"புனித ஹஜ் பயணத்திற்காக இருவர் செய்த தியாகங்கள்"
உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களின் மிகப்பெரிய கனவாக இருப்பது, தம்முடைய வாழ்நாளில் எப்படியாவது புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்பதாகும். இதற்காக ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும், ஒவ்வொரு நாளும் புனித ஹஜ் கடமைக்கான வாய்ப்பை தங்களுக்கு தர வேண்டும் என ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த அற்புதமான ஒரு வாய்ப்புக்காக பல்வேறு தியாகங்களை செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தாண்டிற்கான (2025) புனித ஹஜ் பயணம் தொடங்கிவிட்ட நிலையில், உலகின் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புனித மக்கா நகருக்கு ஹாஜிகள் வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், மக்கா மாநகரம் ஹாஜிகளின் சங்கமமாக காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. வரும் ஜுன் மாதம் தியாகத் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹஜ் கடமையை மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், நோக்கத்தில் ஹாஜிகள், ஒவ்வொரு நாளும், ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். உலக அமைதிக்காக, உலகில் எப்போதும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஒளி பிறந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் ஹாஜிகள் மத்தியில் இருப்பதால், அவர்கள், ஏக இறைவனிடம் கையேந்தி துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள லட்சக்கணக்கான ஹாஜிகளின் மத்தியில், இரு ஹாஜிகள் குறித்த சுவையான, பொறுமை மற்றும் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் கதையை நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். புனித ஹஜ் பயணத்திற்காக இந்த இருவரும் செய்த தியாகங்களை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் அவர்கள் மத்தியில் கூட, ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த ஆவல் உருவாகும். அப்படி உருவாகும் ஆவலை நிறைவேற்ற அவர்களுக்கு ஏக இறைவன் வாய்ப்புகளை வழிகளை உருவாக்கி கொடுத்துவிடுவான்.
தூய்மைப் பணியாளரின் ஹஜ் கனவு :
இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இதயங்களைத் தொட்டுள்ளார். தனது 40 வருட இடைவிடாத சேமிப்புக்குப் பிறகு ஹஜ் செய்தல், மிதமான வருவாய் மற்றும் எண்ணற்ற கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இந்த ஊக்கமளிக்கும் பயணம் ஒரு சக்தி வாய்ந்தது.
இந்தோனேசிய தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் என்பவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதமான கனவை தனது மனதில் சுமந்துகொண்டே இருந்தார். அந்த கனவு 'தனது வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்' என்பதாக இருந்து வந்தது. இதற்காக அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு எண்ணற்ற தியாகங்களை, கஷ்டங்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும், அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. உயிரிப்புடன் வைத்திருந்த கனவை, ஏக இறைவனின் கருணையால், தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் இந்தாண்டு தனது மனைவியுடன் சேர்ந்து நிறைவேற்ற புனித மக்கா நகருக்கு புறப்பட்டுள்ளார்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற உறுதி :
தனது புனிய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹஜ் லெஜிமான், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியாக காபாவை என் கண்களால் பார்ப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. முதலில் ஏக இறைவனக்கு நன்றி கூறுகிறேன். பின்னர் எங்களுக்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக மக்கா சாலை முன்முயற்சியின் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இது நான் கற்பனை செய்ததை விட செயல்முறையை எளிதாக்கியது.
கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்து என் மனைவியின் ஆதரவுடன், நான் ஒரு நாளைக்கு ஆயிரம் இந்தோனேசிய ரூபாயை மட்டுமே சேமிக்கத் தொடங்கினேன். கடினமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் கடின உழைப்பு இருந்தபோதிலும், ஹஜ் செய்யும் எங்கள் கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருந்தோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஒன்றாக, இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு பதிவு செய்ய முடியும் வரை நாங்கள் சீராக சேமித்தோம்" என்று தனது ஹஜ் கனவு குறித்தும், அதற்காக தாமும், தம்முடைய மனைவியும் செய்த தியாகங்கள் குறித்தும் லெஜிமான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருப்பதை கேட்கும்போது உண்மையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
பொறுமை, தியாகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை மிகவும் புனிதமான மைல்கற்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த லெஜிமானின் ஊக்கமளிக்கும் பயணம் உள்ளது. உண்மையான நம்பிக்கையால் தூண்டப்படும்போது எந்தக் கனவும் வெகு தொலைவில் இல்லை என்பதைக் காட்டும் கதை, மீள்தன்மை மற்றும் பக்தியின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது
பெல்ஜிய சைக்கிள் வீரரின் ஹஜ் கனவு :
இந்தோனேஷிய தூய்மைப் பணியாளர் லெஜிமான் எப்படி, ஹஜ் செய்ய வேண்டும் என கனவு கண்டு, அதற்காக தியாகங்கள் பல செய்தாரோ, அதேபோன்று, பெல்ஜியத்தைச் சேர்ந்த சைக்கிள் வீரர் ஒருவர் இந்தாண்டு தனது ஹஜ் கனவை நிறைவேற்ற சவுதி அரேபியா சென்றுள்ளார். பெல்ஜியத்தைச் சேர்ந்த 26 வயதான சைக்கிள் வீரர், அனஸ் அல் ரஸ்கி, தம்முடைய வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாள்தோறும் கனவு கண்டுக் கொண்டே இருந்தார். அதற்காக இந்தாண்டு, பெல்ஜியத்திலிருந்து மக்காவிற்கு சைக்கிளில் புறப்பட்ட அவர், மூன்று மாதங்களுக்குள் 13 நாடுகளைக் கடந்து ஹஜ் பயணம் செய்யும் தனது கனவை நிறைவேற்ற சவுதி அரேபியாவை அடைந்துள்ளார்.
இவை அனைத்தும் ஹஜ் பயணம் செய்யும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக. ரமழானில் தனது தனி பயணத்தைத் தொடங்கி, எல்லைகளைக் கடந்து, சவால்களைத் தாண்டி, இறுதியாக ஜோர்டானுக்கு அருகிலுள்ள ஹலத் அம்மார் வழியாக ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தார். 13 நாடுகளில் 7 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மிதிவண்டி ஓட்டுதலுக்குப் பிறகு, 26 வயதான அனஸ் அல் ரஸ்கி இறுதியாக சவுதி அரேபியாவை வந்தடைந்தபோது, அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது என கூறலாம்.
அவர் பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த ஒரு கனவை, ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைத் துரத்திக் கொண்டே இருந்தார். அதற்காக பல தியாகங்களைச் செய்ய முன்வந்தார். அனஸ் அல் ரஸ்கி ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வழியாக சவாரி செய்து, 2025 ஹஜ் யாத்திரைக்கான நேரத்தில் ஹலத் அம்மார் எல்லையை அடைந்தார்.
26 வயதான பெல்ஜிய சைக்கிள் ஓட்டுநர் அனஸ் அல் ரஸ்கி, மிதிவண்டியில் குறிப்பிடத்தக்க மூன்று மாத பயணத்தை முடித்து, 2025 ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியாவை வந்தடைந்தார்.
மாறிவரும் காலநிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைத் தாங்கி, ஆஸ்திரியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா உள்ளிட்ட 13 நாடுகளில் தனியாகப் பயணம் செய்தார்.
நான் பாக்கியவானாக உணர்கிறேன் :
அவர் ஜோர்டானுக்கு அருகிலுள்ள ஹலாத் அம்மார் எல்லைக் கடவை வழியாக சவுதி அரேபிய ராஜ்ஜியத்திற்குள் நுழைந்தபோது, ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். "இது ஒரு கனவு. நான் மக்காவில் இருப்பேன் என்று நான் நம்பவில்லை. மக்கா ராஜ்ஜியத்திற்கு வந்ததில் நான் பாக்கியவானாக உணர்கிறேன்." என்று புரிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அல் ரஸ்கி, வழியில் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் பங்கை எடுத்துரைத்தார்.
"அவர்கள் என்னைத் தொடர்ந்து வழிநடத்தினர். பல ஆண்டுகளாக நான் போற்றி வந்த ஒரு கனவை நான் நெருங்கி வருவதாக உணர்ந்தேன். இப்போது, காபாவிற்கு மிக அருகில் உள்ள இடத்தை அடைந்து அதை முதல் முறையாகப் பார்க்க விரும்புகிறேன்." என்று பேசிய அல் ரஸ்கி கூறியதை அறியும்போதும் அவரது தியாகங்கள் எப்படி இருந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அல் ரஸ்கி மலைகள், சமவெளிகள் மற்றும் நகர்ப்புற மையங்களில் சைக்கிள் ஓட்டிச் சென்றதால், பயணம் ஒரு ஆன்மீகப் பணியாகவும் சகிப்புத்தன்மையின் சோதனையாகவும் இருந்தது. இவை அனைத்தும் ஒரு புனிதமான இலக்கை அடையும் நோக்கில் இருந்தது.
இருவர் செய்த தியாகங்கள் :
இந்தோனேஷிய தூய்மைப் பணியாளர் ஹஜ் லெஜிமான் மற்றும் பெல்ஜிய சைக்கிள் வீரர் அனஸ் அல் ரஸ்கி ஆகிய இருவரும் ஹஜ் பயணத்திற்காக செய்துள்ள தியாகங்கள், சந்தித்த சவால்கள் மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொறுமை மற்றும் நம்பிக்கையின் எழுச்சியூட்டும் இவர்களின் கதைகள் மூலம் ஒரு உண்மை மிகத் தெளிவாக தெரியவருகிறது. வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைத்துவிடாது. அதற்காக கனவு காண வேண்டும். அந்த கனவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். தியாகங்களை செய்ய முன்வர வேண்டும். சவால்களை சந்திக்க வேண்டும். கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும். அந்த துயரமான நேரங்களில் கனவை மட்டும் விட்டுவிடக் கூடாது. அதை சுமந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அந்த திசையை நோக்கிச் சென்றால் மட்டுமே, நம்முடைய கனவுகள் நிறைவேறும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ் லெஜிமான் மற்றும் அனஸ் அல் ரஸ்கி ஆகிய இருவரும் இருந்து வருகிறார்கள். ஏக இறைவனாகிய அல்லாஹ் அவர்கள் இருவரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment