Sunday, May 18, 2025

உலகம் முழுவதும் நடந்த இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்...!

‘நக்பா' தினத்தையொட்டி   உலகம் முழுவதும் நடந்த பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்...!

தங்களது சொந்த பூமியில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதன் 77 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள், வெகுஜனக்  கண்டன போராட்டங்களை ஞாயிற்றுக்கிழமையன்று (18.05.2025)நடத்தினர்.

இஸ்ரேலின் காசா மீதான கொடூரமான போரின் மத்தியிலும், 1948 ஆம் ஆண்டு யூத போராளிகளால் பாலஸ்தீனியர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உலகம் முழுவதும் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் பேரணி நடத்தினர். இது நக்பா அல்லது பேரழிவாக நினைவுகூரப்படுகிறது.

1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர், நக்பாவின் விளைவாக பாலஸ்தீனியர்கள் நிரந்தரமாக பெருமளவில் இடம்பெயர்ந்தனர். காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இன்று வரலாறு மீண்டும் நிகழ்கிறது. காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காசா முழுவதும் மக்கள் பசியால் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை அனுப்பாமல், இஸ்ரேல் காசாவை சீல் வைத்து தடுத்துள்ளது. 

நக்பா தினம்:

இத்தகைய சூழ்நிலையில், தங்களது சொந்த பூமியில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதன் 77 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் கண்டன பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) அன்று நடைபெற்றன. ஸ்டாக்ஹோமில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கானோர் ஓடன்பிளான் சதுக்கத்தில் கூடி, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் திரண்டனர். கண்டன பேரணியில் பங்கேற்ற அனைவரும் பாலஸ்தீனக் கொடிகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு அசைத்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைக் காட்டி யஅவர்கள்,  "பாலஸ்தீனத்தில் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலையை நிறுத்து" என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர்களைப் பட்டியலிடும் பதாகைகளை ஏந்தி, நடந்து வரும் படுகொலையை முன்னிலைப்படுத்த முயன்றனர்.

லண்டனில் திரண்ட லட்சக்கணக்கானோர்:

இங்கிலாந்து தலைநர் லண்டனில், லட்சக்கணக்கானோர் டவுனிங் தெருவை நோக்கி பேரணியாகச் சென்று, நக்பாவிலிருந்து 77 ஆண்டுகள் கழித்து, காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினார்கள்.. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  சிலர், கெஃபியே அணிந்து, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, "காசாவில் இனப்படுகொலையை நிறுத்து", "பாலஸ்தீனத்தை விடுவி", மற்றும் "இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

மேலும், காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர். இஸ்ரேலின் அடாவடி நடவடிக்கையால் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வேண்டுமென்றே பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள்  குற்றம் சாட்டினர். மேலும், மனிதாபிமான நெருக்கடியில் இஸ்ரேலுக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, இங்கிலாந்து அரசாங்கத்தை இஸ்ரேல் அரசியல் மற்றும் இராணுவ ஆதரவிற்காக மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஜெர்மனியில் குவிந்த மக்கள்:

ஜெர்மனியின் பெர்லினில், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போட்ஸ்டேமர் பிளாட்ஸில் கூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, "உங்கள் மௌனம் உடந்தையாக உள்ளது" மற்றும் "நீங்கள் அனைவரையும் கொல்ல முடியாது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். நக்பா கருப்பொருள் காட்சிகளை ஏந்திய பாரம்பரிய உடையில் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடந்தது, குறைந்தது மூன்று பேர் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கிரேக்கத்தின் ஏதென்ஸில் ஒரு ஒற்றுமை ஊர்வலம் நடைபெற்றது. அங்கு எதிர்ப்பாளர்கள் கெஃபியேக்களால் அலங்கரிக்கப்பட்டு பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு முதலில் அணிவகுத்துச் சென்றனர். 

இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால், கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. மேலும் ஒரு புதிய தரைவழித் தாக்குதலை  இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து காசா மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. 

77 ஆண்டுகள் நிறைவு:

உலகளவில், மே 15 அன்று 1948 இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதன் 77வது ஆண்டு நிறைவுபெற்றதை மக்கள் மன வேதனையுடன்  அனுசரித்தனர். .

காசா சுகாதார அமைச்சகத்தின்படி, அக்டோபர் 7, 2023 அன்று தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் 53 ஆயிரத்து 272 பாலஸ்தீனியர்களைக் கொன்றது. அத்துடன் 1 லட்சத்து 20 ஆயிரத்து 673 பேரை தாக்குதல்கள் மூலம் காயப்படுத்தியுள்ளது. அரசாங்க ஊடக அலுவலகம் இறப்பு எண்ணிக்கையை 61 ஆயிரத்து 700க்கும் அதிகமாகப் புதுப்பித்துள்ளது, இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக கருதப்படுகிறது..

காசா மக்களின் துயரங்கள் நீங்க, பாலஸ்தீன மக்கள் அமைதியாக வாழ நாம் ஒவ்வொரு நாளும் ஏக இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எப்போதும் இருக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: