"தீப்பிழம்புகளும் பசியும் எங்கள் குழந்தைகளை விழுங்குகின்றன"
- ஐ.நா.வில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் -
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மக்கள் மீது மீண்டும் இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை தொடங்கி நடத்தி வருகிறது. கொஞ்சமும் மனிதநேயம் இல்லாமல் நடத்தப்பட்டுவரும் இந்த தாக்குதல்கள் காரணமாக நாள்தோறும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இஸ்ரேலின் அடாவடிச் செயல்களை சர்வதேச அமைப்புகள் கண்டும் காணாமல் அமைதியாக இருந்து வருகின்றன.
காசாவை முற்றிலும் அழித்துவிட்டு, அதனை கைப்பற்ற வேண்டும் என இஸ்ரேல் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக காசா மக்களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் இருக்க காசாவின் எல்லைகளை சீல் வைத்து முடியுள்ளது. சர்வதேச கண்டனங்களைத் தொடர்ந்து ஒப்புக்காக சிறிதளவு பொருட்களை காசாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதனால், காசா மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதுஒருபுறம் இருக்க, நாள்தோறும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கண்ணீர் :
இத்தகைய சூழ்நிலையில், கடந்த 27ஆம் தேதி செவ்வாயன்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் பங்கேற்று, தற்போது காசாவில் உள்ள நிலைமையை மனம் உடைந்து பேசினார். காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து, குழந்தைகள் உயிரிழப்புகள் குறித்த துயரமான கணக்குகளையும் புள்ளிவிவரங்களையும் அவர் வேதனையுடன் பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டார்.
குரல் நடுங்கி பேசிய மன்சூர், அவசர வேண்டுகோளுடன் தனது பேச்சைத் தொடங்கினார். டாக்டர் அல் நஜாரின் குடும்பத்தினரின் மரணத்திற்கு முந்தைய இஸ்ரேலின் தாக்குதலைக் குறிப்பிட்டு பேசிய அவர், "தனது சொந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தபோது, உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு மருத்துவராக தனது உன்னத பணியை செய்த காசா மருத்துவரின் மரண அதிர்ச்சியை விவரித்தார் "அவர்களின் உடல்கள் எரிந்து ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டனர். இஸ்ரேலின் தாக்குதலில் டாக்டர் தனது 10 குழந்தைகளில் 9 பேரை இழந்தார். இந்த கொடூரத்தை அறியும்போது மனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு திகில் மற்றும் அதிர்ச்சி இதயத்தால் தாங்க முடியவில்லை" என்று ரியாத் மன்சூர் கண்ணீருடன் குறிப்பிட்டார்.
நாள்தோறும் கொல்லப்படும் வேதனை :
மார்ச் மாத போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக நாள்தோறும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை மன்சூர் மேற்கோள் காட்டினார். "இதுவரை ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டனர். அத்துடன் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குழந்தைகள், குழந்தைகள். இஸ்ரேல் குழந்தைகளை கொன்று இன்னும் காட்டுமிராண்டித்தனமான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது. மனிதநேயத்திற்கு எதிரான போரை நடத்தி குழந்தைகளை கொன்றுக் கொண்டு இருக்கிறது" என்று மன்சூர் மனம் உடைந்த பேசினார்.
பின்னர் அவர் பட்டினியின் பலியைக் குறிப்பிட்டார். “டஜன் கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். தாய்மார்கள் அசைவற்ற உடல்களைத் தழுவி, தலைமுடியைத் தடவி, அவர்களிடம் பேசி, அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்” என்று கூறி காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் காரணைமாக ஏற்பட்டுள்ள நிலைமையை அவர் விவரித்தார். மேலும் தூதர் மன்சூர் தனது குடும்பத்தினரைக் குறிப்பிட்டு பேசினார். “இந்தத் துயரத்தை யாரால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? எனக்குப் பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியும்” என்று கேள்வியை எழுப்பினார்.
உலகின் செயலற்ற தன்மை :
வேதனையிலும் கோபத்திலும் மன்சூர் மேடையைத் தட்டி, உலகின் செயலற்ற தன்மையை “எந்தவொரு சாதாரண மனிதனும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அப்பாற்பட்டது” என்று காட்டமாக தெரிவித்தார். “தீப்பிழம்புகளும் பசியும் பாலஸ்தீனக் குழந்தைகளை விழுங்கி வருகின்றன” என்று மன்சூர் கூறினார். இது உலகம் எங்கும் உள்ள பாலஸ்தீனியர்கள், நம்மில் 14 மில்லியன் ஆகியோருக்கு சீற்றத்தின் வேர்" என்று அவர் தெரிவித்தார்.
“நாங்கள் எங்கள் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் மக்களை நேசிக்கிறோம். இந்த துயரத்தையும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் அவர்கள் கடந்து செல்வதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று மிகவும் கண்ணீருடன் பேசி தனது உரையை முடித்த பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், “நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், பாலஸ்தீனத்தில் வேரூன்றிய ஆலிவ் மரங்களை விட, ரோமானிய மரங்களை விட, பாலஸ்தீனத்தில் நாங்கள் வேரூன்றி இருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் அங்கிருந்து எங்கும் போக மாட்டோம். நாங்கள் வாடிவிட மாட்டோம். நாங்கள் எங்கள் தாயகத்தில் தங்கியிருக்கிறோம்” என்று உறுதிப்பட திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த மன்சூர், "ஏதாவது செய்யுங்கள். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்தக் குற்றம், இந்த இனப்படுகொலை தொடர்வதைத் தடுக்க உடனடியாக ஏதாவது செய்யுங்கள்" என்றும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment