Tuesday, May 20, 2025

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவிற்கு உதவவில்லை....!

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்   நெருக்கடியான நேரங்களில் இந்தியாவிற்கு உதவவில்லை....!

 காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்...!!

புதுடெல்லி, மே21- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானின் ஆதரவை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியாவுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, செவ்வாய்க்கிழமை (மே 20, 2025) தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையின் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கியுள்ளார். சமீபத்திய பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை எதிர்கொண்டதில் அதன் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் குறித்து அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். 

வெளிநாட்டுப் பயணங்களால் பலன் இல்லை:

சமூக ஊடக தளமான எக்ஸின் ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் 72 நாடுகளுக்கு 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதிலும், அமெரிக்காவிற்கு 10 பயணங்கள் உட்பட பல பயணங்கள் செய்தபோதிலும்,, பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானின் ஆதரவை அம்பலப்படுத்தும் முயற்சிகளில், இந்தியாவுக்கு எந்த சர்வதேச ஆதரவும் கிடைக்கவில்லை என்று கார்கே சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். 

“கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி 151 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 72 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றில், அவர் 10 முறை அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இருப்பினும், மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் கீழ் நமது நாடு தனித்து நிற்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று புகைப்படங்களுக்கு மட்டும் போஸ் கொடுப்பதுதான் பிரதமரின் வேலையா?” என்றும்  கார்கே தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியாவின் ராஜதந்திரம் குறித்து கேள்வி:

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) பாகிஸ்தானுக்கு சமீபத்தில் வழங்கிய 1 புள்ளி 4 பில்லியன் டாலர் நிதியை மேற்கோள் காட்டி, மோடி அரசாங்கத்தின் ராஜதந்திர நம்பகத்தன்மையை, கார்கே வினா எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் உலகளாவிய நிதி நிறுவனங்களிலிருந்து பயனடைந்தாலும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

“நமது துணிச்சலான ஆயுதப்படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டபோது திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை 'நான் மத்தியஸ்தம் செய்தேன்' என்று கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் நம் நாட்டை அவமதித்துள்ளார். மேலும் இதை குறைந்தது 7 முறையாவது திரும்பத் திரும்பச் சொன்னார். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையில் முழு நாடும் ஒன்றுபட்டது, ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பிரச்சினையை மறைக்க முயற்சிக்கிறார்” என்றும் மல்லிகார்ஜுன கார்கே தமது சமூக வலைத்தளப் பதிவில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: