"தமிழக மஸ்ஜித்துகளில் மணிச்சுடர்"
- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -
மணிச்சுடர் நாளிதழ் கடந்த 40 ஆண்டுகளாக தனது பயணத்தைச் சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தமிழகம் முழுவதும் மணிச்சுடரை கொண்டு சேர்க்கும் பணி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மஸ்ஜித்துகளில் மணிச்சுடர் தவழ வேண்டும் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் விருப்பம் மற்றும் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மஸ்ஜித்துகளுக்கு மணிச்சுடர் அனுப்பப்பட்டு வருகிறது.
மஸ்ஜித்துக்களுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழ் மூலம், பள்ளிவாசல்களுக்கு வரும் தொழுகையாளிகள், அதைப் படித்து, சமுதாயச் செய்திகளை மட்டுமல்லாமல், உலக முஸ்லிம்களின் நிலைமை, இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள், திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் ஒளியை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. மற்ற பத்திரிகைகளைப் போல இல்லாமல், மணிச்சுடர் சமுதாயத்திற்கு தேவைப்படும் செய்திகளை மட்டுமே சிறப்பாக வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, மணிச்சுடர் படிப்பதன் மூலம், முஸ்லிம்களுக்கு அறிவொளி நிச்சயம் பிரகாசிக்கும் என உறுதியாக கூறலாம்.
இப்படி மஸ்ஜித்துகளுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழ் எப்படி பயன்படுத்தப்படுகிறது. மஸ்ஜித்துகளுக்கு வரும் முஸ்லிம்கள் அதைப் படித்து பயன் அடைகிறார்களா என்பதை அறிய ஆவல் கொண்டோம். அந்த வகையில், வேலூர் மாநகரில் உள்ள மஸ்ஜித்துகளுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழின் பயன்பாடு குறித்து நமது சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வாசகர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். அதுகுறித்து ஒரு சிறப்பு ரிப்போர்ட் இதே உங்கள் பார்வைக்கு:
வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்:
நாட்டின் விடுதலைக்கு முதல்முதலாக விதை விதைத்த, வேலூர் மாநகரில், தற்போது 100க்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் உள்ளன. இந்த மஸ்ஜித்துகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்' (Vellore Masjid's Association) என்ற பெயரில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு நல்ல ஆலோசனைகளுக்குப் பிறகு, தீர்வும் காணப்பட்டு வருகிறது. இதன்மூலம், மஹல்லா ஜமாஅத் மஸ்ஜித்துகள் எந்தவித பிரச்சினைக்கும் ஆளாகாமல், சிறப்பான முறையில் இயங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படியும் பிரச்சினைகள் எழுந்தால், 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்' அதற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து விடுகிறது.
இப்படி சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மஸ்ஜித்துக்களுக்கும் மணிச்சுடர் நாளிதழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுப்பபட்டு வருகிறது. இதற்கு மஸ்ஜித் முத்தவல்லிகள், நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்து ஆதரவு வழங்கி வருகின்றனர். சமுதாயத்தின் நாளிதழ் என்பதால், எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல், மணிச்சுடரை அவர்கள் தைரியமாக படித்து, நாட்டு நடப்புகளை அறிந்துகொள்கிறார்கள்.
தொழுகையாளிகளை கவர்ந்த மணிச்சுடர்:
மஸ்ஜித்துக்களுக்கு வரும் தொழுகையாளிகள், மணிச்சுடர் நாளிதழை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் நேரில் சென்று பார்த்தபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது. வேலூர் இன்பென்டரி சாலையில் உள்ள 'மஸ்ஜிதே முஹம்மதியா'வின் முத்தவல்லி முஹம்மது இப்ராஹிம் மற்றும் அந்த மஸ்ஜித்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மணிச்சுடர் நாளிதோறும் வருகிறதா என்று கேட்டபோது, அவர்கள் மகிழ்ச்சியுடன் "நாள்தோறும் வரும் மணிச்சுடரை நாங்கள் தினமும் படித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்கிறோம்" என்றார்கள். அத்துடன் "ஐந்து வேளை தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் கூட, மணிச்சுடரை நாளிதழை, ஆர்வத்துடன் படித்து, பயன் அடைகிறார்கள்" என்றும் தெரிவித்தனர்.
"குறிப்பாக, முஸ்லிம் உலகம், இந்திய முஸ்லிம்களின் நிலைமை, பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வக்பு சட்ட மசோதா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து மணிச்சுடர் மிகச் சிறந்த முறையில் செய்திகளையும், தகவல்களையும், சிறப்பு கட்டுரைகளையும் வழங்கி வருகிறது. அதனால், குறைந்த அளவுக்கு படித்த எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. உண்மையிலேயே மணிச்சுடரின் பணியை நாங்கள் பாராட்டியே ஆக வேண்டும்" என்று மஸ்ஜிதே முஹம்மதியா'வின் முத்தவல்லி முஹம்மது இப்ராஹிம் தெரிவித்தார்.
நடுத்தர வயது முஸ்லிம்களை மட்டுமல்லால், இளைஞர்கள் மத்தியிலும் மணிச்சுடர் தற்போது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஸ்ஜிதே முஹம்மதியாவிற்கு வரும் இளைஞர்கள் கூட மணிச்சுடர் நாளிதழை ஆர்வத்துடன் படிப்பதை நாம் நேரில் காண முடிந்தது. மஸ்ஜித்துக்கள் கற்றல் மையங்களாக மாற வேண்டும் என்பது சமுதாயத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. அதற்கு ஒரு நல்ல வழியை மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கி தந்துக் கொண்டு இருக்கிறது. இதை மஸ்ஜிதே முஹம்மதியா உள்ளிட்ட வேலூர் மஸ்ஜித்துக்களின் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்ஜித்துகளில் நேரில் பார்க்கும்போது, மணிச்சுடர் நல்ல வாசகர்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அறிந்து மனம் மகிழ்ச்சி அடைந்தது.
தமிழக மஸ்ஜித்துக்களில் மணிச்சுடர்:
வேலூர் மஸ்ஜித்துக்களின் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்ஜித்துகளில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத் மஸ்ஜித்துகளிலும் மணிச்சுடர் நாளிதழ் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மாநிலத்தின் பல மஸ்ஜித்துகளில் மணிச்சுடரை கொண்டு சேர்க்கும் வகையில், சமுதாய நலனில் அக்கறை கொண்ட நல்ல உள்ளங்கள், ஓராண்டு சந்தா ஆகியவற்றை செலுத்தி ஊக்கம் அளித்து வருகிறார்கள். இந்த பணி மேலும் விரிவு அடைய வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துகளிலும் மணிச்சுடர் வாசிக்கப்பட வேண்டும்.
எந்தவித சமரசத்திற்கும் ஆளாகாமல், சமுதாய நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, நடத்தப்படும் மணிச்சுடர் நாளிதழ் ஒரு அறிவுப் பெட்டகம் என்று கூற வேண்டும். இந்த அறிவுப் பெட்டகத்தை அனைவரும் திறந்துபார்க்க வேண்டும். படித்து பயன்பெற வேண்டும். அதன்மூலம், முஸ்லிம் சமுதாயம் தற்போது எத்தகையை நிலையில் இருந்து வருகிறது? இஸ்லாம் எப்படி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது? முஸ்லிம்களின் கல்வி நிலைமை என்ன? முஸ்லிம் இளைஞர்களின் சாதனைகள் என்ன? ஏழ்மையிலும் படித்து உயர்ந்த இளைஞர்கள் யார்? இஸ்லாமிய பெண்மணிகளின் சாதனைகள் என்ன? உள்ளிட்ட பல அரிய தகவல்களை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள முடியும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துக்களில் மணிச்சுடர் நாளிதழை கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்பதை சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment