Monday, May 5, 2025

95 சதவீத மக்கள் எதிர்ப்பு....!

ஒன்றிய அரசின் வக்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் 95 சதவீத மக்கள் எதிர்ப்பு....!

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் திமுக விளக்கம்....!!

புதுடெல்லி, மே.05-ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (05.05.2025) நடக்கும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான திமுக தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளாமல், மத ரீதியான முறையில் முடிவு எடுத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. 

95 சதவீத மக்கள் எதிர்ப்பு:

வக்பு திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்டபோது, அதற்கு 95 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் திமுக குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜரான பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வக்பு சட்டம் திருத்தம் செய்ய தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததாக கூறியுள்ள திமுக, வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே வக்பு திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.  ஆதரவு தெரிவித்த 5 சதவீத பேர் கூட, மத ரீதியான சிந்தனையில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தாகவும் திமுக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மத ரீதியாக செயல்பட அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள திமுக வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், லோகேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட வழக்கறிஞர்கள், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

இ.யூ.முஸ்லிம் லீக் பதில் மனு:

இதேபோன்று, இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இ.யூ.முஸ்லிம் லீக் தரப்பிலும் ஒன்றிய அரசின் வாதத்திற்கு பதில் தரப்பட்டுள்ளது. இ.யூ.முஸ்லிம் லீக் தரப்பில் வழக்கறிஞர்கள் ஹரீன் பீரான் உஸ்மான் கனி கான், பி.முகமது ஹபீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், திமுகவின் வாதத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தினால், நாடு முழுவதும் உள்ள மஸ்ஜித்துகளின் சொத்துகளாக இருக்கும் கபரஸ்தான், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அந்த மனுவில் இ.யூ.முஸ்லிம் லீக் அச்சம் தெரிவித்துள்ளது. 

இந்திய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் வக்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே கடந்த 1923, 1954 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் வக்பு சட்டங்கள் திருத்தப்பட்டு, வக்பு சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் வழக்கறிஞர்கள், இதுதொடர்பாக உரிய ஆவணங்கள் கட்டாயம் தேவை என்ற ஒரு பிரிவு ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், தற்போது வக்பு சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்கள் காண்பிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வாதம், வக்பு சொத்துக்களை பறிக்கும் ஒரு நோக்கமாகவே கருத வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மீண்டும் விசாரணை:

வக்பு திருத்தச் சட்டம் வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மனுதாரர்களும் தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (05.05.2025) திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அப்போது ஒன்றிய அரசின் பதில் மனு மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைத்து மனுத்தாரர்களின் விளக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: