"உண்மையான, சகோதரத்துவமான இந்தியாவை எனக்கு மீண்டும் தாருங்கள்"
பிரபல பாடகி உஷா உதுப் விருப்பம்...!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 11 ஆண்டுகளாக நாடு செல்லும் திசைக் குறித்து நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் உண்மையிலேயே கவலை தெரிவித்து வருகிறார்கள். உலகிலேயே மிகவும் அற்புதமான ஒரு நாட்டில், மதசார்பற்ற,. பன்முகத்தன்மை உள்ள நாட்டில், தற்போது நிலைமை வேறுவிதமாக இருந்து வருகிறது. யாருமே விரும்பாத வகையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்த நாட்டில், தற்போது மத ரீதியாக பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. அதன்படி, காரியங்களை ஆற்றி, ஆட்சியிலும் அமர்ந்து இருக்கின்றன.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முஸ்லிம்கள் மத்தியில் கவலை எழுந்துள்ள நிலையில், நல்ல உள்ளம் கொண்டவர்கள் கூட, முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வருகிறார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து பேசுகிறார்கள். எப்படி நாடு அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைந்து சென்றது என்பது குறித்தும், அதன்மூலம் நாட்டில் எப்படி சகோதரத்துவம் வளர்ந்தது என்பது குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பாடகி உஷா உதுப், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "எனக்கு அந்த பழைய, அற்புதமான, சகோதரத்துவமான இந்தியாவை மீண்டும் தாருங்கள்" என விரும்பம் தெரிவித்துள்ளார்.
உஷா உதுப்:
தமிழகத்தைச் சேர்ந்த உஷா ஐயர் உதுப் கடந்த 1947 நவம்பர் 8ஆம் தேதி பிறந்தவர். மும்பையில் ஒரு தமிழ் குடும்பத்தில்[ பிறந்த இவரது தந்தையின் பெயர் வைத்தியநாத் சோமேஷ்வர் சாமி ஐயர் ஆகும். அவர் பைகுல்லாவில் உள்ள செயிண்ட் ஆக்னஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவர் பள்ளியில் படிக்கும் போது, அவரைப் போன்ற ஒரு குரலுடன் பொருந்தாததால் இசை வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது இசை ஆசிரியர், அவரிடம் சில இசை இருப்பதை உணர்ந்து, அவருக்கு கிளாப்பர்கள் அல்லது முக்கோணங்களை வாசிக்கக் கொடுப்பார். இசையில் முறையாகப் பயிற்சி பெறாவிட்டாலும், இசை நிறைந்த சூழலில் வளர்ந்தார். அவரது பெற்றோர் மேற்கத்திய பாரம்பரிய இசையிலிருந்து ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை வரை கிஷோரி அமோன்கர் மற்றும் படே குலாம் அலி கான் உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர் ரேடியோ சிலோனைக் கேட்டு மகிழ்ந்தார்.
அவரது பக்கத்து வீட்டுக்காரர் அப்போது காவல் துணை ஆணையராக இருந்த எஸ்.எம்.ஏ. பதான். அவரது மகள் ஜமீலா, உஷாவை இந்தி கற்கவும் இந்திய பாரம்பரிய இசையை கற்றுக்கொள்ளவும் தூண்டினார். இந்த இணைவு அணுகுமுறை 1970களில் தனது தனித்துவமான இந்திய பாப் பிராண்டை முன்னோடியாகக் கொள்ள உதவியது. கோட்டயத்தின் மணார்காடு பைனும்கல் குடும்பத்தைச் சேர்ந்த ஜானி சாக்கோ உதுப்பை அவர் மணந்தார். அவரது கணவர் ஜானி சாக்கோ, ஜூலை 8, 2024 அன்று மாரடைப்பு காரணமாக இறந்தார்.
அவரது முதல் பொதுப் பாடலானது அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நிகழ்ந்தது. ஏற்கனவே இசையில் ஒரு வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருந்த அவரது சகோதரிகள், இந்தியாவின் மிகவும் பிரபலமான வானொலி அறிவிப்பாளராக இருந்த அமீன் சயானியை அவருக்கு அறிமுகப்படுத்தினர். அமீன் சயானி அவருக்கு ரேடியோ சிலோனின் ஓவல்டைன் மியூசிக் ஹவரில் பாட வாய்ப்பளித்தார். அவர் "மோக்கிங்பேர்ட் ஹில்" என்ற பாடலைப் பாடினார்.
தனது ஆழ்ந்த இசைக்குரல், பல்வேறு வகைகளில் குரல் பாடல் மற்றும் பல்வேறு மொழிகளில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு இந்திய பாடகியாக உஷா உதுப் திகழ்ந்து வருகிறார். 1970 முதல் இந்திய இசையில் ஒரு முக்கிய நபராக இருந்த இவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக 2011-இல் பிலிம்பேர் விருதையும், 2024-இல் பத்ம பூஷண் விருதையும் பெற்றவர்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழ்க்கை:
இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த உஷா உதுப், தம்முடைய வாழ்க்கைப் பயணம் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்தார். அதில் தாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் வளர்ந்த விதம் உள்ளிட்ட அம்சங்களை அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது அந்த நேர்காணலை, அவர் வார்த்தைகள் மூலம் நாமும் அறிந்துகொள்ள வேண்டும். இதோ அந்த நேர்காணல்:
"நான் முஸ்லிம்களுக்கு மத்தியில் வளர்ந்தேன். என்னுடைய அண்டை வீட்டார் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தனர். மிஸ்டர் பதான். ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தார். என்னுடைய தந்தையும் ஒரு காவல்துறை அதிகாரி தான். நான் சென்னையை சேர்ந்தவள். ஜமீலா, ஷமீம் ஆகிய அனைவருடன் நான் ஒன்றாக கலந்து வளர்ந்தேன். யூசூப் பாய் உள்ளிட்ட மற்றவர்களுடன் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம். கலந்துபேசி, உரையாடி மகிழ்ச்சி அடைவோம். ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியும் கேலி, கிண்டல் செய்தும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.
முஸ்லிம் வீடுகளுக்கு சென்று அவர்களின் கலாச்சாரம்,.பண்பாடு குறித்து அறிந்துகொள்வோம். நோன்பு எப்படி வைப்பது? தொழுகை நடத்துவது எப்படி? ஆகிய அனைத்தையும் நான் முஸ்லிம்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
சல்வார் கமீஸ் எப்படி தயாரிப்பது எப்படி? அதை எப்படி தைப்பது? என்பதையும், மற்றவர்களிடம் எப்படி பண்புடன், மரியாதையுடன் பேசுவது, நடந்துகொள்வது ஆகிய அனைத்தையும் நான் முஸ்லிம்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
முஸ்லிம்களை பார்த்து, 'பாய் சாஹிப்" என அன்புடன் அழைக்கும்போது அதில், வயது வித்தியாசம் எதுவும் இருக்காது. அந்த வார்த்தை சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பெரியவர்களை பார்த்து 'தாதா' என நான் அவர்களை அழைக்கும்போது, என் இதயத்தில் இருந்து வெளிவரும் அன்பு வார்த்தையாக அவை இருக்கும். அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். முஸ்லிம்கள் மத்தியில் வாழ்ந்தபோது நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு அற்புதமான மகிழ்ச்சியான நினைவுகள் ஆகும். என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் என் இதயத்தில் இருக்கும் நிகழ்வுகளாகும்.
சகோதரத்துவமான இந்தியா வேண்டும்:
இது தான் உண்மையான இந்தியா. அந்த இந்தியாவை நான் மீண்டும் பெற வேண்டும். அந்த இந்தியாவை நான் மீண்டும் எதிர்பார்க்கிறேன். அனைவரிடமும் சகோதர பாசம், நேசம் செலுத்தும் இந்தியா எனக்கு வேண்டும். அந்த சந்தோஷமான, மகிழ்ச்சியான இந்தியா தற்போது மெல்ல மெல்ல வேறு திசை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது. அந்த திசையில் அன்பு இல்லை. பாசம் இல்லை. சகோதரத்துவம் இல்லை. வெறுப்பு, துவேஷம், மனக்கசப்பு மட்டுமே உள்ளன. அத்தகைய இந்தியா நமக்கு வேண்டாம். நான் உண்மையான, சகோதரத்துவமான இந்தியாவை எதிர்பார்க்கிறேன். என் இளமை பருவத்தில் மட்டுமல்லாமல், நான் வளர்ந்தபோது இருந்த அற்புதமான இந்தியாவை, நான் கண்ட சிறப்பான இந்தியாவை எனக்கு மீண்டும் திருப்பிக் கொடுங்கள்"
இவ்வாறு உஷா உதுப் அந்த நேர்காணலில் விருப்பம் தெரிவித்துள்ளார். பாடகி உஷா உதுப்பின் விருப்பம் உண்மையில் நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் விரும்பும் நல்ல விருப்பமாகும். மிக உயர்ந்த ஆசையாகும். முஸ்லிம்கள் மத்தியில் வாழும்போது எப்படி, தமக்கு அன்பும் பாசமும் கிடைத்தது என்பது குறித்து உஷா உதுப் கூறிய வார்த்தைகளை கேட்கும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்திய முஸ்லிம்கள், தங்களுடைய நாடான இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் ஆவார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் சகோதரத்துவ நேசத்துடன் நடத்தும் உயர்ந்த குணம் கொண்டவர்கள். உயர்ந்த பண்புகளை கொண்ட இஸ்லாமியர்கள் குறித்து, போலியான பிம்பத்தை கொண்டு வந்து, அதன்மூலம் சகோதர சமுதாய மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் ஒரு கும்பல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த வெறுப்பை நாம் வெறுக்க வேண்டும். நமக்கு வெறுப்பு வேண்டாம். நமக்கு அன்பு தான் வேண்டும். சகோதரத்துவமான இந்தியா மலர, நாம் அனைத்து மக்களிடமும் அன்பு செலுத்தி பழக வேண்டும். பாடகி உஷா உதுப்பின் விருப்பம் நிறைவேற, அற்புதமான, சகோதரத்துவமான இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உருவாக்க வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment