*நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில்
இ.யூ.முஸ்லிம் லீக் எப்போதும் சமரசம் செய்துகொண்டதே கிடையாது.
* நாட்டு மக்கள் மத்தியில் மத ரீதியாக பிரச்சினையை
ஏற்படுத்தி, அரசியல் லாபம் பெற பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது
* சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக திமுக தொடர்ந்து
இருந்து வருகிறது
* வலிமையான திமுக தலைமையிலான கூட்டணியை ஆசை வார்த்தைகள்
மூலம் உடைக்க யாராலும் முடியாது
* தமிழகத்தில் திமுக தலைமையில் கொள்கை ரீதியான மதசார்பற்ற கூட்டணி மீண்டும் மகத்தான வெற்றி பெறும்
"வசந்த் தொலைக்காட்சி கேள்விக்களம் நிகழ்ச்சி"
இ.யூ.முஸ்லிம் லீம் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அதிரடி பதில்கள்
தமிழகத்தில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி ஊடகமான வசந்த் தொலைக்காட்சியில் கேள்விக்களம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 18.05.2025 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பங்கேற்று நேர்காணல் நடத்திய திரு.முத்துகுமார் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அதிரடி பதில்களையும் விளக்கங்களையும் அளித்தார். வசந்த் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சியின் முழு விவரங்களையும் மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் மணிச்சுடர் வாசகர்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளார்.
ஓன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு:
கேள்வி: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையை, போரை ஒன்றிய அரசு சிறப்பாக கையாண்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மனித தன்மை இல்லாமல் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது இந்திய ராணுவ வீரர்கள் மிகத் துல்லியமாக செயல்பட்டு சிறப்பான முறையில் பயங்கரவாதிகளுக்கு பதில் தந்து இருக்கிறார்கள். இப்படி சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்த்தும் வகையில், அவர்களை பாராட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்ற பேரணியை கடந்த 10.05.2025 அன்று நடத்தினார்கள். ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் நடந்த இந்த பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நானும், நம்முடைய துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டோம்.
இந்த விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். டெல்லியில் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் அவர்கள் வரவில்லை என்ற குறைப்பாடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இருந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் போரை நிறுத்தியது அமெரிக்க அதிபரின் தலையீடு இருக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் தான் முதலில் இதுகுறித்த தகவலை அறிவித்தார் என்ற செய்திகளும் உள்ளன.
இந்த பிரச்சினைக் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கூட்டத்தை கூட்டி, பிரச்சினை குறித்து ஒன்றிய அரசு தெளிவுப்படுத்தினால் மட்டுமே, மக்கள் மத்தியில் உள்ள அச்சம், சந்தேகம் நீங்கும்.
கேள்வி: பிரதமர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை? போரை நிறுத்துவது குறித்து அறிவிப்பை அமெரிக்க அதிபர் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் என நினைக்கிறீர்கள்?
பதில்: இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தெளிவுப்படுத்தினால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். இந்த பிரச்சினையில் எந்தவித சந்தேகமும் நமக்கு இல்லை. இ.யூ.முஸ்லிம் லீகை பொறுத்தவரை, ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலையில் எழும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டி, அதில் இந்தியா-பாகிஸ்தான் தொடர்பான பிரச்சினை, தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு எழுந்த நிலை உள்ளிட்ட அம்சங்களை விளக்கினால், ஒன்றிய அரசின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் நிலையில் இருப்பதால், அதற்கு பதில் அளித்து தெளிவுப்படுத்த வேண்டிய கடமை நாட்டை ஆளும் பாஜகவிற்கு உண்டு.
கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு, பிரதமர் மோடியின் கவுரவத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது. அவரது வலிமை சந்தேகம்படும்படி உள்ளது என சமூக ஊடகங்கள் விமர்சனங்கள் வருகின்றன. 1971ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் போரை கையாண்டதற்கும், தற்போது, பிரதமர் போரை கையாண்டுதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பன போன்ற விமர்சனங்கள் எழுகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் செயல்பாடுகள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை புதிய நாடாக உருவாக்கும் வகையில் ஒரு இரும்பு பெண்மணியாக இருந்து செயல்பட்டார்கள். இதுகுறித்து நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அறிந்து இருக்கிறோம். படித்து இருக்கிறோம். ஆனால் இந்திய இறையாண்மை என்ற பிரச்சினை இருப்பதால், போர் பிரச்சினையில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. அது சரியான அணுகுமுறையும் இல்லை.
ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து கூறினால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில், எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை என்பதாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை, நாடு சுதந்திரம் அடைந்தது முதல், எங்கள் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். காஷ்மீர் பிரச்சினை வந்தபோது, காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என மிகமிக தெளிவாக பேசினார். உறுதிப்பட கருத்தை தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, இந்தியா-பாகிஸ்தான் போரின்போதும், இந்தியா-சீனா போரின்போதும் தம்முடைய ஒரே மகனை போர் களத்திற்கு அனுப்ப காயிதே மில்லத் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையும் அவர் போர் நிதிக்காக வழங்கினார்கள். இது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் மட்டுமல்லாமல், இந்திரா காந்தி காலத்திலும் தொடர்ந்தது. இன்றைக்கும் நாங்கள் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம்.
மதக் கண்ணோட்டம் கூடாது:
இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது பைத்தியகாரத்தனமாகும். நாட்டின் இறையாண்மை விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் எப்போதும் சமரசம் செய்துகொண்டதே கிடையாது. நாட்டிற்கு உண்மையாக இருப்பதும், நாட்டுப்பற்று என்பது எங்களது இறை நம்பிக்கையில் ஒன்றாகும்.
ஆனால் பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய ராணுவம் கர்னல் சோபியா குரேஷி என்ற முஸ்லிம் பெண்மணியை முன்னிலைப்படுத்தி, பாகிஸ்தானில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது. ஆனால், அந்த வீர பெண்மணி குறித்து மத்திய பிரசதேச அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது பா.ஜ.க.வின் மத துவேஷ கருத்து என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்படி எந்தவித கருத்துகளையும் ஒருபோதும் தெரிவிக்காது. நாட்டிற்கு உண்மையாக செயல்படும் இயக்கம் நமது இயக்கமாகும்.
மக்கள் மத்தியில் மத ரீதியாக கருத்துகளை தெரிவிப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவது என பாஜக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு நாங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் நாங்கள் ஒன்றிய அரசையும், பிரதமரையும் அதிகமாக விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கும் பிரதமருக்கும் உண்டு.
கேள்வி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்களா, இல்லையா என்பது கேள்வி அல்ல. ஆனால், இந்த பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடத்தபிறகு, ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும், குறிப்பாக அங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தார்கள். தாக்குதலுக்கு எதிராக கண்டன பேரணி நடத்தினார்கள். இதுபோன்று, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூட காஷ்மீர் மக்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை என்றும், எங்களை காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள் தான், வழிக்காட்டியாக வந்து உயிரை இழந்தவர் ஒரு முஸ்லிம் தான் என புகழாரம் சூட்டினார்கள். எனவே, மத ரீதியாக பிரச்சினையை கொண்டு செல்லும் முயற்சிகள் நிச்சயம் தோல்வி அடையும். இந்த பிரச்சினையில் பாஜக மத ரீதியாக கையாண்டால், நிச்சயம் தோல்வியில் தான் முடியும்.
கேள்வி: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதை கண்டித்து நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா?
பதில்: நிச்சயமாக இல்லை. அதாவது தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தீவிரவாதி ஒருவன் ஒரு மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், அவனை மதத்தோடு இணைத்து பேசக் கூடாது. எந்த மதத்திலும் தீவிரவாத்திற்கு இடம் கிடையாது. சிறப்பு அந்தஸ்து பிரச்சினையை எடுத்துக் கொண்டால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது வாக்குறுதி கொடுக்கப்பட்ட அந்தஸ்தாகும். ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், போன்றவர்களால் காஷ்மீர் மக்களின் அந்தஸ்து பாதுகாக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதியாகும். ஆனால், பாஜக. யூனியன் பிரதேசங்களாக இருந்தவற்றையெல்லாம், மாநிலமாக மாற்றிவிட்டு, மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டார்கள். இது எவ்வளவு பெரிய அநீதி. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பாஜக இதை செய்துள்ளது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீர் மக்கள் ஜனநாயக முறைப்படி செயல்பட்டு, புதிய அரசை ஆட்சியில் அமர்த்தி விட்டார்கள்.
