Friday, April 18, 2025

அன்பின் மொழி உர்தூ....!

"அன்பின் மொழி உர்தூவை, மதத்துடன் இணைத்த வெறுப்பு அரசியல்"

- ஜாவீத் -

இந்திய முஸ்லிம்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து  பல்வேறு நெருக்கடிகளை சுமத்திக் கொண்டே வருகிறது. அரசின் தோல்விகளை மறைக்க பாஜக பயன்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் முதல், வக்பு திருத்தச் சட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணம் காட்டி, முஸ்லிம் வீடுகள் புல்டோர் மூலம் இடிக்கப்படுவது உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தபிறகும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துகொண்டதாக தெரியவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்கள் அதிகமாக பேசும் உர்தூ மொழி மீது தங்களுடைய வெறுப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பட்டூர் நகராட்சி மன்றத்தின் பெயர்ப்பலகையில் மராத்தியுடன் உர்தூ மொழியை பயன்படுத்துவது தவறு என்று கூறி, முன்னாள் கவுன்சிலர் வர்ஷதை சஞ்சய் பகடே என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம், நீதிபதிகள் சுதன்ஷு துலியா, கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மொழி என்பது மதம் அல்ல.  உர்தூவை முஸ்லிம்களின் மொழியாகக் கருதுவது யதார்த்தம் மற்றும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையிலிருந்து பரிதாபகரமான விலகல் என்று  கருத்து தெரிவித்தனர்.

மேலும், மொழி ஒரு சமூகத்திற்கும், ஒரு பிராந்தியத்திற்கும், மக்களுக்கும் சொந்தமானது. ஒரு மதத்திற்கும் அல்ல. மொழி என்பது கலாச்சாரம். மொழி என்பது ஒரு சமூகம் மற்றும் அதன் மக்களின் நாகரிக அணிவகுப்பை அளவிடுவதற்கான அளவுகோல். மொழி கற்றலுக்கான ஒரு கருவியாக மாறுவதற்கு முன்பு, அதன் ஆரம்பகால மற்றும் முதன்மையான நோக்கம் எப்போதும் தகவல்தொடர்பாகவே இருக்கும்  என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உர்தூவுக்கு எதிராக பாரபட்சம்:

உர்தூவுக்கு எதிரான பாரபட்சம், உர்தூ இந்தியாவிற்கு அந்நியமானது என்ற தவறான எண்ணத்திலிருந்து வருகிறது. உர்தூ இந்த மண்ணில் பிறந்த ஒரு மொழி. கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும் விரும்பும் பல்வேறு கலாச்சார சூழலைச் சேர்ந்த மக்களின் தேவை காரணமாக உர்தூ இந்தியாவில் வளர்ச்சியடைந்து செழித்தது. பல நூற்றாண்டுகளாக, அது எப்போதும் இல்லாத அளவுக்கு மெருகேறி, பல புகழ்பெற்ற கவிஞர்களின் விருப்ப மொழியாக மாறியது என்றும்  நீதிபதிகள் கூறினர். மேலும், உர்தூ வார்த்தைகளையோ அல்லது உர்தூவிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகளையோ பயன்படுத்தாமல் இந்தி மொழியில் அன்றாட உரையாடலை நடத்த முடியாது. இந்தி என்ற வார்த்தையே பாரசீக வார்த்தையான 'ஹிந்தவி' என்பதிலிருந்து வந்தது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

மதத்தின் அடிப்படையில் மொழிகளை பிரிப்பதில் காலனித்துவ சக்திகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு பிளவு. இந்தி இந்துக்களின் மொழியாகவும், உர்தூ முஸ்லிம்களின் மொழியாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. இது யதார்த்தத்திலிருந்து மிகவும் பரிதாபகரமான விலகல். பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விலகல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  ஒருவரின் தவறான எண்ணங்கள், ஒருவேளை ஒரு மொழிக்கு எதிரான நமது தப்பெண்ணங்கள் கூட, நமது தேசத்தின் இந்த மாபெரும் பன்முகத்தன்மையான யதார்த்தத்திற்கு எதிராக தைரியமாகவும் உண்மையாகவும் சோதிக்கப்பட வேண்டும். உர்தூ மற்றும் ஒவ்வொரு மொழியுடனும் நாட்டு மக்கள் அனைவரும் நட்பு கொள்ள வேண்டும். என்றும் நீதிபதிகள் அற்புதமான கருத்து தெரிவித்தனர்.  

அன்பின் மொழி உர்தூ:

உர்தூ மொழி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானவையாகும். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தில், உச்சநீதிமன்றம் தற்போது தெளிவான ஒரு பாடத்தை எடுத்துள்ளது. இப்படி உச்சநீதிமன்றம் கருத்துகளை தெரிவித்துள்ள இத்தகைய சூழ்நிலையில்,  இந்தியாவில் உர்தூவின் பரிணாமம் எவ்வளவு ஒத்திசைவானது, இந்தி உடனான அதன் பிணைப்பு எவ்வளவு வலுவானது என்பதை நினைவில் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்

"அப்னி உர்தூ மொஹப்பத் கி ஜபான் தி பியாரே, உஃப் சியாசத் நே உஸ்ஸே ஜோட் தியா மஜாப் சே "  என்று உர்தூ மொழியில் சொல்வார்கள். அதாவது 'நமது உர்தூ அன்பின் மொழியாக இருந்தது. ஆனால் அரசியல் அதை மதத்துடன் இணைத்துவிட்டது'. என்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

அன்பின் மொழி உர்தூவை, முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழியாக தவறான ஒரு பிம்பத்தை, வரைப்படத்தை வேண்டும் என்றே சிலர் வரைந்துவிட்டார்கள். தற்போதும் அந்த வெறுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் உர்தூ மொழிக்கு என தனி இடம் எப்போதும் இருந்து வருகிறது. இதேபோன்று பாகிஸ்தானிலும் உர்தூ மொழி முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக உள்ளது. இதுபோன்ற ஒரு நிலை மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லை. உர்தூ மொழியை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவதில்லை. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே உர்தூ மொழி தங்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்று முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது. 

உர்தூ மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்கள் மட்டுமே பங்களிப்புகளை அளிக்கவில்லை. சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய கவிதைகள், படைப்புகள் மூலம் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து, உர்தூ மொழியின் மேன்மைக்கு மிகப்பெரிய அளவுக்கு பணியாற்றி இருக்கிறார்கள். உர்தூ மொழி இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பிற படைப்புகளை ஆழ்ந்து படித்தால், அந்த மொழிக்கு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கிய, வழங்கிக் கொண்டு இருக்கும் பங்களிப்பை மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.  இந்தி மொழியை பயன்படுத்தும் மக்கள் கூட, உர்தூ மொழியின் சொற்களை பயன்படுத்தாமல், பேசவோ, எழுதவோ முடியாது. அந்த வகையில் உர்தூ மொழி, மிகப்பெரிய தாக்கத்தை இந்திய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

மதத்துடன் இணைத்த வெறுப்பு அரசியல்:

அப்படி, அழகான ஒரு அன்பின் மொழியை, தற்போது மதத்துடன் இணைத்து வெறுப்பு அரசியல் செய்யும் முயற்சிகளில் இந்துத்துவ சக்திகள் இறங்கியுள்ளன. அதன் காரணமாக உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு முன்பு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படுவதில்லை. கல்வி நிறுவனங்களில் உர்தூ மொழி துறை சரியான முறையில் இயங்குவதில்லை. உர்தூ ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. இந்திய விடுதலை போராட்டங்களின் போது கூட, உர்தூ மொழிக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தினர். தற்போதும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 29, இந்தியாவில் வாழும் மக்கள் தங்களுக்கு விருப்பான மொழியை பேசவும், கற்கவும், உரிமை வழங்கிறது. அதன்படி 8வது அட்டவணையில் மொத்தம் 22 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படி இணைக்கப்பட்ட 22 மொழிகளில் உர்தூ மொழியும் ஒன்றாகும். இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் உர்தூ மொழி 6வது இடத்தில் இருந்து வருகிறது. 

ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளை போல வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மொழி, உர்தூ இல்லை. உர்தூ மொழி அசல் இந்திய மொழியாகும். உர்தூ மொழி,  ஒரு விலைமதிப்பற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அழகிய மலராகும். எனவே அன்பின் மொழியான உர்தூ,  அழிந்து வரும் இனமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

=================================

No comments: