"நாள்தோறும் திருக்குர்ஆன் வாசிப்பு, உள்ளத்தில் ஈமானை (இறை நம்பிக்கை) மேலும் வலிமைப்படுத்தி, அழகிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும்"
ஒவ்வொரு ஆண்டும் புனித ரமளான் மாதத்தில், திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை நிதானமாக, கவனமாக ஆழ்ந்துப் படித்து, அதன் பொருளை புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். அந்த வகையில் இந்தாண்டும் (2025) புனித ரமளான் மாதம் தொடங்கிய நாளில் இருந்து, ஒவ்வொரு நாளும், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் மௌலானா அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்கள் மொழியாக்கம் செய்த 'தர்ஜமதுல் குர்ஆன் பிஅல்தஃபில் பயான்' என்ற திருக்குர்ஆனின் இனிய எளிய தமிழாக்கத்தைப் படிக்க நேரம் ஒதுக்கி, அதை தொடர்ந்து வாசித்து, 15 நாட்களில் முழு குர்ஆனையும் படித்து முடித்தேன். திருக்குர்ஆனில் ஏக இறைவன் என்ன சொல்லி இருக்கிறான்? மனித இனத்திற்காக அவன் காட்டும் வாழ்க்கை நெறி என்ன? மனித சமுதாயம் மீது ஏக இறைவன் கொள்ளும் அளப்பரிய அன்பு என்ன? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டே, திருக்குர்ஆனை மிகவும் கவனத்துடன் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படித்தபோது, ஓர் உண்மை மிகமிக தெளிவாக தெரிந்தது. புரிந்தது.
அது, திருக்குர்ஆன், உலக மக்கள் அனைவரும் நல்வழியில் சென்று, இம்மை, மறுமையின் பலன்களை அடைய, அருமையான, சிறப்பான வழிகளை மனித இனத்திற்கு காட்டுகிறது என்பதாகும். தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தனக்குள்ள உரிமைகள் என்ன? பிறருக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தாய், தந்தை, உற்றார் உறவினர்கள், அனாதைகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரிடமும் ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்கள் என்பதை திருக்குர்ஆனில் மிக அழகாக இறைவன் சொல்லி, மனிதனின் அழகிய வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டுகிறான்.
உலக மக்கள் அனைவருக்கும்:
திருக்குர்ஆன் என்பது, இறைவனின் கூற்றுப்படி, "இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை" (81:27)
இதேபோன்று, "(நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை" (68: 52) என்றும் இறைவன் சொல்லி இருக்கிறான்.
உலகத்தார் அனைவருக்கும் என்ற வார்த்தையை நாம் ஆழ்ந்து கவனிக்கும்போது, திருக்குர்ஆன், குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களுக்காக மட்டுமே அருளப்படவில்லை., வழங்கப்படவில்லை என்பதும், உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி என்பதும் தெளிவாகிறது. தற்போது இந்த வாழ்க்கை நெறிமுறையை உலகில் முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்தாலும், திருக்குர்ஆன், அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவில்லை என்பதை, ஏக இறைவனின் மேற்கண்ட வசனங்கள் மூலம் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளலாம்.
ஆக, உலக மக்களின் நல்வாழ்விற்காக, ஏக இறைவனால் திருக்குர்ஆன் மூலம் அளிக்கப்பட்டுள்ள அழகிய வாழ்க்கை நெறியை, உலக மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், ஒரு அற்புதமான வாழ்க்கையை, மகிழ்ச்சியான வாழ்க்கையை, ஆனந்தமான வாழ்க்கையை, சகோதரத்துவமான வாழ்க்கையை, மன நிம்மதியான வாழ்க்கையை, ஈகைக் குணம் கொண்ட வாழ்க்கையை, பாவத்தில் இருந்து மீளும் வாழ்க்கையை நிச்சயம் பெற முடியும். அதன்மூலம் மனித சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக எப்போதும் விளங்கும்.
ஈகைக் குணம் எப்படி இருக்க வேண்டும்:
ஒரு மனிதன் எப்படி ஈகைக் குணத்துடன் இருக்க வேண்டும் என்பதை, பல இடங்களில் அழகிய பாடத்தை திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்குச் சொல்லி தருகிறது. அல்லாஹ்வின் வசனங்களுக்கு செவி சாய்த்து கீழ்ப்படிந்து நடப்பது மனிதனுக்கு பல வகையில் பயன் அளித்து வருகிறது. அதுமட்டுமே, மனிதனை சிறந்த மனிதனாக மாற்றிவிட முடியாது. மேலும் எந்தவித பலனையும் தராது. ஓர் இறைக் கொள்கையை உறுதியாக ஏற்றுக் கொண்டு, இறைவனை வணங்கி வாழும் மனிதன், இறைவனின் அறிவுறுத்தலின்படி, மனிதர்களிடம நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் கஞ்சத்தனத்தில் இருந்து விடுபட்டு, தர்மம் செய்ய வேண்டும்,. ஈகைக் குணத்துடன் இருக்க வேண்டும். ஏழைகளை விரட்டக் கூடாது. அவர்கள் மீது கோபம் கொள்ளாக் கூடாது. அவர்களின் நிலையை உயர்த்த தேவையான அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன் காரணமாக தான் ஏக இறைவன் திருக்குர்ஆனில் "ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுடைய வசனங்களுக்குச் செவி சாய்த்து கீழ்ப்படிந்து நடந்து தர்மமும், செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள் தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்" (64:16) என்றும்,
"அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும், மிக்க சகிப்பவனும் ஆவான்" (64:17) என்றும் கூறி, தர்மம் செய்வதை ஊக்குவிக்கிறான். தர்மம் செய்வதன் மூலம் செல்வம் அதிகரிக்கும் என்றும், அது ஒருபோதும் குறையாது என்றும் மிகவும் தெளிவாக இறைவன் சொல்லி இருப்பதை படிக்கும்போது, கஞ்சத்தனம் கொண்ட மனிதன் கூட, தர்மம் செய்ய ஆவல் கொண்டு, உடனடியாக தர்ம காரியங்களை செய்ய ஆரம்பித்து விடுவான் என்று உறுதியாக கூறலாம்.
அத்துடன், ஒரு மனிதன் தர்மம் செய்வது தனக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்கக் கூடாது. அது அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக மட்டுமே இருக்க வேண்டும். அதனால், "மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்" (76:8) என்றும், "(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி " நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத் தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ, அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்) ( 76:9) என்றும், "நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒரு நாளைப் பற்றி பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்" (என்றும்) கூறுவார்கள். (76:10) என்றும், திருக்குர்ஆன் வசனங்கள், தர்மம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அற்புதமாக சொல்லிக் காட்டுகிறது.
திருக்குர்ஆன் வாசிப்பு ஈமானை அதிகரிக்கும்:
மொத்தம் 114 அத்தியாயங்கள் கொண்ட திருக்குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்து 666 வசனங்களில், மனித சமுதாயத்தின் நன்மைக்காக மட்டுமே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மனிதன் மீது ஏக இறைவனுக்கு இருக்கும் கரிசனம் மிக தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஓர் இறைக்கொள்கை முதல், மறுமை வரை அனைத்து விஷயங்களும் திருக்குர்ஆனில் மிக அழகிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளன.
பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கடல், கால்நடைகள், வானம், மலைகள், செடி கொடிகள் , காற்று, வனங்கள், நெருப்பு என இறைவனின் அனைத்துப் படை.ப்புகளையும் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்யும்படி, திருக்குர்ஆன் மனித சமுதாயத்தை ஊக்குவிக்கிறது. இவையெல்லாம் வீணாகப் படைக்கப்படவில்லை என்றும், தக்க காரணம் இல்லாமல் அதை இறைவன் உருவாக்கவில்லை என்றும் திருக்குர்ஆனை ஆழ்ந்து படிக்கும்போது நன்கு உணர முடிகிறது. தனது படைப்புகள் அனைத்தையும் நன்கு உற்று கவனித்து ஆய்வு செய்யும்படி ஏக இறைவன் மனிதனை ஊக்குவித்து, அவனை நல்வழியில் அழைத்துச் செல்ல அழகிய வழிகளை சொல்லித் தருகிறான்.
அதன் காரணமாக தான், "உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன,. (இச்சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது" (64: 15) என்று இறைவன் உறுதி அளிக்கிறான்.
இதேபோன்று, "எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். (90:9) என்றும், "எவன் அதைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ, அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்" (91:10) என்றும் அல்லாஹ் அழகிய முறையில் தனது வேதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
இதன்மூலம் ஓர் உண்மையை நாம் தெளிவாக புரிந்துகொள்ளலாம். அதாவது, திருக்குர்ஆன், உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு, அவர்கள், ஒரு உன்னதமான வாழ்க்கை நெறியைப் பின்பற்றி, சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பும் இறைவன், அந்த சிறப்பான வாழ்க்கைக்கு தேவையான வழிக்காட்டுதல்களையும் தனது திருமறையில் சிறப்பான முறையில் அடிக்கடி சொல்லி இருக்கிறான்.
பலவீனமாக படைக்கப்பட்டுள்ள மனிதன், தனது பலவீனம் காரணமாக, பாவத்தில் அடிக்கடி வீழ்ந்துவிடக் கூடிய ஒரு சோதனைக்கு ஆளாகின்றான். இந்த சோதனை மனிதனுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அத்துடன், ஷைத்தான் மனிதனை அடிக்கடி குழப்பி, மனிதன் பாவத்தில் வீழ்ந்து கிடந்து அதன்மூலம் நரக நெருப்பில் எப்போதும் நிரந்தரமாக வீழ்ந்து எரிந்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறான். எனவே தான் ஷைத்தானின் வலையில் மனிதன் சிக்கிவிடக் கூடாது. அவன் அழகிய நல்வாழ்வை வாழ வேண்டும். அதன்மூலம், இம்மையில் மட்டுமல்லாமல், மறுமையில் கூட, ஒரு சிறந்து வாழ்க்கையை மனிதன் பெற வேண்டும் என ஏக இறைவன் ஆசைக் கொள்கிறான். அதன் காரணமாக தான், அவனுக்கு குர்ஆன் மூலம் அழகிய நெறிமுறைகளை சொல்லி, அதை உறுதியாக கடைப்பிடித்தால், நிச்சயம், ஷைத்தானின் வலையில் சிக்க முடியாது என்றும் இப்படி சிக்காமல் இருக்கும் மனிதன், ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து மறுமையிலும் சொர்க்கம் என்ற உயர்ந்த இடத்தில் நிச்சயம் இறைவனின் கருணையால் இருப்பான் என்றும், மனிதன் மீது கொண்ட அன்பு, பாசம் காரணமாக இறைவன் அவனுக்கு நல்வழிகளை காட்டி இருக்கிறான்.
அந்த வகையில், மக்கீயில் இறக்கப்பட்ட, திருக்குர்ஆனின் 103 அத்தியாயம், அல்-அஸரில் உள்ள மூன்று வசனங்கள் மூலம், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும்? அதன்மூலம் அவன் அடையும் நன்மைகள் என்ன? மற்றவர்களுக்கு அவன் செய்ய வேண்டிய உபதேசம் என்ன? என்பதை மிகவும் எளிமையாக இறைவன் சொல்லி இருக்கிறார்ன்.
"காலத்தின் மீது சத்தியமாக!
(தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்துவிட்டான்.
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)
மேற்கண்ட அத்தியாயம், அல்-அஸரை திறந்த மனதுடன், ஆய்வு செய்யும் நோக்கத்துடன் படித்தால், மனிதன் தான் மட்டுமே நல்லவனாக வாழக் கூடாது. சிறந்த வாழ்க்கையை வாழக் கூடாது. மற்றவர்களும் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ விரும்ப வேண்டும். அதற்காக நன்மைகளைச் செய்து, பிறருக்கும் நல்வழியின் பக்கம் வருமாறு உபதேசம் செய்ய வேண்டும் என உணர்ந்து கொள்ளலாம்.
இப்படி திருக்குர்ஆன் முழுவதும் மனித நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அவன் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ ஏக இறைவன் வழிகாட்டுகிறான். இத்தகைய அற்புதமான வாழ்க்கை நெறியை சொல்லி தரும், குர்ஆனை நாள்தோறும் ஆழமாக, படித்து, சிந்தித்து வந்தால், மனிதனின் ஈமான் (இறைநம்பிக்கை) நிச்சயம் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஈமான் அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் பண்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு நல்லொழுக்க வாழ்க்கையை வாழ மனிதன் தன்னை தயார்படுத்திக் கொள்வான். சக மனிதனை நேசிப்பான், சக மனிதனுக்கு உதவி செய்வான். சக மனிதனை பண்புடன் மரியாதையாக நடத்துவான். கர்வம் கொள்ளாமல், தன்னிடம் இருக்கும் பொறாமை, கோபம், வசைப்பாடுதல் போன்ற பல கெட்ட செயல்களை கைவிட்டு விட்டு. சீரிய நல்ல பாதையை நோக்கி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, அதில் உறுதியாக செல்வான். இந்த பயணம் மிகவும் நம்பிக்கை உள்ள பயணமாகவும், தன்னம்பிக்கை உள்ள பயணமாகவும் இருக்கும். எனவே தான், திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து நாள்தோறும் வாசிப்பது, ஈமானை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையை மேம்படுத்தும் என்று நாம் உறுதியாக கூறுகிறோம். இது எமது அனுபவம் கூட.
கடைசியாக, இந்தாண்டு, தன்னுடைய கருணையால், ரமளான் நோன்புகளை கடைப்பிடிக்க வாய்ப்பு அளித்து, திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படிக்கக் கூடிய வாய்ப்பை அளித்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
"புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது" (37:182)
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்