பாஜக ஆட்சியில் வெறுப்பு சம்பவங்கள்:
கேள்வி: கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் அதிகமாக வருகின்றன. இதன்மூலம் ஒரு சமூக பதற்றத்தை பாஜக உருவாக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், பாஜக சொல்வது என்னவென்றால், இஸ்லாமியர்களால் அரசியல் லாபம் பெறக் கூடியவர்கள் எதிர்க்கட்சிகள் தான் என சொல்கிறது. அவர்களுக்கு எதுவும் எதிர்க்கட்சிகள் நன்மை செய்வது இல்லை என பாஜக விமர்சனம் செய்கிறது. உண்மையில் என்ன நடக்கிறது?
பதில்: பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ்-யின் அரசியல் பிரிவு. நாட்டின் விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. நாட்டின் தேசிய கொடியை கூட ரொம்ப காலத்திற்குப் பிறகு தான் அவர்களின் தலைமை அலுவலகத்தில் ஏற்றினார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தான் தேசிய கொடியை ஏற்றினார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எந்தவித பங்களிப்பையும் அவர்கள் தரவில்லை. அவர்களுடைய எண்ணமெல்லாம் இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்பதாகும். மதசார்பின்மையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்து நாடாக மாற்ற என்ன செய்ய வேண்டுமானால், அரசியல் ரீதியாக, மத ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்த வேண்டும் என்பதால் அரசியல் ஆதாயம் பெற முடியும். அதற்கான காரணமாக தான் 11 ஆண்டுகளில் எத்தனையோ சட்டங்களை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக கொண்டு வந்தார்கள். முத்தலாக் தடைச் சட்டம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தனி அந்தஸ்து பறிக்கச் சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து பறித்தல், காஷ்மீர் மாநிலத்தை உடைக்க புதிய சட்டம், சிஏஏ போன்ற சட்டங்களில், குடியுரிமை சட்டத்தில் எல்லா மதத்திற்கும் உரிமை உண்டு. இஸ்லாமியர்களுக்கு இல்லை. தற்போது வக்பு திருத்தச் சட்டம் என தொடர்ந்து பாஜக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளை கவனித்தால், இந்து-முஸ்லிம் என பிரித்து பார்ப்பதாக இருக்கும். அதன்மூலம் அரசியல் லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்துகளின் வாக்குகளை பெறலாம் என்ற ஒரே எண்ணத்தில் எடுக்கப்பட்டவையாகும்.
இந்து சமுதாயத்தில் எத்தனை பேர் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. பா.ஜ.க.வின் தந்திரம் வட மாநிலங்களில் செல்லுப்படியாகும். ஆனால் தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் வேலைக்கு ஆகாது. தென் மாநிலங்களில் அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் நமது உரிமைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மொழி உரிமை, அனைத்து சமுதாய மக்களுக்கான உரிமைகள், இடஒதுக்கீடு உரிமை, அனைத்தையும் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்று விட்டோம். அதுமட்டுமல்லாம்ல், அனைவரும் ஒருங்கிணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். மதத்தின் பெயரால், யாரும் பிரிந்து செல்வதில்லை. அதன் காரணமாக பா.ஜ.க.வின் மத ரீதியான அணுகுமுறை தமிழ்நாட்டில் எடுபடவில்லை.
பா.ஜ.க.வில் ஒரு முஸ்லிம் கூட எம்.பி., எம்.எல்.ஏ., கிடையாது. முஸ்லிம் அமைச்சர் இல்லாத ஒன்றிய அமைச்சரவை தற்போது இருந்து வருகிறது. 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் பிரதிநிதியாக ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை என்பது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணமாகும்.
எந்த காலத்திலும் முஸ்லிம்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து இல்லை. காரணம் அவர்களின் கொள்கை தவறான கொள்கையாகும். முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்கு அளித்துவிட்டார்கள் என சதவீதம் காட்டி கூறுவது தவறான தகவலாகும். தனிப்பட்ட முறையில் பாஜக தலைவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த விரோதம் கிடையாது. ஆனால், அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்து வருகிறது.
ஆனால் அவர்களின் எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறாது. உலகத்தில் இந்தியாவை போன்ற ஒரு அற்புதமான நாட்டை எங்கும், யாரும் பார்க்க முடியாது. இந்தியாவில் 4 ஆயிரத்து 698 சமூகங்கள் வாழ்ந்து வருவதாக ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பல்வேறு மொழி, பல்வேறு மதம், பல்வேறு கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுடன் இந்த சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. பல்வேறு சாதி, பழங்குடியின மக்கள் நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இத்தனை சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் நாம் அனைவரும் இந்தியர்கள் தான். ஆனால், பாஜக என்ன சொல்கிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என்ற ரீதியில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு சமூகங்கள் வாழும் இந்தியாவில் ஒரே கலாச்சாரத்துடன் வாழ முடியுமா.
தவறான சிந்தனையுடன் பாஜக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. பொதுசிவில் சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள். உத்தரகாண்ட்டில் செயல்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பழங்குடியின மக்களுக்கு விதிவிலக்கு என அறிவித்து இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணித்து இருக்கிறார்கள்.
திமுக தலைமையில் வலிமையான கூட்டணி:
கேள்வி: தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவித்து இருக்கிறார்கள். தேர்தல் நிலைப்பாட்டைக் கொண்டு கூட்டணி அமைக்கிறீர்களா அல்லது எப்போதும் திமுகவுடனே கூட்டணி இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறீர்களா?
பதில்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை கொள்கை ரீதியான கூட்டணியை நாங்கள் அமைத்து இருக்கிறோம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் விஷயங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் திமுக முன்வந்து நின்று அனைத்தையும் செய்கிறது. எங்களுக்காக குரல் கொடுக்கிறது. எங்களுக்காக போராடுகிறது. அந்த அடிப்படையில் கொள்கை ரீதியாக நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களும் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.
கேள்வி: புதிய அரசு அமைந்தால் தாங்களும் ஆட்சியில் இடம்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் சிலர் கூறி வருகிறார்கள். இதேபோன்று பல கட்சிகள் கூட தங்களுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்றாக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விரும்புகிறார்கள். அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீகின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?
பதில்: கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுகவை பொறுத்தவரை மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற் கொள்கையாகும். இந்த கொள்கையை ஒப்புக் கொண்டு தான் நாங்கள் கூட்டணியில் சேர்ந்து இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் எந்த கூட்டணி ஆட்சியும் நடைபெறவில்லை.
சதித் திட்டம் நிறைவேறாது:
கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட கூட்டணி ஆட்சி குறித்து பேசி வருகிறார். அந்த மாதிரியான நிலை உருவாக வாய்ப்பு உண்டா?
பதில்: அவர் (விஜய்) பரந்த மனப்பான்மையுடன் பேசவில்லை. திமுக கூட்டணியை உடைக்க என்ன சதித்திட்டம் தீட்ட முடியுமோ அதை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதால், அதை உடைக்க இதுபோன்ற ஆசை வார்த்தைகளை கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
கேள்வி: விஜய் கடுமையாக பாஜகவை எதிர்க்கிறார். விமர்சனம் செய்கிறார். சமீபத்தில் கூட பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறி இருக்கிறார். இஸ்லாமியர்கள் அந்த கட்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அந்த கட்சி குறித்து எதிர்காலத்தில் உங்களுடைய பார்வை என்னவாக இருக்கும்., கூட்டணி குறித்து பேச வாய்ப்பு உண்டா?
பதில்: நடிகர் விஜய் இப்போது தான் அரசியல் களத்தில் இறங்கி பேச ஆரம்பித்து இருக்கிறார். அவர்கள் இதுவரை எந்த தேர்தலும் சந்திக்கவில்லை. எங்களை பொறுத்தவரை திமுக அணிக்கு தான் இஸ்லாமியர்களின் வாக்குகள் 99 சதவீதம் அளவுக்கு கிடைக்கும். அதற்கு முக்கிய காரணம் திமுகவின் கொள்கையாகும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிஏஏ விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போது முதலமைச்சராக இருக்கும்போதும் சரி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கொள்கையுடன் இருந்து வருகிறார். வக்பு திருத்தச் சட்டம் பிரச்சினையில் கூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஆளுநர் விவகாரத்தில் கூட உச்சநீதிமன்றத்திற்கு சென்று இந்தியாவிற்கு வழிகாட்டும் நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறார். அத்துடன் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் அவரது ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
மக்கள் நலப் பிரச்சினையில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றி இருக்கிறது. மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சினையில் கூட நாம் தொடர்ந்து மக்களின் நலன் குறித்து அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். அதை அங்கீகரிக்கும் வகையில் தான் முதலமைச்சர் அவர்களே, நமது தலைவரை பாராட்டி இருக்கிறார். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற உலக தமிழ் இஸ்லாமியத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் அவர்கள், எங்கள் இயக்கத் தலைவர் பேராசிரியர் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி பேசினார். அப்போது, மக்கள் நலக் கோரிக்கைகள் குறித்து அரசிடம் சிறப்பான முறையில் எடுத்துச் செல்வதுடன், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நடந்துகொள்ளும் பண்பு கொண்டவர் அய்யா பேராசிரியர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியதே நாங்கள் எந்தளவுக்கு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தி செயல்படுகிறோம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
மீண்டும் திமுக ஆட்சி:
கேள்வி: 2026, 2031 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் தேர்தல்களில் கூட திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என திமுக உறுதியாக சொல்கிறது. 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
பதில்: தமிழகத்தில் தற்போது திமுகவிற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை இருந்து வருகிறது. அதன் காரணமாக தான் திமுக கூட்டணியில் ஒரு கட்சியாவது வெளியே வந்துவிடுமா என சிலர் பகல் கனவு கண்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கதவை திறந்துவைத்து எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக பாஜக, அதிமுக கூட்டணியின் உள்ளே நுழைந்து அந்த கதவையும் மூடிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பா.ஜ.க. அதிமுகவின் கூட்டணி கனவின் கதவை முடிவிட்டது. நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை பாஜக அதிமுகவிற்கு மறைமுகமாக விதித்துவிட்டது.
திமுக கூட்டணி கொள்கை ரீதியாக இருப்பதால், அடுத்தடுத்த தேர்தல்களில் நிச்சயம் வெற்றிவாகை சூடும். தொடர் வெற்றியை பெறும். கொள்கை இல்லாத கட்சிகளுக்கும், கூட்டணிகளுக்கும், நல்ல புரிந்துணர்வு இல்லாத கூட்டணிகளுக்கும் தமிழக மக்கள் ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். திமுக கூட்டணியில் மற்ற கட்சித் தலைவர்களுடன் நல்ல புரிந்துணர்வுடன் செயல்படுகிறோம். இந்த மாதிரியான ஒரு நல்ல சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இல்லை. அதிமுகவை இயக்குவதற்கு தற்போது பாஜக வந்துவிட்டது. ஜெயலலிதா அம்மையார் காலத்தில் இருந்த அதிமுக இப்போது இல்லை. புதிதாக வந்துள்ள கட்சிகள் குறித்து நாம் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மதசார்பற்ற திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் மீண்டும் மதசார்பற்ற கூட்டணி நிச்சயம் வெல்லும். தமிழக மக்களுக்கு மீண்டும் நல்லாட்சியை தரும்.
- நன்றி: வசந்த் தொலைக்காட்சி
- தொகுப்பு: சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment