"பேரீச்சம்பழங்களும் அரபு நாடுகளும்"
பேரீச்சம்பழத்தின் சுவையில் மயங்காதவர்கள் உலகில் யாருமே இருக்க முடியாது. ஏக இறைவன் வழங்கிய அற்புதமான உணவு வகைகளில் பேரீச்சம்பழம் முக்கிய இடம்பெறுகிறது. குறிப்பாக அரபு நாடுகளில், ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும், கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பேரீச்சம்பழம் இருந்து வருகிறது. அரபு நாடுகளில் பேரீச்சம்பழம் பயிரிடப்படுவது, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கை என பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பேரீச்சம்பழம், அரபு நாடுகளில் ஒரு பொதுவான உணவாகவும், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகள் பேரீச்சம்பழத்தை அதிகம் பயிரிடுகின்றன. இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான நோன்பு காலத்தில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் அதிகளவில் பேரீச்சம்பழத்தை நோன்பு திறக்கும்போது எடுத்துக் கொள்கிறார்கள். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் சூரியன் மறையும் போது நோன்பு திறக்கும் முதல் உணவாக பேரீச்சம்பழங்கள் பெரும்பாலும் உண்ணப்படுகின்றன. பேரீச்சம்பழம், அரபு கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இது விருந்தோம்பல், கொண்டாட்டங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.
அரபு உலகில் செழிப்பின் அடையாளம்:
சிறிய வெப்பமண்டல பழங்களான பேரீச்சம்பழங்கள், அரபு உலகில் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மேலும் பல கலாச்சாரங்களில் விருந்தோம்பலின் அறிகுறிகளாகும். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில், விருந்தினர்களுக்கு அவர்கள் வந்தவுடன் காபியுடன் ஒரு பேரீச்சம்பழம் வழங்கப்படும். பாரம்பரியமாக திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளிலும் அவை பரிமாறப்படுகின்றன.
தற்போது ஹஜ் காலம் தொடங்கியுள்ளதால் உலகில் அனைத்து நாடுகளில் இருந்தும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியாவிற்கு முஸ்லிம்கள் புறப்பட்டு செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். புனித மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்லும் அவர்கள், அந்நாட்டின் கலாச்சாரங்களில் ஒன்றாக இருக்கும் பேரீச்சம்பழங்கள் விரும்பி சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஹஜ் பயணம் நிறைவு செய்தபிறகு, தங்களது சொந்தங்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக தரமான சுவையான பேரீச்சம்பழங்களை அள்ளிக் கொண்டு வருகிறார்கள். இப்படி ஹாஜிகள் கொண்டு வந்து அன்புடன் கொடுக்கும் பேரீச்சம்பழங்களை மகிழ்ச்சியுடன் விரும்பி சாப்பிடுவதை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாய மக்களும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
பேரீச்சம்பழம் ஏன் முக்கியமானது?
பேரீச்சம்பழம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம்பழத்தில் வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழம், எளிதில் ஜீரணமாகும் மற்றும் அதிக அளவு ஆற்றலை அளிக்கிறது.
பேரீச்சம்பழம், உலகின் பழமையான பழ மரங்களில் ஒன்றாகும். பேரீச்சம்பழம், பாலைவனத்தின் ரொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. பேரீச்சம்பழம், பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது, மென்மையானது, கடினமானது, இனிமையானது, உலர் பேரீச்சம்பழம் என பல வகைகளில் கிடைக்கிறது. பேரீச்சம்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். உதாரணமாக, பால், தேன், நெய், சர்க்கரை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பேரீச்சம்பழ உற்பத்தியில் முஸ்லிம் நாடுகள்:
கடந்த 2023 ஆம் ஆண்டில், உலகளவில் 9 புள்ளி 82 மில்லியன் டன் பேரீச்சம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழ உற்பத்தியாளராக எகிப்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு 17 லட்சத்து 33 ஆயிரத்து 432 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் சாதகமான காலநிலை மற்றும் நைல் நதிக்கரையோர வளமான மண், பேரீச்சம்பழ சாகுபடிக்கு ஏற்ற இடமாக அமைகிறது. எகிப்திய பேரீச்சம்பழங்கள் அவற்றின் வளமான சுவை மற்றும் உயர் தரத்திற்கு பெயர் பெற்றவை. இது நாடு உலக சந்தையில் அதன் முதலிடத்தைத் தக்கவைக்க உதவியது. அரசாங்கம் நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்துள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறன்களை மேலும் அதிகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுகளின்படி, எகிப்து உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழ உற்பத்தியாளராக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 புள்ளி 87 மில்லியன் டன் வெப்பமண்டலப் பழங்களை அதாவது பேரீச்சம்பழங்களை பயிரிட்டுள்ளது. தற்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியா பேரீச்சம்பழ உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 16 லட்சத்து 10 ஆயிரத்து 731 டன் பேரீச்சம்பழங்கள் விளைகிறது. மேம்பட்ட நீர்ப்பாசன முறைகளுடன் இணைந்து, பேரீச்சம்பழங்களுக்கு உகந்த நிலைமைகளை வழங்குகிறது. பேரீச்சம்பழங்கள் சவுதி அரேபியாவில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இது பெரும்பாலும் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் நாட்டின் உயர் பேரீச்சம்பழ உற்பத்திக்கு கணிசமாக பங்களித்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் உற்பத்தி 1 புள்ளி 9 டன் பேரீச்சம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அந்நாட்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.தற்போது அதன் உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னணியில் அல்ஜீரியா, ஈரான் நாடுகள்:
அதைத் தொடர்ந்து அல்ஜீரியா 1 புள்ளி 32 மில்லியன் டன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அல்ஜீரியா ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்து 47 ஆயிரத்து 404 டன் பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இது உலகளவில் சிறந்த உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். நாட்டின் கடற்கரை முதல் பாலைவனப் பகுதிகள் வரை பல்வேறு வகையான பருவநிலைகள், பல்வேறு வகையான பேரீச்சம்பழ சாகுபடிகளை ஆதரிக்கின்றன. அல்ஜீரிய பேரீச்சம்பழங்கள், குறிப்பாக டெக்லெட் நூர் வகை, அவற்றின் ஒளிஊடுருவக்கூடிய தோற்றம் மற்றும் இனிப்பு சுவைக்கு பெயர் பெற்றவை. பேரீச்சம்பழ சாகுபடி நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளால் அல்ஜீரியாவில் விவசாயத் துறை பயனடைகிறது.
ஈரான் மற்றொரு முன்னணி பேரீச்சம்பழ உற்பத்தியாளராக உள்ளது. இது ஆண்டுக்கு 10 லட்சத்து 30 ஆயிரத்து 460 டன் உற்பத்தி செய்கிறது. நாட்டின் தெற்குப் பகுதிகள், அவற்றின் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையுடன், பேரீச்சம்பழங்களை வளர்ப்பதற்கு ஏற்றவை. ஈரானிய பேரீச்சம்பழங்கள் அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக சர்வதேச சந்தைகளில் மிகவும் மதிக்கப்படுகின்றன. பேரீச்சம்பழ விவசாயிகளை ஆதரிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதில் மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவை அடங்கும், அவை உற்பத்தியை அதிகரிக்கவும் உலகளாவிய பேரீச்சம்பழ சந்தையில் ஈரானின் போட்டித்தன்மையை பராமரிக்கவும் உதவியுள்ளன.
பேரீச்சம்பழம் உற்பத்தி செய்யும் முதல் எட்டு உற்பத்தி செய்யும் நாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமைந்துள்ளன. துனிசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. ஈரான், ஈராக், சூடான், ஓமன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் பேரீச்சம்பழம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பேரீச்சம்பழம் அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் குடும்பங்களிலும் சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய அற்புதமான பேரீச்சம்பழங்களை நாள்தோறும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ அனைவரும் முயல வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment