Saturday, May 31, 2025

ஒரு ஏழை பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு....!

 ஒரு ஏழை பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு  நனவான தருணம்...!

உலகம் முழுவதும் இருந்து சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு அல்லாஹ்வின் விருந்தினர்கள் குவிந்துள்ள நிலையில், ஹஜ் கடமைக்கான தயாரிப்புகளும் தீவிரம் அடைந்துள்ளன.  இந்தாண்டு சுமார் 30 லட்சம் ஹாஜிகள் தங்களுடைய ஹ்ஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறுதிக்கட்டமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற ஹாஜிகள் தங்களுடைய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவிற்கு இன்னும் புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் ஜுன் 5ஆம் தேதி அரஃபா நாளாகவும் ஜுன் 6ஆம் தேதி  தியாகத்திருநாள் எனப்படும் பெருநாளும் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அரஃபா நாள் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் 9ம் தேதி கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பு நாளாகும். ஹஜ் யாத்திரையின் ஒரு முக்கிய அங்கமாக இது கருதப்படுகின்றது. ஹஜ் யாத்திரையின் போது, புனித அரஃபா மலையில் ஹாஜிகள் தங்கி, ஏக இறைவனைப் போற்றி, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவர்.  இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தம் இறுதி ஹஜ் யாத்திரையின் போது பிரியாவிடை சொற்பொழிவு செய்த நாளாகவும் அரஃபா நாள் கருதப்படுகிறது.  இந்த நாளில் அல்லாஹ் தனது அடியார்களின் மீது மார்க்கத்தை நிறைவு செய்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் விதமாக, அதிக அளவில் துஆ செய்து ஏக இறைவனைப் போற்றுவர்.  எனவே அரஃபா நாள் இஸ்லாமிய நாட்காட்டியின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. 

இதைத் தொடர்ந்து ஈத் அல்-அத்ஹா என்று அழைக்கப்படும் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில்  துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஜுன் 6ஆம் தேதியுடம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஜுன் 7ஆம் தேதியும் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இப்படி, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், மக்காவில் குவிந்துள்ள நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கானோர் இறுதிக்கட்டமாக மக்காவிற்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தங்களின் ஹஜ் கனவை நிறைவேற்ற வேண்டும் என உயர்ந்த இலட்சியத்துடன் அவர்களின் பயணம் தொடங்கிக் கொண்டே இருக்கிறது. 

பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவு :

இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் பலரின் கதைகளை கேட்கும்போது, உண்மையிலேயே ஏக இறைவனின் கருணை மற்றும் அவன் செய்யும் ஆச்சரியம், அதிசயம் ஆகியவற்றை அறிந்து மனம் வியப்பு அடைக்கிறது. அந்த வியப்பான கதைகளில் ஒன்று தான் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரியின் ஹஜ் கனவாகும். உகாண்டாவைச்  சேர்ந்த 58 வயதான பெண்மணி காசிஃபா நங்கும்பாவிற்கு தம்முடைய வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அந்த ஆசை மிகப்பெரிய கனவாக மாறியது. அதற்காக அவர் பல தியாகங்களைச் செய்ய முன்வந்தார். ஆம், தியாகங்கள் இல்லாமல், ஹஜ் கடமையை எப்படி நிறைவேற்ற முடியும். தியாகத்தின் முக்கிய அம்சத்துடன் தான் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

இப்படி, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  வேண்டும் என்ற கனவும் ஆசையும் கொண்ட காசிஃபா நங்கும்பா, தன்னுடைய மீன் வியாபாரத்தில் நாள் தோறும் கிடைக்கும் வருவாயில் இருந்து, நாள் ஒன்றுக்கு ஒரு டாலரை சேமிக்க ஆரம்பித்தார். வாழ்க்கையை சிக்கனமாக மாற்றி அமைத்துக் கொண்டு, செலவுகளை குறைத்துகொண்டு, ஹஜ் பயணத்திற்காக அவர் சேமிப்பை தொடங்கினார். ஒருசில நாட்களில் 4 அல்லது 5 டாலர் வரை கூட அவர் ஹஜ் பயணத்திற்காக சேமித்தார். இப்படி சேமிக்கும் பணம் நூறு டாலர் அளவுக்கு வந்துவிட்டதும், உகாண்டாவில் உள்ள ஹஜ் கமிட்டியிடம் அந்த பணத்தை  வைப்பு தொகையாக முதலீடு செய்துவிடுவார்.  

பத்து ஆண்டுகள் வரை சேமிப்பு :

தனது ஹஜ் கனவை நிறைவேற்ற காசிஃபா நங்கும்பா தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை சேமித்துக் கொண்டே இருந்தார். இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றன. காசிஃபா நங்கும்பாவின் கனவும் வளர்ந்துகொண்டும், சேமிப்பு அதிகரித்துக் கொண்டும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு அதிகாலை நேரத்தில் உகாண்டா ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து காசிஃபா நங்கும்பாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய ஹஜ் கமிட்டி மேலாளர் நங்கும்பாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். ஆம், "ஹஜ் பயணத்திற்காக நீங்கள் சேமித்து வைத்த தொகை போதுமானது. இந்தாண்டு நீங்கள் ஹஜ் பயணம் செய்யலாம்" என்று மேலாளர் கூறியதை கேட்டதும், காசிஃபா நங்கும்பாவிற்கு ஏற்பட்ட இன்ப ஆனந்தத்திற்கு அளவே இல்லை என கூறலாம். அவர் கண்களில் மகிழ்ச்சியின் கண்ணீர் அருவியாக கொட்டியது. ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திய அவர், தனது கனவு நிறைவேற போகும் தருணத்தை 10 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்ததற்கு, தற்போது வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காசிஃபா நங்கும்பா "ஹஜ் கமிட்டி மேலாளர்  என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தாண்டு ஹஜ் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. நீங்கள் சேமித்தத் தொகை போதுமானது. எனவே, நீங்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று சொன்னபோது, உண்மையிலேயே எனக்கு இன்ப  அதிர்ச்சி ஏற்பட்டது. இறுதியாக என்னுடைய பிரார்த்தனையும் ஏக இறைவன் ஏற்றுக் கொண்டான் என்பதை உணர்ந்தபோது, உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது" இப்படி கூறி அவர் பெரும் ஆனந்தம் அடைந்தார். இறுதியாக உகாண்டாவில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செய்ய மக்காவிற்கு புறப்பட்டு சென்றார். 

யாருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்?

ஏழை நாடான உகாண்டாவில் வசிக்கும் ஒரு ஏழை முஸ்லிம் பெண் மீன் வியாபாரியான காசிஃபா நங்கும்பா தனது ஹஜ் கனவை நிறைவேற்ற பல தியாகங்களை செய்து இருக்கிறார். இறுதியில் அவருக்கு ஹஜ் செய்ய அல்லாஹ் தனது வீட்டிற்கு அழைத்துவிட்டான். அவரும் மகிழ்ச்சியுடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்று, லட்சக்கணக்கான மக்களில் ஒருவராக தனது கடமையை நிறைவேற்ற உள்ளார். காசிஃபா நங்கும்பாவின் இந்த உண்மை கதையில் இருந்து ஒரு உண்மை மிகமிகத் தெளிவாக தெரியவருகிறது. யாருக்கு எந்த நேரத்தில் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. பொறுமை மற்றும் கடமையை சரியான முறையில் செய்துகொண்டே இருந்தால், ஏக இறைவனின் கருணை மூலம் வாழ்க்கையில் புனித ஹஜ் கடமையை அனைவரும் நிறைவேற்றலாம். அதுவும், அல்லாஹ்வின் அழைப்பு இருந்துவிட்டால், பிறகு யாரால் தான் தடுக்க முடியும்?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: