"ஆடு மேய்க்கும் காஷ்மீரி குடும்பத்தின் இளம் பெண் ஷப்னம் சாதிக்கின் ஐ.ஏ.எஸ் கனவு"
உலகின் ஒரு அழகான, அற்புதமான பூமியாக நமது இந்திய நாட்டின் ஜம்மு-காஷ்மீர் இருந்து வருகிறது. காஷ்மீரின் அழகில் மயங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அத்தகைய அழகான பூமியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்? என்ற பல கேள்விகள் நம்முன் எழுந்துகொண்டே இருக்கின்றன. வெளி உலகத்தில் நாம் வளமான ஒருசில காஷ்மீர் மக்களை மட்டுமே பார்த்துவிட்டு, காஷ்மீரிகள் அனைவரும் வசதியானவர்கள் என்ற கற்பனையில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் உண்மையான காஷ்மீரிகள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் ஆசைகள், இலட்சியங்கள் என்ன? ஏழ்மையில் கூட, வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காஷ்மீரிகளுக்கு இருப்பதை அறிவும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இப்படி வாழ்க்கையில் சாதிக்க புறப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கதை தான்இந்த கட்டுரையாகும். ஆம், "ஆடு மேய்க்கும் காஷ்மீரி குடும்பத்தின் இளம் பெண் ஷப்னம் சாதிக், தாம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும்" என்று நாள்தோறும் கனவு கண்டு வருகிறார். அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார். வாருங்கள், ஷப்னம் சாதிக் எப்படி வாழ்ந்து வருகிறார்? அவரின் குடும்பம் எப்படி உள்ளது? தாம் காணும் கனவிற்காக ஷப்னம் சாதிக் எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்? என்பன போன்ற பல கேள்விக்கான பதில்களை அறிந்துகொள்வோம்.
மலை கிராமத்தில் கூடாரத்தில் வாழ்க்கை :
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியான பன்னர் கிராமத்தில் இருக்கும் ஒரு கூடாரத்தில் தான் ஷப்னம் சாதிக் வாழ்ந்து வருகிறார். அவரது குடும்பத்தினர் ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை முஹம்மது சாதிக், ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். மிகப்பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் மலைப்பகுதியில் ஒரு கூடாரத்தில் வசிக்கும் ஷப்னம் ஐ.ஏ.எஸ். கனவு காண்கிறார். இதற்கு குடும்பத்தினர் ஆதரவாக நிற்கிறார்கள்.
அண்மையில் நடந்துமுடிந்த 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இளம் பெண் ஷப்னம் சாதிக், தன்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டார். ஆம், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாற வேண்டும் என்பது தான் அந்த தீர்க்கமான முடிவாகும். 12ஆம் வகுப்பில் 92 புள்ளி 60 சதவீதம் (சுமார் 93 சதவீதம்) மதிப்பெண்களைப் பெற்று ஷப்னம் பள்ளியில் முதல் மாணவியாக வந்து சாதித்துள்ளார். தன்னுடைய இலட்சியம் குறித்து இனி ஷப்னம் சாதிக் கூறுவதைக் கேட்போம்.
ஐ.ஏ.எஸ். கனவுக்காக உழைப்பு :
"12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைத்தேன். என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்ததால், இந்தளவுக்கு நல்ல மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது. மலைப்பகுதி கிராமத்தில் நாங்கள் ஒரு சிறிய கூடாரத்தில் வசித்து வருகிறோம். மின்சார வசதி இல்லை. பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. சாலை இணைப்பு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், நான் அனைத்தையும் எதிர்கொண்டேன். கவலைப்படாமல், படிப்பில் கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்தேன். அதற்காக ஏக இறைவன் எனக்கு நல்ல பலன் கொடுத்து இருக்கிறான்" என்று கூறி தன்னுடைய உழைப்பு குறித்து ஷப்னம் மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும் தொடர்ந்து பேசும் அவர், "என்னுடைய மேல்படிப்புக்காக ஒரு முடிவு செய்து இருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்தபிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வில் கலந்துகொள்வேன். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என இருக்கிறேன். என்னுடைய மாமா ஒரு ஆசிரியர். அவர் எனக்கு பல்வேறு நல்ல ஆலோசனைகளை கூறி வழிநடத்தினார். நான் ஐ.ஏ.எஸ். கனவு காண்பதற்கு, பலர் எனக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக, காஷ்மீரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்து காஷ்மீர் பெண்கள், ஆகியோர் எனக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் அனைவரும் எனக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள்" இப்படி கூறும் ஷப்னம், கனவுகள் நிறைவேற ஏழ்மை ஒரு தடையாக இருக்காது என்றும் உறுதிப்பட தெரிவிக்கிறார்.
"எந்தவொரு இலட்சியத்தையும், இலக்கையும் அடைய கனவு காண்பதில் தவறு இல்லை. இந்த கனவுகளுக்கு ஏழ்மை உள்ளிட்ட அம்சங்கள் ஒருபோதும் தடையாக இருக்காது. அந்த இலட்சியத்திற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இலட்சியத்தில் நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை நான் நன்கு உணர்ந்து இருக்கிறேன். தெளிவாக அறிந்து இருக்கிறேன். அதன் காரணமாக கடின உழைப்பை மட்டுமே நான் நம்புகிறேன்" என்று தனது உழைப்பின் மீது ஷப்னம் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.
ஏழ்மையிலும் வளமான எண்ணங்கள் :
மலைக் கிராமத்தில் மிகவும் சிறிய கூடாரத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் வாழ்ந்து வந்தாலும், ஷப்னமின் பெற்றோர்கள், வளமான உள்ளம் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் ஆகியவற்றின் வழக்கப்படி அவர்கள் விருந்தாளிகள் வரவேற்கிறார்கள். நன்கு உபசாரிக்கிறார்கள். ஷப்னமின் தாய் கராமத் ஜாஹான், கல்வியறிவு இல்லாதவராக இருந்து வருகிறார். ஏழ்மை மற்றும் காஷ்மீரிகளின் வழக்கப்படி, பள்ளியில் சேர்ந்து அவர் படிக்கவில்லை. இளம் வயதிலேயே அவருக்கு, அவரது பெற்றோர் திருணம் செய்து வைத்துவிட்டார்கள்.
இந்த நிலையில், தன்னுடைய மகள் ஷப்னம், படிப்பில் சிறந்து விளங்குவது தங்களுக்கு மிகப்பெருமையாக இருக்கிறது என்று அவரது தாயார் கராமத் ஜாஹான் கூறி பெருமை அடைகிறார். அது இறைவனின் கருணை என்றும் அவர் கூறி மகிழ்ச்சி அடைகிறார். "காஷ்மீரில் இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். ஆனால், ஷப்னம் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதால், அவளின் விருப்பத்தின்படி பட்டப்படிப்பு படிக்க வைக்க நாங்கள் விரும்புறோம். படிப்பில் மிகப்பெரிய அளவுக்கு ஷப்னத்திற்கு ஆர்வம் இருந்து வருகிறது. அதற்காக மிகவும் கடினமாக அவர் உழைக்கிறார். இரவு 12 மணி வரை கண் விழித்து படிப்பாள். டிரால் பள்ளியில் படித்து வந்தார். 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு ஷப்னம் கால்நடையாகவே சென்று விடுவார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆர்வம் ஷப்னத்திற்கு அதிகமாக இருந்து வருகிறது. இனி ஏக இறைவனின் கருணையும் விருப்பமும் இருக்க வேண்டும்" என்று கராமத் ஜாஹான் கூறுவதைக் கேட்கும்போது பெண் கல்விக்கு எந்தளவுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஷப்னத்தின் பெற்றோர்கள் கல்வி பெறாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தும் தங்களுடைய மகளின் விருப்பதை நிறைவேற்ற அவர்கள் துடிக்கிறார்கள்.
குடும்பத்தினருக்கு பெருமை :
93 வயதான ஷப்னத்தின் பாட்டனார், குலாம் நபி போக்ரா, தன்னுடைய பேத்தியைப் பற்றி குறிப்பிடும்போது, "ஷப்னம் கடுமையான உழைப்பாளி. படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவள். இரவு ஒரு மணி வரை கண் விழித்து படிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். எப்போதும் படிப்பு படிப்பு தான். ஓய்வு என்பதே ஷப்னத்திற்கு கிடையாது. அவள் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். அதில் ஒரு மரியாதை இருக்கும். மற்றவர்களுக்கு கல்வி கற்று தருவதில் ஆனந்தம் கிடைக்கும். இந்த பகுதியில் இந்தளவுக்கு படித்த முதல் பெண் எங்கள் ஷப்னம் தான். மற்றவர்கள் இப்படி கல்வியில் ஆர்வம் செலுத்தவில்லை" என்று கூறி பெருமை அடைகிறார். ஷப்னமின் தந்தை முகமது சாதிக், மிகப்பெரிய அளவுக்கு கல்வி கற்கவில்லை. எனவே தன்னுடைய குழந்தைகள் நல்ல கல்வி பெற வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக ஷப்னம் கல்வியில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
"ஒரு குழந்தை கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும்போது, பெற்றோர்கள் முடிந்த அளவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கல்வியை சொல்லித் தர முன்வர வேண்டும். நாங்கள் ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு நிரந்தரமான பணி எதுவும் கிடைப்பது இல்லை. இருந்தும் பிள்ளைகள் கல்வி கற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியூரில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, குழந்தைகள் ஊக்குவிக்க அவர்களுடன் நான் இங்கேயே இருந்து வருகிறேன். அவ்வப்போது பாம்புராவிற்குச் சென்று கூலித் தொழில் செய்கிறேன். எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். ஒரே பெண் குழந்தை. அவள் எப்போதும் படிப்பு என்றே இருப்பாள். அதிகாலை நேரத்தில் கூட எழுந்துவிட்டு படிப்பாள். கடுமையான உழைப்பின் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வில் அவள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளாள். தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம். படிப்பு இல்லையென்றால் எதையும் நாம் சாதிக்க முடியாது. எனவே இளம் வயதில் ஷப்னத்திற்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஷப்னம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என கனவு காண்கிறாள். அந்த கனவு நிறைவேற நாங்கள் துணையா இருப்போம்" என்று ஷப்னம் காணு ம் கனவுக்கு அவரது தந்தையும் துணை நிற்கிறார்.
ஏழ்மையான சூழ்நிலை. மலைப்பகுதியில் ஒரு ஓரத்தில் வசதியில்லாத கூடாரத்தில் வாழ்க்கை. பெற்றோர்கள் மிகப்பெரிய படிப்பாளிகள் இல்லை. வாழ்க்கையில் எந்தவித வசதியும், வாய்ப்புகளும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட, ஷப்னம் சாதிக், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு காண்பது உண்மையில் காஷ்மீரிகள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். ஷப்னம் சாதிகின் இலட்சியக் கனவு நிறைவேற வேண்டும். அதன்மூலம் காஷ்மீரிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உருவாக வேண்டும். காஷ்மிரி பெண்கள், படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் சாதிக்க முன்வர வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment