Monday, April 14, 2025

வெகுண்டெழுந்த உலமாக்கள்....!

 

"நமது வக்ஃபு நமது உரிமை"

வெகுண்டெழுந்த உலமாக்கள்

ஒன்றிய பா... அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தீவிர போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.  குறிப்பாக, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்னும் பிற முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிய பா... அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டித்து தங்களுடைய போராட்டங்களை தீவிரப்படுததியுள்ளன.

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஏற்கனவே அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் ஜந்தர் மந்தரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று, ஒன்றிய அரசு தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக செய்துவரும் அநியாயங்களை பட்டியலிட்டு, வக்பு திருத்தச் சட்டம் திரும்பப் பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும் என உறுதிப்பட அறிவித்தனர். அந்த வகையில் தற்போது, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பு:

முதல் இந்திய சுதந்திர போர்  என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயர்களை எதிர்த்து வெகுண்டெழுந்தவர்கள் முஸ்லிம்களே என்பது தான் உண்மை வரலாறு ஆகும். அதிலும், முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம், வீரப் போர் ஆகியவை அறியும்போது முஸ்லிம்களின் தியாகம் எவ்வளவு பெரிய தியாகம் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. சிப்பாய் புரட்சியில் 2 லட்சம் பேர் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51 ஆயிரத்து 200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்த முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, உலமாக்களின் தியாகம் கண்டுக் கொள்ளாமல், மறக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் போரில் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய உலமா பெருமக்கள் நாட்டின் விடுதலைக்காக சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலையும் உறுதியாக நிலைநிறுத்தியது.

உலமாக்கள் மார்க்கப் பணிகளில் மட்டுமே ஈடுபடுவார்கள் என சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாட்டிற்காக எந்தவித தியாகத்தையும் செய்யும் துணிச்சல் கொண்ட உலமாக்கள், அநியாயத்தை எதிர்த்து, நீதியை நிலை நிறுத்த தொடர்ந்து போராடும் குணம் கொண்டவர்கள் என்பது தான் உண்மையாகும். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உலமாக்கள் தங்களுடைய வீரப் பயணத்தை தொடங்கி தொடர்ந்து இருக்கிறார்கள்.

நமது வக்ஃபு நமது உரிமை:

ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 13ஆம் தேதி (13.04.2025) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் "நமது வக்ஃபு நமது உரிமை" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டங்களில், உலமா பெருமக்களின் அழைப்பை ஏற்று, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்களுடைய கண்டங்களை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசியபோது, "வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை சோர்ந்து விடக்கூடாது. நம்பிக்கை இழந்து விடக்கூடாது. இந்த சட்டத்தை திரும்ப பெறவைக்க முடியும். பாசிச கும்பல் இஸ்லாமியர்களை அந்நியர்களைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த தேசம் எங்களுக்கான தேசம் என ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும். வன்முறை தேவையில்லை. வேளாண் விவசாயிகள் ஒரு துளி வன்முறைகூட இல்லாமல் தொடர்ந்து அமைதியான வழியில் போராட்டம் நடத்தி ஆணவம் கொண்ட இந்த ஆட்சியாளர்களை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பஞ்சாபில் தோல்வி பெறசெய்தார்கள். சட்டத்தை திரும்பப் பெற வைத்தார்கள். இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்புகிறார்கள். இஸ்லாமியர்கள் பாஜவுக்கு எதிராக போராட வேண்டுமே தவிர இந்து சமூகத்திற்கு எதிராக அல்ல" என்று பேசினார்.

பா.ஜ.க. அரசைக் கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற நமது வக்ஃப், நமது உரிமை போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு சிறுபான்மையின மக்களை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, அருமையாக உரையாற்றினார்,. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், மௌலானா பக்ருத்தீன் பாகவி, கவிஞர் மதுக்கூர் இராமலிங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீர முழக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை எடுத்துரைத்தனர்.

சென்னையில் நடந்த போராட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர் சேகர்பாபு, ஊடகவியலாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த கண்டனப் பொதுக்கூட்டங்கள், ஒன்றிய பாஜக அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என தெரிவித்தனர்.

இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.நவாஸ் கனி, தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், காயல் மஹபூப் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீகின் முன்னணி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, வக்பு என்றால் என்ன? அதை ஏன் பாதுகாக்க வேண்டும் ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பான விளக்கம் அளித்து முஸ்லிம்களிடையே மட்டுமல்லாமல், சகோதர சமுதாய மக்கள் கூட விழிப்புணர்வு அடையும் வகையில் அற்புதமான விளக்கங்களை அளித்தனர்.

கோவை, திருப்பூர், கடலூர், புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சாவூர் என மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டங்களில் உலமா மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டு, தங்களது முழு ஆதரவை அளித்தனர்.

வெகுண்டெழுந்த உலமாக்கள்:

ஏக இறைவனின் சொத்தான வக்பு சொத்தை, சதித் திட்டங்கள் மூலம் புதிய திருத்தச் சட்டங்கள் மூலம் அபகரிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயல்களை முஸ்லிம் சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் என சிலர் கற்பனை செய்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த முஸ்லிம்கள், குறிப்பாக உலமாக்கள், தற்போது இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்கள் அமைதியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விடுவார்களா என்ன? ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

வக்பு சொத்து என்பது ஏக இறைவனின் சொத்தாகும். அந்த சொத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை  மற்றும் பொறுப்பாகும். அந்த வகையில் வக்பு சொத்தை பாதுகாக்க வெகுண்டெழுந்துள்ள உலமா பெருமக்கள், முஸ்லிம்கள் மத்தியிலும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டனர். மேலும் ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (11.04.2025) அன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு, அனைத்து மஸ்ஜித் கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, ஒவ்வொரு மஸ்ஜித் வாசல் முன்பும் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஏக இறைவனிடம் அழகிய முறையில் துஆ கேட்கப்பட்டது.

இப்படி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உலமா பெருக்கள் வெகுண்டெழுந்து இருக்கிறார்கள். வரும் 19ஆம் தேதி அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவுக்கு வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. விடுதலை போரில் உலமாக்கள் செய்த தியாகம் எப்படி, வீணாக போகவில்லையோ, அதேபோன்று, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உலமா பெருமக்கள் செய்யும் தியாகங்களும், போராட்டங்களும் ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாற்று குறிப்பில் பதிவு செய்யப்பட்டு, அது எப்போதும் நிலைத்து நிற்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்  

No comments: