நூல் மதிப்புரை
நூல் : நாயகக் கவிதைகள் 99
நூலாசிரியர் : கவிஞர் பொ.ஹஸன் பாத்திமா பீவி
வெளியீடு : பொ.ஹஸன் பாத்திமா பீவி,
இ.யூ.முஸ்லிம் லீக் மகளிரணி அமைப்பாளர்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
5/78, அன்சாரி நகர்,
கோவளம் - 603 112.
திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்.
தமிழ்நாடு, இந்தியா
செல்பேசி: 63839 08680
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் மகளிர் அணி அமைப்பாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் பெண் கவிஞர் பொ.ஹஸன் பாத்திமா பீவி, அழகிய எளிய தமிழ் நடையில் வரைந்துள்ள "நாயகக் கவிதைகள் 99" என்ற கவிதை தொகுப்பு நூலில், ஏக இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிப் புகழ்பாடும் அற்புதமான 99 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
128 பக்கங்களைக் கொண்ட இந்த கவிதை தொகுப்பு நூலில் 'கண்மணி நாயகமே' என்ற முதல் கவிதை முதல், 'நபியின் புகழ் பாடி' என்ற 99வது கவிதை வரை, ஒவ்வொரு கவிதையும் அருமை என்றே கூறலாம். குறிப்பாக, கவிதை 48-யில்
யா அல்லாஹ்...!
நீ எனக்கு வரம் கொடுத்தால்....
காற்றை மட்டும் வசம் செய்யும்
சக்தி கேட்பேன்...!
என்னிடம் நெருங்கிய....
மண்ணும் மழையும்...
உனது ஹபீபை
நெருங்காமல்...இருக்கலாம்...
ஆனால் காற்று...
என் சுவாச காற்றாய்...
மதீனத்து மன்னரின் ரவ்லாவில்...
நுழையுமே...உன் அனுமதி கொண்டு...!
என்ற கவிஞரின் வரிகளைப் படிக்கும்போது, உண்மையில் உள்ளத்தில் ஆனந்தம் ஏற்படுகிறது. மேலும், ஒவ்வொரு கவிதையையும் படிக்கும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கவிஞர் பொ.ஹஸன் பாத்திமா பீவி கொண்டிருக்கும் அன்பும், பாசமும் அழகிய முறையில் வெளிப்படுத்தும் வகையில் இருப்பதை உணர முடிகிறது.
திருச்சியில் மே 10ஆம் 2025 அன்று நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொன்விழா மற்றும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில், இந்த கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பதை அறியும்போது, உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி வாழ்த்துப் பாடல்களை, தகவல்களை அனைத்துத் தரப்பு மக்களும் படித்து அவரின் பெருமையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், எண்ணத்தில், நூலுக்கு எந்தவித விலையையும் நிர்ணயிக்காமல், அன்பளிப்பாக வழங்க முன்வந்த கவிஞர் பொ.ஹஸன் பாத்திமா பீவி மற்றும் அவரது குடும்பத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகமிக குறைவு என்றே கூறலாம்.
சிறப்பான முறையில் வெளிவந்துள்ள "நாயகக் கவிதைகள் 99" என்ற இந்த கவிதை தொகுப்பு நூலை, முஸ்லிம்கள் படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். அத்துடன், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இந்த நூல் நிச்சயம் இடம்பெற்றால், அனைத்து தரப்பு வாசகர்களும், கவிதைகளை படித்து அதன் சுவையில் மயங்க வாய்ப்பு கிடைக்கும்.
- ஜாவீத்
No comments:
Post a Comment