"அலி சகோதரர்களின் அன்னை அபாதி பானு பேகம் பீமா"
ஒரு மனிதன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு முதல் முழு காரணமாக இருப்பார் அவரது அன்னை தான். அம்மா என்றால் அன்பு மட்டுமல்லாமல், ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க ஒளி காட்டும் ஒளிவிளக்காகவும் இருக்கிறார் என்பது தான் உண்மையாகும். வாழ்க்கையில் சாதித்த பலர், தங்கள் அன்னையின் அன்பு மொழியை மட்டுமே கேட்டு, அதன்படி நடந்து இருக்கிறார்கள் என்பதை வரலாற்று பக்கங்களில் நாம் காணலாம்.
அன்னையர் தினம்:
இப்படி மனிதனின் வாழ்க்கை, மிகச்சிறந்த முறையில் அமைய காரணமாக இருக்கும் அன்னையரை போற்றும் வகையில்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை, உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையின் பெருமையை போற்றும் இந்த தினத்தில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு தாய்மார்களுக்கு கவுரவம் அளிக்கப்படுகிறது. அன்னையர் தினத்தை கொண்டாடும் நாம் உண்மையாகவே அன்னையை மதிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அன்னையர் தினம் கொண்டாடி விட்டு, மற்ற நாட்களில் அன்னையை மறந்து விடக் கூடாது. ஒவ்வொரு நாளும் தாயை போற்றி மகிழ வேண்டும்.
"தாயின் பாதங்களில் சொர்க்கம் உண்டு" என இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய அர்த்தம், அன்னைக்கு எப்போதும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதாகும். அன்னையிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் கொண்டு பேசக் கூடாது. "சீ" என்று சொல்லக் கூடாது. அன்னையிடம் எப்போதும் பணிவாக நடக்கும் மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும். மாறாக, அன்னையிடம் அன்பு காட்டாத மனிதன், மனிதனே இல்லை.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுவோம். அன்னையை மதிப்போம். அன்னையர் தினம் கொண்டாடும் இந்த தருணத்தில், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற ஓர் சிறந்த அன்னையை, தியாகி அம்மாவை நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியமாகும்.
சிறந்த அன்னை அபாதி பானு பேகம் பீமா:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மிகவும் பிரபலமான தாய்மார்களில் ஒருவர் தான் அபாதி பானு பேகம் பீமா அவர்கள் ஆவார்கள். அவர் முறையான கல்வியைப் பெறவில்லை. நல்ல கல்வியை கற்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், இஸ்லாமிய கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நவீன ஆங்கிலக் கல்வியின் மதிப்பை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவர் தனது குழந்தைகளுக்கு இஸ்லாமிய கல்வியுடன், ஆங்கிலக் கல்வியைக் கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது குழந்தைகளுக்கு சிறந்த, நல்ல கல்வி கற்பிப்பதற்காக தனது சொந்த நகைகளை அடகு வைத்தார். இப்படி பல தியாகங்கள் செய்த காரணத்தால், பின்னர் அவரது இரண்டு மகன்களான மெளலானா முகமது அலி மற்றும் ஷௌகத் அலி ஆகியோர் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான டெல்லியின் பிரபலமான ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
தாயின் வழிக்காட்டுதல் காரணமாக இரு சகோதரர்களும் இந்திய சுதந்திர போராட்டத்தில், கிலாபத் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர். இந்திய விடுதலை போரில் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்காக சிறைக்குச் சென்றனர்.
பிரபலமான முஸ்லிம் பெண்மணி:
இந்திய சுதந்திர போராட்டத்தைத் தூண்டுவதற்காக பொதுக்கூட்டங்கள் மற்றும் பிற கூட்டங்களில் உரைகளை நிகழ்த்திய இந்தியாவின் முதல் பிரபலமான முஸ்லிம் நபரில், அபாதி பானு பேகம் பீமாவும் ஒருவர் ஆவார். பொதுக் கூட்டங்களின் போது முழு முக மறைப்பைக் கைவிட்ட முதல் பிரபலமான முஸ்லிம் பெண்மணியும் இவர்தான்.
தனது குழந்தைகள் மெளலானா முகமது அலி மற்றும் ஷெளகத் அலி ஆகியோருக்கு அவரது தாய் அபாதி பானு பேகம் பீமா அவர்கள், உணவு மட்டும் ஊட்டவில்லை. உணவுடன் சேர்த்து சுதந்திர உணர்வையும் ஊட்டினார். நல்ல கல்வி மட்டும் அளிக்கவில்லை. கல்வியோடு நாட்டின் விடுதலை மற்றும் வளர்ச்சிக்காக உழைக்கும் ஆர்வத்தையும் உருவாக்கினார்.
இப்படிப்பட்ட ஓர் அன்னையின் அரவணைப்பு கிடைத்ததால், அலி சகோதரர்கள் என பெருமையாக அழைக்கப்படும் மெளலானா முகமது அலி, அவரது மூத்த சகோதரர் ஷௌகத் அலி ஆகியோர் நாட்டிற்காகவே சிந்தித்தார்கள். நாட்டிற்காகவே வாழ்ந்து சேவை செய்தார்கள். அலி சகோதரர்கள் அடித்தளம் போட்டு உருவாக்கிய டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, இன்று உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள், உலக அளவில் சாதித்து வருகிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற இந்திய குடிமைப் பணிகளில் சேர இந்த பல்கலைக்கழகத்தில் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படி, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் ஒரு சிறந்த கல்வி மையமாக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா திகழ்வதற்கு, அலி சகோதரர்கள் ஆற்றிய பங்களிப்புக்கு மூலக் காரணமாக திகழ்ந்தவர் அபாதி பானு பேகம் பீமா ஆவார்.
ஓர் அன்னை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளுக்கு எப்படி நல்ல கல்வியை அளிக்க வேண்டும்? சுதந்திர போராட்ட இயக்கத்தில் எப்படி இணைந்து செயல்பட குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு சிறந்த பதிலாக, விளக்கமாக திகழ்ந்தவர் தான் அபாதி பானு பேகம் பீமா.
அன்னையர் தினம் கொண்டாடும் நாம், நம் சமுதாயத்தில் வாழ்ந்த வீர அன்னையர்களாக திகழ்ந்தவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தியாகங்களை ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், நமது அன்னையர் நமக்காக செய்த தியாகங்களையும், பணிகளையும், உழைப்பையும், நமக்காக செலுத்திய அன்பையும், பாசத்தையும் எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, அன்னையரை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை, கடமைகளை, பொறுப்புகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment