"குக்கிராமத்தில் பிறந்து விமானியாக மாறி வரலாறு படைத்த முஸ்லிம் பெண் தைபா அஃப்ரோஸ்"
வாழ்க்கையில் சாதிக்க உயர்ந்த இலட்சியத்துடன், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வரலாறு படைக்கலாம் என்பதற்கு உலக வரலாற்றில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் பல நல்ல எடுத்துக்காட்டுகள் சமுதாயத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து பல்வேறு தொல்லைகள், நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் கல்வி உரிமை, பொருளாதார உரிமை, சமூக நீதி ஆகியவற்றை பறிக்க திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையிலும் கூட, முஸ்லிம் சமுதாயம், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள், பெண்கள், தற்போது கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக கவனம் செலுத்தி, விடாமுயற்சி செய்து அதில் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் குக்கிராமத்தில் பிறந்த முஸ்லிம் பெண் தைபா அஃப்ரோஸ், வணிக விமானியாக வர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை, விடாமுயற்சி மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் நிறைவேற்றி வரலாறு படைத்து இருக்கிறார்.
உயர்ந்த இலட்சியம்:
பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் தைபா அஃப்ரோஸ், தனது பிராந்தியத்திலிருந்து முதல் பெண் வணிக விமானியாக மாறி வரலாறு படைத்துள்ளார். அவரது நம்பமுடியாத பயணம், நிதி மற்றும் சமூக சவால்களை சமாளிப்பதில் உறுதிப்பாடு, தியாகம் மற்றும் குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும்.
சிறுவயதிலிருந்தே, தைபா வானில் உயர பறக்க வேண்டும் என்று கனவு கண்டார். மேலும் ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த போதிலும், அந்தக் கனவை நனவாக்கினார். ஒரு சாதாரண மளிகைக் கடை நடத்தும் அவரது தந்தை மோதியுல் ஹக், அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். தனது மகளின் எதிர்காலத்திற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பில், தைபாவின் கல்வி மற்றும் விமானப் பயிற்சிக்கு நிதியளிக்க தனது நிலத்தை விற்றார்.
“நான் ஒரு சிறு பெண்ணாக இருந்ததிலிருந்தே விமானத்தில் பறக்க விரும்பினேன். நான் என் கனவை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டபோது, அது எங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அவர் எப்போதும் என்னை நம்பினார்” என்று மகிழ்ச்சியுடன் கூறும் தைபா, தனது கடின உழைப்பும் கல்வித் திறமையும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெற வழிவகுத்தது என்றும், அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தனக்கு ஆதரவாக நின்றனர் என்றும் பெருமையுடன் கூறுகிறார்.
தந்தையின் தியாகம்:
தைபாவின் தந்தை மோதியுல் ஹக்கின் தியாகம், சாத்தியமற்றது என்று தோன்றியதை அடைய அவருக்கு அனுமதித்த அடித்தளமாகும். “என் தந்தை தான் என் ஹீரோ. அவரது ஊக்கமும் என் மீதான நம்பிக்கையும் இல்லாமல், இந்த சாதனை சாத்தியமில்லை. விஷயங்கள் கடினமாக இருந்தபோதும், அவரது ஆதரவு எனக்கு தொடர்ந்து முன்னேற பலத்தை அளித்தது” என்று கூறி தனது சாதனைக்கு முழு பொறுப்பு தந்தை தான் என தைபா கூறி, தந்தையின் தியாகத்தை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
தற்போது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) உரிமத்தை வைத்திருக்கும் தைபாவின் கதை பலருக்கு, குறிப்பாக சமூகத் தடைகளைத் தாண்டி தங்கள் கனவுகளைப் பின்பற்ற விரும்பும் இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. "பெண்கள் உறுதியுடன் இருந்தால், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், கடின உழைப்பின் மூலம் தங்கள் இலக்குகளை அடைய முடியும்," என்று தைபா நம்பிக்கையுடன் கூறுகிறார்.
மற்ற பெண்களுக்கு அழைப்பு:
தைபாவின் வெற்றி அவரது குடும்பத்திற்கு ஒரு வெற்றி மட்டுமல்ல, சரண் மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும், அங்கு அவர் இப்போது வழக்கத்திற்கு மாறான பாதைகளைப் பின்பற்ற விரும்பும் பல இளம் பெண்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறார். "விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பெறுவதற்கு தன்னம்பிக்கையும் தைரியமும் முக்கியம்" என்று தைபா மற்ற பெண்களுக்கு ஆலோசனைகளை கூறி, அவர்களையும் சாதிக்க அழைக்கிறார்.
நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், ஒரு சிறிய மளிகைக் கடை உரிமையாளரான தைபாவின் தந்தை மோதியுல் ஹக், தனது மகளின் விமானி பயிற்சிக்கு நிதியளிக்க தனது நிலத்தை விற்று, மகளின் சாதனைக்கு துணையாக நின்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு நெருக்கடிகளின்போது எப்படி, குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் இலட்சியங்களுக்கு துணையாக நின்று ஊக்குவிக்க வேண்டும் என்பதை தைபாவின் தந்தை தனது அழகிய செயல் மூலம் நிரூபித்துள்ளார்.
இந்திய முஸ்லிம் சமுதாயம் உண்மையிலேயே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே, இதுபோன்ற வரலாற்று சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருப்பதை சமுதாய இளைஞர்கள், பெண்கள், மற்றும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைவரும் உற்றுநோக்கி, மற்றவர்களையும் ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
சவால்கள் இல்லாத வாழ்க்கை இல்லை. நெருக்கடி இல்லாத பயணம் இல்லை. சவால்கள், நெருக்கடிகள் ஆகிய அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு, இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின்போது ஏற்படும் சிக்கல்களை கண்டு, தயங்கி நின்றுவிடாமல், தைபா அஃப்ரோஸ் போன்று தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயணத்தை தொடர்ந்து நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்கலாம். முஸ்லிம் இளம் பெண்கள் பல்வேறு தடைகளை உடைத்து தங்கள் கனவுகளை இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்த்தி வருவது சமுதாயத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment