Friday, May 16, 2025

குரூப்-2 தேர்வில் முதலிடம் பிடித்து முஸ்லிம் மாணவி நபிலா சாதனை...!

"டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த முஸ்லிம் மாணவி நபிலா"

- முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என கருத்து - 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)  சார்பில் மாநில அரசுப் பணிகளில் சேர போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் அரசுப்  பணிகளின் வகையில் பல்வேறு குரூப்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.டி.சி. குரூப்-2 தேர்வு, அண்மையில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகளின் படி, மாநில அளவில் முஸ்லிம் மாணவி நபிலா முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவது என்பது பல இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. தேர்வு செய்தால் போதும், அரசுப் பணிகளில் சேர்ந்துவிடலாம் என்றும் இளைஞர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் கடுமையாக முயற்சி செய்தால், குரூப்-2 தேர்வில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை பெற முடியும் என்பதை முஸ்லிம் மாணவி நபிலா நிரூபித்துள்ளார். அவரது இந்த சாதனைக்கும் வெற்றிக்கும் என்ன காரணம்? என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமுதாயம் இதுபோன்ற தகவல்களை, வெற்றி சாதனை செய்திகளை நம் சமுதாயத்தில் பரப்ப வேண்டும். நம்முடைய இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற உத்வேகத்தை உருவாக்க வேண்டும். எப்படி, மாணவி நபிலா சாதனை செய்தாரோ, அதுபோன்று மற்றவர்களும் சாதனை செய்ய முன்வர வேண்டும். சரி சாதனை மாணவி நபிலாவின் முயற்சிகள் குறித்து நாமும் கொஞ்சம் அறிந்துகொள்வோம். 

கடும் முயற்சி:

கடந்த 2014ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த நபிலா, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முறையாக  குரூப்-2 தேர்வில் கலந்துகொண்டார்.  திருமணத்திற்குப் பிறகு, தனக்கு குழந்தை பிறந்ததால், அந்த தேர்வில் அவரால், சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. குரூப்-2 தேர்வில் இலக்கத்தியத்தை அவர் பாடத்திட்டமாக தேர்வு செய்து இலக்கியம் தொடர்ந்து தகவல்களை திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தினார். இலக்கியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நல்ல முறையில் திரட்டி வைத்து இருந்தார். கவிதைகள், சங்க இலக்கியங்கள், இலக்கிய கட்டுரைகள் என அனைத்து தகவல்களையும் அவர் சிறப்பான முறையில் திரட்டி, தேர்வுக்கு தன்மை தயார்படுத்திக் கொண்டார். 

குரூப்-2 தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலை மற்றும் மெயின் தேர்வு என இரண்டு நிலைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளில் நபிலா சரியான முறையில் தேர்வை எழுதினார்.  முதல் முறை தேர்வு எழுதும்போது, மெயின் தேர்வில் சமர்ப்பிக்க வேண்டிய  விடைத்தாள்களை பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்  சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், இரண்டாவது முறை நல்ல முறையில் தயாரித்து  சிறப்பான முறையில் சமர்ப்பித்துவிட்டார். குரூப்-2 தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், இதற்கிடையில் குரூப்-1 தேர்வுக்கும் அவர் கவனம் செலுத்தினார்.

முயற்சியே வெற்றிக்கு வழி:

தன்னுடைய வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள நபிலா "குரூப்-2 தேர்வை  பொறுத்தவரை மெயின் தேர்வு விடைத்தாள்களை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நாம் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான பயிற்சி மூலம் மட்டுமே, நம்மால் வெற்றி பெற முடியும். தாள்களை சரியான முறையில் சமர்பிப்பது மட்டுமல்லாமல், சரியான வகையில் விளக்கம் அளித்து இருக்க வேண்டும். கையெழுத்து நல்ல முறையில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அழகான முறையில் இருக்க வேண்டும். 

பாடத்திட்டத்தில்  என்ன இருக்கிறதோ அதை நன்கு படித்து இருக்க வேண்டும். திரும்ப திரும்ப படித்து கவனத்தில் கொள்ள வேண்டும். அதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தை தாண்டி படிக்க வேண்டிய அவசியம் இல்லை.  ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’" என்ற திருக்குறளை  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை கவனத்தில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இது எனது முதல் தேர்வு கிடையாது. நானும் பல்வேறு சவால்களை சந்தித்து பிறகுதான் வெற்றியை எட்டியுள்ளேன். 

கடந்த 2014ஆம் ஆண்டு நான் கல்லூரி படிப்பை முடித்தேன். பிறகு, கல்யாணம், குழந்தை பிறப்பு என பல்வேறு குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்ட்டது. பொதுஅறிவு உள்ளிட்ட விவகாரங்களில் நான் மிகப்பெரிய அளவுக்கு அறிவாளி இல்லை. எனவே இலக்கியத்தை முன்னிலைப்படுத்தி தான் தேர்வுக்கு நான் தயாரானேன். மெயின் தேர்வை பொறுத்தவரை, சிறப்பான முறையில் விடைத்தாள்களை நாம் சமர்பிக்க வேண்டும்.  கல்யாணத்திற்கு முன்பாக காலை 6 மணிக்கு எழுந்து படிப்பேன். கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்தபிறகு, என்னுடைய குழந்தை எப்போது தூங்கச் செல்லுமோ அப்போது தான் நான் படிப்பேன். எப்போது படிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆனால் கண்டிப்பாக படிக்க வேண்டும். எனவே நான் எனது கவனத்தை முழுவதும் தேர்வில் செலுத்தி படித்தேன். ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம் படித்தால் போதும். போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, முயற்சி, முயற்சி இதுதான் சரியான திசையை நம்மை கொண்டு செல்லும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" இப்படி நபிலா தம்முடைய வெற்றியின் ரகசியம் முயற்சி மட்டுமே என கூறியுள்ளார். 

தம்முடைய வெற்றிக்கு தம்முடைய கணவர், தாய் தந்தை, மாமனார், மாமியார், வீட்டில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருந்தது என்றும் அவர் பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மேலும், ஏக இறைவனின் கருணை இல்லாமல், தம்முடைய வெற்றி சாத்தியமே இல்லை என்றும் ஏக இறைவனுக்கு புகழ் அனைத்தும் என நபிலா மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

சாதிக்க வாருங்கள்:

பல்வேறு நெருக்கடிகள், பல்வேறு குடும்ப பொறுப்புகள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, எப்படியும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் செயல்பட்டு, குரூப்-2 தேர்வில் கலந்துகொண்டு, அதில் சிறந்த முறையில் தம்முடைய பங்களிப்பை அளித்து வெற்றி பெற்று இன்று தமிழ்நாடு வேளாண்மை துறையில் உயர் பதவியில் நபிலா அமர்ந்துள்ளார். வாழ்க்கையில் வெற்றி என்பது மிகவும் எளிதாக கிடைத்துவிடாது. அந்த வெற்றியை நோக்கி நாம் தான் அடியெடுத்து வைக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடக் கூடாது. அத்தகைய ஒரு வெற்றியை தான் நபிலா வெற்றி இருக்கிறார். முஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு நபிலா ஒரு சிறந்த வெற்றியாளருக்கான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். இதை நம்முடைய சமுதாய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வெற்றி திசையை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணத்தில் சாதிக்க முன் வர வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: