"பஞ்சத்தின் அபாயத்தை எதிர்கொள்ளும் காசா மக்கள்"
உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை....!
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் அல்லது 93 சதவீத மக்கள், அதிக அளவு கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் வாழ்கிறார்கள் என்று ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (ஐபிசி பகுப்பாய்வு) கண்டறிந்துள்ளது. இதில் 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் மிகவும் கடுமையான அல்லது "பேரழிவு" நிலைகளை அனுபவிக்கின்றனர் என்றும் உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவின் முழு மக்களும் பஞ்சத்தின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களில் 5 லட்சம் பேர் பட்டினியை எதிர்கொள்கின்றனர் என்று உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு (12.05.2025) திங்களன்று கூறியுள்ளது. இது, கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட கடைசி அறிக்கைக்குப் பிறகு ஒரு பெரிய வேதனையான தகவல் என்று உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாட்டின் (ஐபிசி) சமீபத்திய மதிப்பீடு இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் மே 10 வரையிலான காலகட்டத்தை பகுப்பாய்வு செய்து, செப்டம்பர் இறுதி வரை நிலைமையைக் கணித்துள்ளது. அதன் முக்கிய ஆய்வுகளின் சுருக்கம் இதுவாகும்.
இஸ்ரேலின் மனிதநேயமற்ற செயல்:
போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் போராளிக் குழுவிற்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்துள்ளது. அதன்படி, ஹமாஸுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து எடுத்து, காசாவை சீல் வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நேரத்தில் உதவி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் காசா மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட உதவி வழங்கின.
தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் போராளிக் குழுவிற்கு எதிரான அதன் பேரழிவுக்கான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் மூடியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் முற்றுகையிடப்பட்ட மற்றும் சீல் வைக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள், அதாவது 93 சதவீத மக்கள், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையின் உச்சத்தில் வாழ்ந்து வருவதாக ஐபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதில் 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் மிகவும் கடுமையான அல்லது "பேரழிவு" நிலைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த அக்டோபரில் ஐபிசியின் பகுப்பாய்வு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் "பேரழிவு" பிரிவில் இருப்பதாகக் கூறி இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது.
செப்டம்பர் இறுதிக்குள் பேரழிவு:
காசாவில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் அல்லது 22 சதவீதம் மக்கள், செப்டம்பர் இறுதிக்குள் பேரழிவு வகைக்குள் வருவார்கள் என்றும், மேலும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் "அவசரகால" நிலைகளில் இருப்பார்கள் என்றும் ஐபிசி பகுப்பாய்வு கணித்துள்ளது. "மனித உயிர்களைக் காப்பாற்றவும், மேலும் பட்டினி இறப்புகள் மற்றும் மக்கள் பஞ்சத்தில் மூழ்வதைத் தவிர்க்கவும் அவசர நடவடிக்கை தேவை" என்றும் ஐபிசி பகுப்பாய்வு வலியுறுத்தியுள்ளது.
காசா ஒரு பசி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்பவில்லை என்றும், காசாவின் மக்களைத் தக்கவைக்க போதுமான உதவி வந்துள்ளதாகவும், ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பொருட்களை நிறுத்த விரும்புவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மே 5 அன்று இஸ்ரேலிய அதிகாரிகளால் உதவி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் "மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் போதுமானதாக இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று ஐபிசி தனது சமீபத்திய பகுப்பாய்வோடு சுருக்கமாகக் கூறியுள்ளது. .
"முன்மொழியப்பட்ட விநியோக வழிமுறைகள் மக்கள்தொகையின் பெரும் பகுதியினருக்கு குறிப்பிடத்தக்க அணுகல் தடைகளை உருவாக்க வாய்ப்புள்ளது" என்றும் ஐபிசி தெரிவித்துள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் ஐபிசி பகுப்பாய்வுகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு உலக நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் உணவு தட்டுப்பாடு மற்றும் பசி கொடுமை ஆகியவை குறித்து துல்லியமான தகவல்களை திரட்டி, உலகின் பார்வைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள காசாவில் நிலவும் நிலமை குறித்து ஆய்வு செய்து துல்லியமான தகவல்களை திரட்டி உலகின் பார்வையில் கொண்டு வந்துள்ளது.
காசாவில் மக்கள் பசி கொடுமையால் ஒவ்வொரு நாளும் துன்பமும் வேதனையும் அனுபவித்து வரும் நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல், அந்த மக்கள் மீது மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் ராணுவ தாக்குதல்களை சந்திக்கும் காசா மக்கள் மற்றொரு பக்கம், பசி கொடுமையால் நாள்தோறும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், காசா மக்கள் பஞ்சத்தின் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய பசி கண்காணிப்பு அமைப்பு இப்படி எச்சரிக்கை விடுக்கும்போது அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், காசா மக்கள் மீது தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்திவருவது கொடுமையிலும் கொடுமையாகும்.
ஈமானில் உறுதியாக இருக்கும் காசா மக்களின் துன்பங்கள், துயரங்கள் விரைவில் நீங்க வேண்டும். பஞ்சத்தின் அபாயத்தை எதிர்கொள்ளும் காசா மக்கள், அதில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதற்காக உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும். இஸ்ரேலின் மனிதநேயமற்ற செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். முழு காசாவையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். கடைசியாக, காசா மக்களின் தொடர் துன்பங்கள், துயரங்கள் நீங்க நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஏக இறைவனிடம் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment