"வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு"
- நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா ராஜினாமா -
இந்திய முஸ்லிம்களை குறிவைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையிலும் கூட, ஒன்றிய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டித்து, முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் கடந்த 13.04.2025 அன்று நடைபெற்ற நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 16.04.2025 அன்று லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மெகா கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்றது. இதேபோன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு 19.04.2025 அன்று நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம், முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள மக்களை வியப்பு அடையச் செய்தது. அத்தகைய வகையில் ஹைதராபாத் குலுங்கும் வகையில் மக்கள் அலை அங்கு காணப்பட்டது.
வக்பு திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டின் பன்முகத்தன்மையில் அக்கறை கொண்ட நல்லவர்கள், மதச்சார்பின்மையில் உறுதிகொண்ட மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசின் சதிக்கு எதிராக தைரியமாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தைக் கண்டித்து சிலர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்யும் போக்கும் நாட்டில் தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் பீகாரைச் சேர்ந்த நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா :
பீகார் மாநிலம் சீதாமர்ஹியைச் சேர்ந்தவரான மூத்த ஐபிஎஸ் அதிகாரி நூருல் ஹோடா, 1995 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். ஒரு துணிச்சலான மற்றும் அடையாள நடவடிக்கை, நேர்மை மற்றும் சேவைக்கு பெயர் பெற்ற நூருல் ஹோடா, இந்தியாவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சில மண்டலங்களில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தேசத்திற்கு சேவை செய்துள்ளார். தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், ஹோடா, தன்பாத், அசன்சோல் மற்றும் டெல்லி பிரிவு உள்ளிட்ட பல உணர்திறன் மற்றும் உயர் அழுத்த மண்டலங்களில் பணியாற்றினார். ரயில்வே பாதுகாப்பு, நக்சல் கட்டுப்பாடு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் புதுமையான உத்திகளை செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அவரது சிறந்த சேவை, அவருக்கு இரண்டு முறை மதிப்புமிக்க விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும், இரண்டு முறை டைரக்டர் ஜெனரல் சக்ராவையும் பெற்றுத் தந்துள்ளது.
சமூக சேவையில் ஆர்வம்:
தனது பணி சீருடையைத் தாண்டி, ஹோடா சமூக மாற்றத்திற்கான தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். தனது சொந்த கிராமத்தில், கிட்டத்தட்ட 300 பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருகிறார். கல்விதான் உண்மையான அதிகாரமளிப்பின் அடித்தளம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். கல்விதான் உண்மையான அனைத்துக்குமான திறவுகோல் என்று உறுதியாக நம்பும் அவர், அதை மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டு, அதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி, தனது கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருவதுடன், அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற தேவையான பணிகளையும் உறுதியாக தொடர்ந்து செய்து வருகிறார்.
வக்பு சட்டத்திற்கு எதிராக பதவி ராஜினாமா:
தனது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற ஹோடா, தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய காவல் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இப்போது சேவையிலிருந்து வெளியேறும் ஹோடா, பொது வாழ்க்கையில் நுழைய உள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து கருத்து கூறியுள்ள அவர், "காக்கியில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, நான் இப்போது காதி அணிவேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் சேரும் தனது விருப்பத்தைக் குறிப்பிடுகிறார். அரசியலில் நுழைவதற்கான அவரது முடிவு, அவரது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பரந்த தளத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்படுகிறது. மேலும், ஜனநாயக தளங்கள் மூலம் முறையான பிரச்சினைகளைத் தீர்த்து, அவரது சமூகம் மற்றும் தேசத்திற்கு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையால் அவரது வருகை உந்தப்படுகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சியில் அவர் இணைந்துள்ளார்.
நிர்வாக அனுபவம், அடிமட்ட ஈடுபாடு மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன், நூருல் ஹோடா, இந்திய அரசியலில் ஒரு வலுவான மற்றும் கொள்கை ரீதியான குரலாக வெளிப்படத் தயாராக உள்ளார். நிர்வாக மற்றும் சிவில் சமூக வட்டாரங்களில் பரவலாக மதிக்கப்படும் ஹோடாவின் ராஜினாமா, அதிகாரத்துவ மற்றும் அரசியல் நிலப்பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. "நான் எப்போதும் நீதியுடன் நிற்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இன்று, என் மனசாட்சி இனி என்னை அமைதியாக இருக்க அனுமதிக்கவில்லை" என்று ஹோடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாராட்டப்பட வேண்டிய முடிவு:
பல தசாப்தங்களாக சீருடையில் இருந்த ஹுடா, இப்போது ஒரு புதிய பாதையை தேர்வு செய்ய முடிவு செய்து இருப்பது பாராட்டப்பட வேண்டிய, வரவேற்றக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவரது நிர்வாக அனுபவம், தரைமட்ட ஈடுபாடு மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், ஜனநாயக வழிமுறைகள் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் அவர், அதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறலாம்.
ஒன்றிய பாஜக அரசின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து ஒருபுறம், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம், நூருல் ஹோடா போன்ற நேர்மையான அதிகாரிகள், தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என உறுதியாக கூறலாம். இன்னும் சமூக அக்கறை இல்லாமல் இருக்கும் மற்றவர்களையும் நூருல் ஹோடாவின் முடிவு நிச்சயம் யோசிக்க, சிந்திக்க வைக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment