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்து நோக்கத்துடன் தன்னுடைய நாட்களை சமூகத்திற்காக பயன்படுத்திவரும், பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் குறித்தும், அவர் செய்துவரும் பணிகள் குறித்தும் மணிச்சுடர் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் சமுதாயமும் அறிந்துகொண்டு, அரபிமொழியை எளிமையாக கற்றுக் கொண்டு, அதில் புலமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியிடம் மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அந்த சிறப்பு நேர்காணல் இதோ உங்கள் பார்வைக்கு:

அரபி மொழியில் ஆர்வம்:

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி தற்போது பெருங்குடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை சையத் சுல்தான் மொய்த்தீன் பஹ்மனி, ஒரு ஆலிம் ஆவார். தந்தை பஹ்மனி, 1942 முதல் 1965 வரை, உர்தூ மொழியில் இமாமி என்ற வார இதழை நடத்தி வந்தார்.  மகன், மகள் என மொத்தம் 10 பேரை கொண்ட இந்த குடும்பத்தில் ஒருவர் தான் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி ஆவார். இவருக்கு இளமைப் பருவம் முதலே, அரபி மொழியில் ஒரு காதல் இருந்துகொண்டே இருந்தது. ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. அந்த மொழியை கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என அவரது மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.  தன்னுடைய இந்த ஆர்வம் காரணமாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அரபி மொழி கற்றுக் கொண்டதுடன், அதில் புலமைபெறும் வகையில் தன்னுடைய ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 

இதன் காரணமாக ஆரம்பத்தில் அஃப்சல் உலமா மட்டுமே படித்த அவர், பின்னர் அரபி மொழியில் எம்.ஏ. பட்டமும், எம்.ஃபில். பட்டமும் பெற்றதுடன், இஸ்லாமிய ஆய்வுகள் படிப்பில் சேர்ந்து எம்.ஏ. பட்டமும் பெற்றார். மேலும், தன்னுடைய தாய் மொழியான உர்தூ மொழியில் கூட அவர், எம்.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றார். அத்துடன், இவரது கல்வி ஆர்வம் நிற்கவில்லை. முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து அந்த முனைவர் பட்டத்தையும் பெற்ற பஹ்மனி, பின்னர் சென்னை புதுக்கல்லூரியில் அரபித்துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழக அரபித்துறையில் சிறிது காலம் பேராசிரியராக பணிபுரிந்து, அரபிமொழியின் சிறப்பு குறித்து மாணவ மாணவியர்களுக்கு மிகவும் எளிய மொழியில் கற்பித்து, தம்முடைய கல்வியைச் சேவையை நிறைவேற்றினார். இப்படி 22 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்த பஹமனி, கடந்த 2006ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 

பேராசிரியர் பணிக்குதான் ஓய்வு. ஆனால், கற்றல், கற்பித்தால், எழுதுதல் என்ற இலக்குகளுக்கு பஹ்மனி ஒருபோதும் ஓய்வு அளிக்கவில்லை. தாம் பேராசிரியராக பணிபுரிந்தபோதும், ஓய்வுபெற்ற பிறகும், தொடர்ந்து அரபிமொழியை அவர் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்து வருகிறார். இதற்காக அரபிமொழி குறித்த பல அற்புதமான நூல்களை வெளியிட்டுள்ள அவர், அரபிமொழியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். 

அனைவருக்கும் அரபி மொழி:

அரபிமொழி குறித்து கருத்து கூறும் பேராசிரியர் பஹ்மனி, அது ஒரு எளிமையான மொழி என்றும், அந்த மொழியை அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கிறார். இதன் காரணமாக தான் ஏக இறைவன் திருக்குர்ஆனையை மிகவும் எளிமையாக உலக மக்களுக்கு தந்து இருக்கிறான் என கூறும் பஹ்மனி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அரபிமொழியை எளிதாக, எந்தவித சிரமும் இல்லாமல் கற்றுக் கொள்ள முடியும் என உறுதிப்பட தெரிவிக்கிறார். அரபிமொழியை கற்றுக் கொள்ள முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். சரியான வழிகாட்டுதலின்படி, மொழியை கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி சரியான திசையை நோக்கிச் சென்றால், நிச்சயம் அரபிமொழியை அனைவரும் கற்றுக் கொள்ள முடியும். இப்படி கற்றுக் கொள்வதன் மூலம், அதன் அழகிய சுவையை அறிய முடியும். 

 அனைவருக்கும் அரபிமொழி என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயிற்சி மையங்களை உருவாக்கி, தொடர்ந்து அரபிமொழியை பஹ்மனி கற்பித்து வருகிறார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அரபிமொழியை கற்பிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக இந்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், அதற்காக நான்கு வழிகளில் அரபிமொழியை கற்பிக்க முடியும் என்றும் உறுதியாக நம்புகிறார். மக்தப், மதரஸா, மஸ்ஜித்துகளில் வாரம் இருமுறை, ரிஸ்வான் மதரஸாகளில் பெண்களுக்கு வாரம் ஒருமுறை அரபிமொழி கற்பித்தல்  என நான்கு வழிகளில் அரபிமொழியை நாம் கற்பிக்க முடியும் என அவர் ஆலோசனை தருகிறார். 

இப்படி அரபிமொழி கற்பிக்கும்போது, அந்த மொழியை கற்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருக்குர்ஆன் வசனங்களை எளியில் புரிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். அத்துடன், எழுத்துப் பயிற்சியுடன் கூடிய அரபிமொழி படிப்பு மூலம், கூடிய விரைவில் அரபிமொழியை கற்றுக் கொள்ளலாம். அதற்காக ஆர்வத்துடன், நேரமும் ஒதுக்க முஸ்லிம்கள் அனைவரும் முன்வர வேண்டும். 

அரபிமொழி கற்பதற்கான நூல்கள்:

அரபிமொழி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என நோக்கத்துடன் பேராசிரியர் முனைவர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் இதுவரை 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் மூலம் மஸ்ஜித்துகளில் செயல்படும் மக்தபுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு தமிழ்மொழி மூலமே அரபிமொழிப் பயிற்சியை எளிதாக அளிக்கலாம். இதன்மூலம், அனைவருக்கும் திருமறை அருளப்பட்ட மொழியினை தமிழ், ஆங்கிலம் வழியாக, கற்கும் வாய்ப்பு அவர்களின் சொந்த ஊர்களிலேயே கிடைக்கும். அரபிமொழி கற்கும் முதற்கட்டப் பயிற்சியிலேயே, அவர்கள் பெறும் மொழியறிவின் அடிப்படையில் எளிய நடையிலான திருக்குர்ஆனியின் வசனங்கள், நபிமொழிகள் மற்றும் துஆக்களின் பொருளை அரபி வாசகங்களின் மூலம் எளிமையாக விளங்கிக் கொள்ளும் அனுபவத்தை பெறுவார்கள். 

தம்முடைய கடுமையான உழைப்பின் காரணமாக 15 ஆண்டுகள் தொடர் முயற்சி காரணமாக திருக்குர்ஆன் சொல்லகராதி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றை பஹ்மனி வெளிட்டுள்ளார். தற்போது மூன்றாவது பாகத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கி, அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.  அரபிமொழி குறித்து இவர் எழுதியுள்ள நூல்களுக்கு சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இஸ்லாமிய மையங்கள் வரவேற்பு அளித்து, அவற்றை வாங்கி, எளிமையான முறையில் அரபிமொழியை கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இதேபோன்று, இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மதரஸாக்களில் கூட அரபிமொழி கற்பித்தல் தொடர்பாக பஹ்மனி எழுதிய நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

சமுதாயம் ஆதரவு தர வேண்டும்:

அரபிமொழி கற்பித்தல் தொடர்ந்து எழுதப்பட்டுள்ள அனைத்து நூல்களும், பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்களின் சொந்த நிதியில் இருந்து வெளியிடப்பட்டவையாகும். இதற்காக யாரிடமும் அவர் நிதியுதவி பெறவில்லை. கடுமையான உழைப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்டட திருக்குர்ஆன் சொல்லகராதி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகிய நூல்கள் கூட தமது சொந்த நிதியில் இருந்து வெளியிடப்பட்டதாக கூறும் பஹ்மனி, இந்த நூல்களை அனைத்து மதரஸாக்களில் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பை சமுதாயம் ஏற்றுக் கொண்டால், அதன்மூலம், மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். அத்துடன் எளிமையாக முறையில் அரபிமொழியை விரைவில் கற்றக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டு, அரபிமொழி குறித்த நல்ல புரிதல் உருவாகும் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார். 

'அல்ஃகாமூஸ் அல்கபீர் மூலச்சொல், அடிப்படையிலான விரிவான அரபிமொழி தமிழ்ச் சொல்லகராதி' 'ஃகுர்ஆன், நபிமொழிகள் மற்றும் சுன்னத்தான துஆக்களின் தொகுப்பு' போன்ற அற்புதமான நூல்கள் தமிழத்தில் உள்ள ஒவ்வொரு மதரஸதா மற்றும் முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும். இப்படி இடம்பெற்றால், அரபிமொழி குறித்த அறிவு மாணவர்கள் மத்தியில் விரிவடையும். அரபிமொழி தமிழ்ச் சொல்லகராதிக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை செலவழித்தாக கூறும் பஹ்மனி, அதன் பலன் மாணவர்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்தால் மட்டும், தமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கிறார். 

கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி, தற்போது தனது 77 வயதில் கூட அதே அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, அரபிமொழி தொடர்பான நூல்களை எழுதி, அனைவரும் அரபிமொழி கற்ற வேண்டும் என ஆர்வம் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். தாம் மட்டும் அரபிமொழியில் புலமையுடன் இருக்க வேண்டும் என நினைக்காமல் தம்முடைய குடும்பத்தினரும் அரபிமொழியின் இலக்கணம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த மொழியில் புலமை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பஹ்மனி, அதன்படி, தம்முடைய இரண்டு மகள்களையும் அரபிமொழியை படிக்க வைத்து, எம்.ஏ. அரபிமொழியில் எம்.ஏ.பட்டம் பெறும் வகையில் ஊக்குவித்துள்ளார். 

அரபிமொழிக்காக தனது இளமை காலம் முதல் தற்போது வரை முழு நேரமும் அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிவரும் பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனியின் பணிகளை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். அதற்கு தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, பஹ்மனி அவர்களின் இலட்சியம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூட, அரபிமொழியை நன்கு கற்று, அதன் மொழி அழகை நன்கு ரசிக்க முடியும். 

தம்முடைய வாழ்க்கையை அரபிமொழியின் வளர்ச்சிக்காகவும், அதனை அனைவருக்கும் கற்பிக்க பேராசிரியர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி அவர்கள் செய்துவரும் பணிகள், சேவைகள், முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற நாமும் வாழ்த்தி விடைப்பெற்றோம். 

- சந்திப்பு: சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: